தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - இவ்வாண்டு மிகவும் நேர்த்தியுடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது.
இவ்வாண்டு நடைபெற்ற விழாவின் தனிச் சிறப்பே - இளைஞர்கள் பெரும் அளவில் திரண்டு வந்து தலைவரை வாழ்த்தியதும் வணக்கம் தெரிவித்ததுமேயாகும்.
இயக்கம் இளைஞர்களின் எழுச்சிப் பாசறையாகப் பரிணமித்து மலர்ந்து நிற்பதை நேரில் கண்ட தலைவருக்கு மட்டற்ற மகிழ்ச்சிப் பெருக்காகும்.
குமரி முதல் திருத்தணிவரை தோழர்கள் திரண்டு வந்தனர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், முன்னணியினரும் சமுதாய இயக்கங்களைச் சேர்ந்த எண்ணிறந்தவர்களும் காலை முதல் அலை அலையாகத் திரண்டு வந்து தலைவரைச் சந்தித்தனர் - வாழ்த்தினர். நன்கொடைகளும் 'விடுதலை' சந்தாக்களுமாக வழங்கி மகிழ்ந்தனர்.
குருதி உறவுகளைவிட கொள்கை உணர்வு மேலானது என்று சொல்லுவது வெறும் வார்த்தையழகல்ல - உண்மை உணர்வின் வெளிப்பாடு என்பதைக் காண முடிந்தது.
வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் தோழர்கள் வருகை தந்ததும் குறிப்பிடத் தகுந்ததாகும்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் - சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர் பெரு மக்களும் தலைவர் ஆசிரியர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து அகம் - புறம் மகிழ்ந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
முதல் அமைச்சர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் "திராவிட மாடல்" அரசுக்குப் பல வகைகளிலும் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருப்பதை எடுத்துக்காட்டி, ஆசிரியர் அய்யா நூறாண்டும் கடந்து வாழ வேண்டும்" என்று குறிப்பிட்டது - குறிப்பிடத் தகுந்ததாகும்.
பிறந்த நாளுக்கு முதல் நாள்கூட போராட்டக் களத்தைச் சந்தித்து வந்தவர்தான் ஆசிரியர். முதல் அமைச்சர் அதனையும் நேற்று மாலை சென்னைக் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் குறிப்பிட்டார்.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தடுப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் முடக்கும் ஆளுநரைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம்தான் அது.
தனது பிறந்த நாள் செய்தியில்கூட தலைவர் ஆசிரியர் போராட்ட உணர்வினை வெளிப்படுத்தினார்.
"பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெடுக்கும் பணிக்கு இளைஞர்களே சுடர் ஏந்தி வாருங்கள்!" என்று போர்க் களத்திற்கு அழைப்பு விடுத்துள்ளாரே! பிறந்த நாள் என்றால் படாடோபம், பட்டாசு சத்தம், ஆடம்பரம் என்று அமர்க்களப்படுவதைத் தான் நாடு கண்டு இருக்கிறது.
திராவிடர் கழகத் தலைவருக்கு நடத்தப்பட்ட பிறந்த நாள் விழாவோ கொள்கை வயப்பட்டது - எதிர்கால சந்ததிகளைப் பற்றியது; நாட்டைக் கவ்விக் கபளீகரம் செய்ய வாயைப் பிளக்கும் மதவாத முதலைகளின் மூச்சை அடக்கும் முற்போக்குக் கொள்கைக்கான முழக்கமாகவே தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதனால்தான் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை 'சுயமரியாதை நாள்' என்று இலட்சிய முத்திரையைப் பொறித் துள்ளோம்.
மாலையில் சென்னைக் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய அத்தனைக் கட்சித் தலைவர்களும் ஆசிரியர் அவர்களை வெறும் வார்த்தை ஜாலங்களால் பாராட்டு மழையில் குளிப்பாட்டவில்லை.
மாறாக நாட்டைச் சூழ்ந்து நிற்கும் மதவாத அபாயம் - மீண்டும் மனு தர்மம் கோலோச்சினால் ஏற்படும் பார தூர விளைவுகள் பற்றியும், அவற்றினை வீழ்த்திட இன்றைக்கு மூத்த தலைவராக இருக்கக் கூடிய திராவிடர் கழகத் தலைவர் வழிகாட்ட வேண்டும் என்பது தான், ஆசிரியர் பிறந்த நாள் விழாவின் மய்யப் புள்ளியாக இருந்தது.
ஆசிரியரின் பணிகளைப் பார்க்கும் பொழுது 'இவருக்கா தொண்ணூறு வயது?' என்று மலைக்கும்படி இருக்கிறது என்று தலைவர் பெரு மக்கள் கூறியது உண்மையிலும் உண்மை!
89 வயதிலும் குமரி முதல் திருத்தணி சென்னை வரை சூறாவளித் தொடர் பயணத்தை மேற்கொள்ளவில்லையா?
இவ்வாண்டுப் பிறந்த நாள் செய்தியில்கூட ஜனவரி முதல் தொடர் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளாரே!
2024இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதவாத பிற்போக்கு ஆட்சியை வீழ்த்தவில்லை என்றால் ஏற்படும் அபாயத்தைச் சுட்டிக் காட்டியுள்ளாரே!
அரசியலில், தேர்தலில் ஈடுபடாத திராவிடர் கழகம் 2024 மக்களவைத் தேர்தலைப் பற்றிக் கவலைப்படுவதை- மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிடுவதைத் தலைவர்கள் எல்லாம் எடுத்துக் காட்டினார்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்பது கொள்கை முழக்கப் பெரு விழா - சவால்களைச் சந்திப்பதற்கான உணர்வை ஊட்டும் ஒப்பற்ற விழா - எதிர்காலத்தில் முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து கடமையாற்றுவதற்கான அழைப்புக் கொடுக்கும் இலட்சிய இணையற்ற விழா என்றே கூற வேண்டும்.
ஒன்றிணைவோம்
போராடுவோம்!
வெற்றி பெறுவோம்!!
வாழ்க பெரியார்!
வாழ்க ஆசிரியர்!
வெல்க திராவிடம்!
No comments:
Post a Comment