கொள்கைத் தலைவரே எங்கள் குடும்பத் தலைவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

கொள்கைத் தலைவரே எங்கள் குடும்பத் தலைவர்!



வழக்குரைஞர் பா.மணியம்மை
மாநில மகளிர் பாசறை, திராவிடர் கழகம்

திராவிடர் கழகத்தின் தலைவர் - என்றும் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்களின் 90ஆம் பிறந்தநாள் விழாவில் அவரை வாழ்த்தி எழுதுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். 

இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் அரசியலின் தொடக்கமே ஆசிரியர் அவர்களை மய்யமிட்டே தொடங்குகிறது என்றால் அது மிகையாகாது. அவரது அறிக்கைக்காக அரசியல் தலைமைகளும், ஊடகங்களும் காத்துக் கிடப்பது கண்கூடு.

களத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆசிரியரின் சுறுசுறுப்பும் செயல்பாடும் என்றும் வியப்புக்குரியன.

ஒன்றிய அரசு வெளியிட்ட 'நீட்' குறித்த செய்தி வெறும் ஒரு பெட்டிசெய்தியாக மட்டுமே ஆங்கில 'இந்து' பத்திரிகையில் வந்தது. அதைப் பார்த்ததுமே அது குறித்த ஆசிரியரின் அறிக்கைக்குப் பிறகே தமிழ்நாடெங்கும் போராட்டம் வெடித்தது. இன்றைய அரசு அதற்கு விலக்கு வேண்டும் என்பது வரை கொண்டு செல்லும் அளவுக்கு மாற்றியது. 

அந்த அளவிற்கு ஆசிரியரின் சமூகநீதிப் பார்வை நீண்ட நெடியது. அதற்கான சிறிய உதாரணத்தைக் குறிப்பிட்டேன்.

ஆசிரியர் என்ற வார்த்தை பள்ளிக் காலங்களில் நமக்கு அறிமுகமாகியிருக்கலாம். நமக்குப் பயிற்றுவிப்பவரை நாம் ஆசிரியர் என்கிறோம். எனக்கோ பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த பிறகும் ஆசிரியர் என்ற வார்த்தை காதில் கேட்டுக் கொண்டே இருக்கும். அதற்கு என் அப்பா பாலன் தான் காரணமாவார். ஆசிரியர் அங்கே பேசுறார், ஆசிரியர் இங்கே ஆர்ப்பாட்டம் பண்றார், ஆசிரியர் இன்று விடுதலையில் இதைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்

நேரில் பார்ப்பதற்கு முன்னரே நெஞ்சில் பசுமரத்தில் அறைந்த ஆணிபோல் நிலைத்து தடயமாய் நின்றுவிட்ட வார்த்தை ஆசிரியர். பள்ளி, கல்லூரி என்று படித்து முடித்த பிறகு பெரியார் திடலில் "குடிஅரசு" தொகுப்புப் பணிக்காக நுழைந்த போதிலிருந்து பிரமித்துக் கேட்ட ஆசிரியர் என்னும் சொல்லுக்கு உரியவரைத் தினமும் பார்த்து - பேச - பழக வாய்ப்பு கிடைத்தது என்பது பெரும் பேறு!

இன்றும் ஆசிரியரைப் பற்றிச் சொல்ல அவருடன் பயணம் செய்தவர்களுக்கு வேண்டுமானால் சொல்லுவதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சம்பவங்கள் இருக்கலாம். ஆனால், என்னைப் போன்ற முதல் தலைமுறை பட்டதாரியாக கல்லூரி நுழைந்து, அதன் பிறகு சட்டம் படித்து, வழக்குரைஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றுகிற போது ஏற்படுகிற தடங்கல்கள், சிக்கல்கள் எதுவாக இருந்தாலும் அதிலிருந்து மனதளவில் மீள நான் மனதில் நிலைநிறுத்திக் கொள்கிற வார்த்தை ஆசிரியர் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.

பரபரப்பாய் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட் டங்களுக்குக் கலந்து கொள்ளச் செல்லும் போதுகூட, எங்கேயாவது நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்தால், "மணியம்மை எப்படி இருக்க? இந்தப் புத்தகம் படிச்சியா? உடல்நலம் எப்படி இருக்கிறது?" என்று விசாரிக்கும்போது, அவர் என் மீது வைத்துள்ள அக்கறையும் நலம் விசாரிப்பும் என்றென்றும் புத்துணர்ச்சியான மனநிலைக்கு என்னை ஆட்படுத்தும்.

இன்றைய காலகட்டத்தில் மனுஸ்மிருதி குறித்து பரவலாக சர்ச்சைகள் குறித்துப் பேசப்படுகிறது. அதைப் பற்றி நான் ஒரு யூடியூப் சேனலில் பேசுகிறேன். அதைப் பார்த்த ஆசிரியர் " என்ன மணியம்மை மனுஸ்மிருதியைப் பற்றிப் பேசுவதில் எக்ஸ்பர்ட் ஆகிடுவ போல, "பழைய பதிப்பை வாசிக்காதே, புதியதை வாசி, அதில்தான் பிரித்து வாசிக்கத் தகுந்தாற்போல் இருக்கிறது" என்று என்னை வழிநடத்தினார் - இன்றும் என்றும் என்னை வழிநடத்துகிறார். அதனால் தான் அவர் என் கொள்கைத் தலைவர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். ஏதோ நல்வாய்ப்பாக நான் மட்டுமே என் வீட்டில் நோயால் தாக்கப்படாமல் தனிமைப்பட்டு இருந்தேன்; அப்போதைய என் மனநிலை என்பது மன அழுத்தத்தின் உச்சம்; அந்த அளவுக்கு தனிமை வாட்டியபோது எனக்கு வந்த செல்போன் அழைப்பு என்ன வந்தாலும் பார்த்துக்கலாம் என்கிற உந்து சக்தியாக இருந்தது. அது நமது தமிழர் தலைவராம் ஆசிரியரின் அழைப்பு தான். என் குடும்பமே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, ஊரடங்கில் எங்குமே போக முடியாத சூழலில், ஆசிரியர் என்னிடம் அலைபேசியில் பேசிய வார்த்தைகள்தான் எனக்கு மிகப்பெரிய  ஆறுதல் - தேறுதல் மருந்தாக அமைந்தன. அவரின் நேர்மறையான வார்த்தைகள் தான் என்னை அரவணைத்தது, உற்சாகப்படுத்தியது, மீட்டெடுத்தது.

2015ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாட்டில் உள்ள பெண் ஆளுமைகள் கலந்து கொள்ளும் விழா ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டது. அதற்கான வேலைத் திட்டம் போய்க் கொண்டிருந்த பரபரப்பான சூழலில், என் தங்கை ஆனந்தியின் இணையேற்பு நிகழ்வை அய்யா பிறந்தநாளில் உங்கள் தலைமையில் தான் நடத்த வேண்டுமெனக் கேட்டோம். "கடைசி நேரத்தில் கேட்கிறயே" என்ற ஒற்றை வார்த்தையைச் சொன்னவர், அடுத்த நிமிடமே "சரி போய் அதற்கான வேலையைக் கவனியுங்கள்" என்றார். 

விழா மேடையிலேயே என் தங்கை ஆனந்தியின் சுயமரியாதைத் திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. 

அதனால்தான், ஆசிரியர் எங்கள் குடும்பத் தலைவர்.

No comments:

Post a Comment