தந்தை பெரியார்
இன்றையத் தினம் இந்த ஊரிலே திராவிடர் கழகக் கட்டடம் கட்டப்பட்டதைத் திறப்பதன் காரணமாக இக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இக்கட்டடத்தைக் கட்டுவதற்கு சுமார் 10, 12 வருஷமாக முயற்சி மேற் கொள்ளப்பட்டு இப்போது கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டடத்திற்கு சுமார் ரூ 2000க்கு மேல் செலவாகி இருக்கிறது. நமக்கும் பங்கு இருக்கட்டுமே, என்று ஒரு சிறு தொகையை நானும் கொடுத்திருக் கின்றேன். நம் கழகத்திற்கு இது போன்று 5000, 10,000 50,000 பெறும் படியான கட்டடங்கள் பலவும், ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை உள்ள கட்டடங்கள் சிலவும் இருக் கின்றன. இவற்றில் பல வாடகைக்கு விடப்பட்டு இருக்கின்றன. சிலவற்றில் கழகக் காரியங்கள், படிப் பகங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இவ்வளவு பெருகுவ தற்குக் காரணம் இது சர்வாதிகாரக் கழகமானதால் முடிந்தது; ஜனநாயகக் கழகமாக இருந்தால் ஆளுக்கு ஆள் பங்கு போட்டுக் கொண்டு போய் இருப்பார்கள். நம் இயக்கமானது, இந்நாட்டில் 100க்கு 99 மக்கள் நம்பிக் கடைபிடித்துக் கொண்டிருக்கும் காரியங் களுக்கு எதிராகக் கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம், தருமம் ஆகியன இல்லை என்று, 40 ஆண்டு காலமாகச் சொல்லிக் கொண்டு வருவ தாகும். இப்படிப் பிரசாரம் செய்து வருகின்ற இதன் தலைவர்கள் இதுவரை கொல்லப்படாமல் இருப்பது அதிசயமேயாகும். நமக்குத் தெரிய நம் கண்முன் நடந்ததைச் சொல்கிறேன். இந்த ஆட்சி மத சம்பந்தமற்றதாக இருக்க வேண்டும் என்று ஒரு வார்த்தை சொன்னதற்காகவே காந்தி கொல்லப்பட்டார். பொதுவாக சீர்திருத்தக் காரியம் செய்ய வந்த அனைவரும் கொலை செய்யப்பட்டே வந்திருக்கின் றனர். புராண காலம் தொட்டு, சரித்திர காலம் தொட்டு, இன்றும்கூட சீர் திருத்தவாதிகள் கொல்லப்பட்டே வந்திருக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டில் புத்தரும், சமணரும் அறிவுப் பிரச்சாரம் செய்து, மக்களை அறிவுவாதிகளாக்கப் பாடுபட்டனர் மக்கள் தங்கள் அறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும். அவர் சொன்னார், இவர் சொன்னார், மிக நீண்டகாலமாக இருந்து வருகின்றது என்பதற்காக, எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்துச் சரியென்று பட்டால் அதன் பின் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். இதன் காரணமாகவே அவர்கள் பார்ப்பனரால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்றனர், கழுவேற்றப்பட்டு இருக்கின்றனர். இன்றைக்கும் கூட மதுரை, காஞ்சீபுரம், போன்ற பெரிய கோயில்களில் சமணர்களைக் கழுவேற்றி யதைத் திருவிழாக்களாகக் கொண்டாடிக் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில் மட்டும் தான் சீர்திருத்தவாதிகளுக்கு இந்த நிலை என்பது கிடையாது.
பெரும் அறிவுள்ள நாடான அமெரிக்க நாட்டில், அய்ந்து கோடி மக்களின் ஓட்டு களைப் பெற்று ஜனாதிபதியான கென்னடி- சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று பாடுபட்டதற்காக சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாம் ஒருவர் தான்- நம் இயக்கம் ஒன்று தான்- சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு 40 ஆண்டு காலம் எந்த ஒரு சிறு பலாத்காரமும் இன்றி வளர்ந்து கொண்டு வருகின்றது என்றாலும், இன்னமும் நாம் செய்ய வேண்டிய காரி யங்கள் நிறைய இருக்கின்றன. நாம் முதன் முதல் பார்ப்பன வெறுப்பை மக்களிடையே ஏற்படுத்தினோம். நம் இயக்கப் பிரசாரத் திற்குப் பிறகு சகலமும் பார்ப்பன ஆதிக்கத் திலிருந்து போய் மிகக் குறைந்து போய் விட்டதோடு, சமுதாயத்தில் அவர்களுக் கிருந்த பெரும் அந்தஸ்து போனதோடு, இன்று பார்ப்பான் இந்நாட்டை விட்டுத் தானே போனால் போதும் என்றாகி விட்டது. இன்று சமுதாயத்தில் பார்ப்பான் தனியாக நின்று, எதிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இப்படி எல்லாத் துறை களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கமானது இன்று ஒழிக்கப்பட்டு விட்டது.
சரித்திரம் தோன்றிய காலம் முதல், அரசாங்கம் தோன்றிய காலம் முதல், சூத்திரன், பார்ப்பானுக்குத் தொண்டு செய்ய வேண்டியது; படிக்கக்கூடாது, பணம் சேர்க்கக் கூடாது, வீடுகட்டக் கூடாது சாஸ்திரத்தைக் காதால் கூட கேட்கக் கூடாது என்றிருந்தது. இது நேற்று வரை- இந்த ஆட்சி வருகிறவரை இருந்து வந்த ஆட்சி முறையாக இருந்தது. இவர்கள் ஆட்சி ஏற்பட்ட பின்தான் அது அடியோடு மாறிற்று.
நம்முடைய இயக்கத்தின் முதல் கொள்கையும், முடிவான கொள்கையும், ஜாதி ஒழிய வேண்டும் என்பதேயாகும். அதற்காக எந்தப் பாதகமான செயலையும் செய்யலாம்; கொலை கூடச் செய்யலாம்; எப்படி என்றால் பார்ப்பான் எப்படித் தன் தருமத்தைக் காப்பாற்றிக் கொள்ள, எந்த அதருமத்தையும் செய்யலாம் என்கின் றானோ, அதுபோல நம்முடைய இழிவை கீழ் ஜாதித்தன்மையை, மாற்றிக் கொள்ள நாம் எந்த அதருமத்தையும் செய்வது தவறு கிடையாது.
நேற்று, பத்திரிகையில் பார்த்தேன்; பஞ்சாலையைத் திறக்க வேண்டும் என்ப தற்காக நூற்றுக்கணக்கான பேர்கள் ரயி லைக் கவிழ்க்கச் சென்று கைது செய்யப் பட்டு இருக்கின்றனர். நாளைக்கு இவர் களை விடுதலை செய்து விடுவார்கள். ஆந்திராவில் மொழி வழி பிரிய வேண்டும் என்பதற்காகப் பல அரசாங்க அலுவலகங் களுக்குத் தீயிட்டுக் கொளுத்தி இருக்கின் றனர், பல பஸ்களுக்குத் தீவைத்து இருக் கின்றனர். சாதாரணக் காரியங்களுக்கு இப்படிக் கிளர்ச்சிகள் செய்யும் போது, நாம் நம் இழிவை, மானமற்றத் தன்மையைப் போக்கிக் கொள்ள கிளர்ச்சி செய்வது, பலாத்காரத்தில் ஈடுபடுவது பெரிய தவறு ஒன்றுமில்லை. அவை எல்லாவற்றையும் விட மனிதனின் மானம் மிக உயர்ந்தது; அதற்காக உயிரைக்கூடக் கொடுப்பது தவறாகாது.
இந்த நாட்டில் மனிதன் தாழ்ந்தவனாக, சூத்திரனாக, பார்ப்பானுக்கு எதனால் இருக்கிறான் என்றால், கடவுளால், மதத்தால் தான். மத ஆதாரங்களைப் பார்த்தால் கடவுள் தான் சூத்திரனை உண்டாக்கி இருக்கிறான், தீண்டத்தகாதவனை உண் டாக்கி இருக்கிறான், பார்ப்பானை உண் டாக்கி இருக்கின்றான். அதோடு மட்டுமல்ல. பின்பற்றுகின்ற மதப்படியும் நீ பறையன், சூத்திரன், பார்ப்பானாக்கி இருக்கின்றான். கிறிஸ்துவன் உன் மதத்தைப் பின்பற்றுவது கிடையாது, நீ வணங்குகின்ற கடவுளை வணங்குவது கிடையாது. துலுக்கன் உன் மதத்தைப் பின்பற்றுவது கிடையாது, நீ வணங்கும் கடவுளை வணங்குவது கிடை யாது. ஆனதால், அவனிடம் பறையன். சூத்திரன், பார்ப்பான், இல்லை. இந்து மதத்தைப் பின்பற்றுவதால் தான் இந்துக் கடவுள்களை வழிபடுவதால் தான் நீ சூத்திரனாகின்றாய். அவற்றை விட்டுவிட்டு என்று நீ வெளியேறுகின்றாயோ, அன்று தான் மனிதனாக முடியும்.
மதிப்பிற்குரிய கணேசன் அவர்கள் ஜாதி ஒழிய சில வழிகளைச் சொன்னார். அவர் சொன்ன அது மட்டும் போதாது, அது ஜாதியை ஒழிக்காது. வேண்டு மானால், சமுதாயத்தை ஒன்றாக்கலாம்; முதலியார், ரெட்டியார், கவுண்டர், அகமுடையார், கள்ளர் என்பதில் கலப்பு மணம் செய்து கொள்வதால் நம் சூத்திரத்தன்மை நீங்கிவிடாது. நாம் முதலியாரை, செட்டியாரைப் பார்த்தால் குளிப்பது கிடையாது. அவர்கள் ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடாமல் இருப் பது கிடையாது. அந்தஸ்தில் பேதம் பாராட்டப்படுவது கிடையாது. சமமாகவே பாவித்துப் பழகி வருகின்றனர்.
சிலர் சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டு ஜாதி ஒழிய வேண்டும் என்றால், எப்படி ஒழியும்? இந்தக் கோயில்களைக் கட்டியதே ஜாதிகளைக் காப்பாற்ற வேண் டும் என்பதற்காகத் தான். சட்டத்திலே மாறவேண்டும். தீண்டாமை கிடையாது; கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம் யார் வேண்டுமானாலும் சாமி சிலையைத் தொடலாம்; பூசை செய்யலாம் என்றாக வேண்டும். அப்போது தான் ஜாதி ஒழியும்- தீண்டாமை ஒழியும்.
நாம் பல ஆண்டுகாலம் மக்களிடையே இருக்கிற இழிவு மானமற்றத் தன்மை ஆகியவற்றை எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்து பார்த்தாகி விட்டது. இன்னமும் மனிதன் மாறவில்லை. நம் பிரசாரத்திற்கு இருக்கிற விளம்பரத்தைவிட ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற பிரசாரத்திற்கு விளம்பரமும், பணக்காரர், பத்திரிகைக்காரர் ஆதரவும் இருப்பதால், நம் பிரசாரம் பரவ முடியா மல்- மக்களிடையே சொல்ல முடியாமல் இருக்கின்றது.
இனிக் காரியத்தில் இறங்க வேண்டும்; கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். அப் போது தான் நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடியும். அதற்கு நம் மக்கள் தயாராக இருக்க வேண்டும். நம்மைத் தவிர இதை எடுத்துச் சொல்லவோ, இதற்காக கிளர்ச்சியில் ஈடுபடவோ, வேறு எவருமே கிடையாது. நம் இழிவைப் பற்றிக் கவலை காங்கிரசுக்கு இல்லை; ஜனசங்கத்துக்கு இல்லை; சுதந்திராவுக்கு இல்லை; இங் கிருக்கிற கம்யூனிஸ்ட்டுக்கும் இல்லை. நம் இயக்கம் ஒன்றுதான் இதற்காக உயிருக்குத் துணிந்து, எதிர்ப்புகளுக்கிடையே தொண்டாற்றிக் கொண்டு வருகின்றது.
(27.5.1969 அன்று ஒரத்தநாடு வட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற் பொழிவு)
(விடுதலை, 18.6.1969)
No comments:
Post a Comment