"அர்ச்சகர்களுக்கான பயிற்சியை அய்ந்து ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைத்தது தமிழ்நாடு அரசின் தவறான செயலாகும். அதேபோல் அரசின் பதவிக் காலத்தை அய்ந்து ஆண்டில் இருந்து ஓராண்டாகக் குறைக்க முடியுமா என்று வினா எழுப்புகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அய்ந்தாண்டுகள் அர்ச்சகர் பயிற்சி என்பதை ஓராண்டாக தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது. இதனால் பூஜைகளின் முக்கியத்துவம் குறைந்து விடும் என்று ஆன்மீகவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோயில்களில் உள்ள ஆகம விதிப்படி பூஜைகள் செய்யும் முறைக்கான பயிற்சியில் திடீரென மாற்றம் கொண்டுவருவது சரியல்ல. கோவில்களின் பாரம்பரிய நடைமுறை பூஜை நசிந்து போகும். தமிழ் பண்பாடும் சிதைந்து போகும் - யாரை வேண்டுமானாலும் சுவாமிக்கு பூஜை செய்ய அமர்த்தி வழிபாட்டு முறையை சிதைத்து, பாரம்பரியத்தை அழிக்கும் எண்ணத்தை செயல்படுத்தப் பார்க்கிறது திமுக அரசு. இதை அனைத்து ஆதினங்களும், பண்பாட்டை காக்கும் ஹிந்து இயக்கங்களும் தடுத்து நிறுத்த வேண்டும். உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் மக்களை ஒன்று திரட்டி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்" என்று அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கை வெளியாகி உள்ள அதே தினமலரில் 'இது உங்களிடம்' என்ற பகுதியில் ஒரு கடிதம் வெளியாகி உள்ளது. வேத மந்திரங்களை துல்லியமாக ஓராண்டில் படித்து தேர்ச்சி பெறுவது என்பது சாத்தியமான ஒன்று அல்ல. அர்ச்சகர் பயிற்சி சிகை அலங்கார பயிற்சி போன்றதும் அல்ல என்று அந்தக் கடிதத்தில் கிண்டலாக கேலியாக எழுதப்பட்டுள்ளது.
"பிற மத விவகாரத்தில் தலையிட அஞ்சும் திராவிட மாடல் அரசு ஹிந்துக்களின் பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றிலும் ஹிந்து மத சம்பிரதாயங்களிலும் அடிக்கடி தலையிடுவது சரியல்ல. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஹிந்து மத சடங்குகளை அரசு மாற்ற நினைப்பதும் வேதனை அளிக்கிறது" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?
இந்தக் குழுவில் சைவ - வைணவ சமயங்களைச் சேர்ந்த நிபுணர்களும் அடங்கியுள்ளனர். அந்தக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது என்ன? "ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அவற்றை நன்கு அறிந்தவர்கள் தான் பூஜை செய்யலாம் என்பது ஆகம விதி."
ஆனால், தற்போது கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களில் பெரும்பாலானவர்கள் அதற்கான பயிற்சி பெற்றவர்கள் அல்லர். பெரும்பாலான பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் சாதாரணமாக பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அர்ச்சனை செய்ய தேவையான 108 நாமாவளிகள் மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர்.
மிகப்பெரிய கோயில்களில்கூட ஒரு சில அர்ச்சகர்கள் மட்டுமே ஆகம பயிற்சி பெற்றவர்கள் அல்லது ஆகமம் பற்றிய அறிவு பெற்றுள்ளனர். சென்னை கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோயில், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் போன்ற பெரிய கோயில்களில் கூட பணிபுரியும் அர்ச்சகர்களில் மிகச் சிலரே அனைத்து பூஜை முறைகளையும் அறிந்துள்ளனர். கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் நாலு அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந்துள்ளன. மற்றவர்களுக்கு சில மந்திரங்களின் வரிகள் மட்டுமே தெரியும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. அய்ந்து ஆண்டு பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. இவர்களில் 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள். தந்தையார் செய்யும் பூஜை முறைகளைப் பார்த்து பெற்ற அனுபவத்தை மட்டுமே கொண்டவர்களை முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்தவர்கள் என்று சொல்ல இயலாது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 வைணவ கோயில்களில் 30 கோயில்களில் உள்ள அர்ச்சகர்களுக்குத் தான் ஆகம விதிகள் தெரிந்துள்ளன என்று நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆதின கர்த்தர்களும் தினமலர் போன்ற கூட்டமும் அய்ந்து ஆண்டுகள் படித்தால் தான் ஆகம விதிகளை துல்லியமாக தெரிந்து அர்ச்சனை செய்ய முடியும். ஆனால் தமிழ்நாடு அரசோ பயிற்சியை ஓராண்டாக குறைத்து ஆகம விதிகளுக்கு முரணாக விதிகளையும் பண்பாட்டையும் அழித்து வருவதாக குற்றம் சுமத்துகிறார்கள். அதற்காக போராடுவதாகவும் அறிவித்துள்ளனர். இதனை பார்க்கின்ற பொழுது பார்ப்பனர் அல்லாதார் ஓராண்டுக்கு மேல் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டது. பார்ப்பனர்களுக்கு அதிர்ச்சியை தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆண்டாண்டு காலமாக கோயில் பூனைகளாக இருந்து சுரண்டிய - கர்ப்பக் கிரகத்திற்குள் தாங்கள் மட்டுமே போக முடியும், பூஜை செய்ய முடியும் என்ற மேலாதிக்க பார்ப்பன திமிரின் மீது விழுந்த இடியாக இதனை கருதுவதால் இதனை எதிர்த்து கூக்குரல் போடுகிறார்கள். எல்லா இடங்களிலும் தங்களுக்கே உரிமை என்று இருந்த இடத்தில் பார்ப்பனர் அல்லாதார் பணியாற்ற உரிமைகள் வந்த நிலையில் பார்ப்பனர்கள் அலறுகிறார்கள்.
கோயில் கருவறைகளில் மட்டும் பார்ப்பனருடைய ஆதிக்கம் எதேச்சாதிகாரமாக முழுமையாக இருந்து வருகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் தன்னுடைய இறுதிப் போராட்டமாக அறிவித்து மக்கள் மத்தியிலே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். இப்பொழுது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஆணை பிறப்பித்து அனைத்து ஜாதியிலிருந்தும் 56 அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தங்கள் ஆதிக்கம் பறி போகிறதே என்கின்ற ஆற்றாமையால் - ஆதிக்க வெறியால் அலறுகின்றனர்.
மற்ற விஷயங்களில் ஹிந்துக்களே ஒன்று சேருங்கள் என்று குரல் கொடுக்கும் இந்தக் கூட்டம் - தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டோர்களையும் ஹிந்து என்று கருதினால் அவர்கள் ஹிந்து கோயில்களில் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராவதை வரவேற்க வேண்டும் அல்லவா? இதனை பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மையான மக்கள் புரிந்துகொண்டு திராவிட மாடல் அரசு பிறப்பித்துள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையை வரவேற்க வேண்டும். இதனை எதிர்க்கும் சக்திகளைப் புறங்காட்டி ஓடச் செய்ய வேண்டும்! தயாராவீர்!!
No comments:
Post a Comment