கழகத்தில் இருவகை உறுப்பினர்கள் உண்டு என்பார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு வகையினர் கருப்புச் சட்டை அணிந்து, களப் பணியாற்றி, தேவைப்படும் நேரங்களில் சிறைவாசத்தையும் சிரித்த முகத்துடன் முத்தமிடும் இருபால் தோழர்கள் - இவர்கள் கண்ணுக்குத் தெரிந்த திராவிடர் கழகத்தினர்.
இன்னொரு வகையினர், கண்ணுக்குத் தெரியாதவர்கள்; கழக நிகழ்ச்சிகளில், போராட்டங்களில் நேரிடையாக ஈடுபடமாட்டார்கள். ஆனால், கழகக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள்.
தந்தை பெரியார் விதைத்த சிந்தனைகளைத் தங்கள் நெஞ்சில் வார்த்து, ‘‘பெரியார் கொள்கையே ஒரு வாழ்க்கை நெறி!'' என்று ஒழுகுபவர்கள்.
அத்தகைய ஒருவரை அடையாளம் கண்டோம்; அவர் பெயர் மானமிகு ஞா.சிவகாமி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்! அவர் பெரியார் திடலுக்கு வந்ததில்லை.
கழகத் தலைவருக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
‘‘பெருமதிப்பிற்குரிய.. மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம். அய்யா, இன்று தொலைக்காட்சியில், ‘ ‘கதையல்ல வரலாறு'' என்ற நிகழ்ச்சியில் தங்களைப்பற்றி மேலும் அறிந்தேன். மானமும், அறிவும்தான் மனிதனுக்கு அழகு. ஆனால், இன்று மானம் மழுங்கி வருகிறது. மானமில்லா அறிவு இருப்பதனால்தான் மக்களிடம் இந்த மந்த நிலை! பெரியார் ‘நச்'செனச் சொன்னார், ‘பக்தி வந்தால் புத்திப் போகும்' என்று. அய்யா தங்களை விரைவில் நேரில் சந்திக்க பெரியார் திடலுக்கு வருகிறேன்.
நீங்கள் நலத்தோடு நீடூழி வாழவேண்டும். என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘விடுதலை'க்காக மீண்டும் இத்துடன் ரூ.2000-த்திற் கான காசோலையை இணைக்கிறேன்.''
இதற்குமுன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கினார். இப்பொழுது ‘விடுதலை' வளர்ச்சிக்கு ரூ.2000 (காசோலையாக) அஞ்சல் வழி அனுப்பியுள்ளார்.
தொலைக்காட்சிகள் சில நேரங்களில் நல்லனவற்றையும் செய்வதுண்டு. அதில் ஒன்றுதான் ‘ ‘கதையல்ல - வரலாறு'' எனும் ஆசிரியரைப்பற்றியது. அதனைப் பார்த்த இவர், மேலும் உ.ந்துதல் பெற்றுள்ளார்.
‘ ‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'' என்று தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி, மானம் இழந்து மழுங்கி வாழ்பவர்களைப்பற்றி வருந்துகிறார்.
இத்தகைய நேயர்கள்தான் கழகத்தின் ஆணிவேர்! அவருக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்!
- மயிலாடன்
No comments:
Post a Comment