மணக்கும் இனிக்கும் மலர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

மணக்கும் இனிக்கும் மலர்

தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (3)

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

நேற்றைய தொடர்ச்சி...

உச்சநீதிமன்ற நீதிபதி, குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங்கின் நெகிழ்ச்சி உரை, தமிழர் தலைவர் கி.வீரமணி கலங்கரை விளக்கமாய் நூறாண்டு கடந்து வாழ்க எனும் வைகோவின் வாழ்த்து, உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வி.இராமசாமி குறிப்பிடும், ‘தந்தை பெரியாரின் கொள்கைப் பிடிப்பு, சமூகநீதிக்கு எதிரான போராட்டத்தில் வீரமணி அய்யாவின் வாக்குவாதம் வரலாறு படைக்கும் மற்றும் கே.எம்.காதர் மொகிதீன் கருத்துரை காண்கிறோம்.

ஓய்வறியா உழைப்பாளி ஆசிரியர் கி.வீரமணி என மனந்திறந்து பாராட்டுகிறார் இந்திய பொதுவு டமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். 

அதே வேளையில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் ‘ஆசிரியருக்கு வயது தொண்ணூறா என வியக்கிறார். ‘ஆசிரியருக்கு அகவை தொண்ணூறு’ விழா அவருக்கான தனிப்பட்டதல்ல. கொள்கைக்கு எடுத்திடும் பெருவிழா என்கிறார்.

பேராசிரியர் சுப.வீ.

பேராசிரியர் சுப.வீ. எப்போதும் ஆசிரியரின் செல்லப் பிள்ளை- அன்புக்குழவி எனலாம். ஆசிரியரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். திராவிடர் கழகம் நடத்தும் போராட்டங்களானலும் கூட்டங்களானாலும் ஆசிரியர் அழைப்பு எனில் தட்டாமல் வருபவர்.

ஆசிரியருக்கு அணுக்கமானவர் என்பதால் அவர் கருத்துக்கு ஒரு தனி இடம் உண்டு எனலாம் அல்லவா!

“முந்தைய காலங்களையெல்லாம் விட இன்றைக்கு மதவெறிச் சக்திகள் நாட்டில் நஞ்சை விதைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போது காவிக்கு எதிரான ஒரு கருஞ்சட்டைப் படை மிக மிகத் தேவையாக இருக்கிறது. அந்தப் படைக்குத் தலைமை தாங்கவும் அதனை வழி நடத்தவும் ஆசிரியருக்கு இணையான இன்னொரு வரை நம்மால் பார்க்க முடியவில்லை” என்பது அவருடைய அனுபவ உரை, அசல் உரை. “இன்னும் அவரை யாரும் கைப் பிடித்து அழைத்துச் செல்வதில்லை. அவர்தான் இளைஞர்களை எல்லாம் கைப் பிடித்து நடத்திச் சென்று கொண்டிருக்கிறார்’’ என்கிறார்.

முரசொலி செல்வம்

திராவிட இயக்க வரலாற்றில் பத்திரிகை உரிமைக்காகச் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்ட ஒருவர் எனில் முரசொலி செல்வம் ஒருவர்தான். கலைஞரின் மருமகனான அவர் கையில் முரசொலி ஏடு ஏறு நடை போட்டது.

தலைவர் கலைஞர் முதலமைச்சராய் இருந்த காலங்களில் பல சமுதாய சீர்திருத்தச் சட்டங்களையும் சமூக நீதியை உருவாக்கிடும் திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றிய முழு மனத் திருப்தியில் வந்த உடன் அதுகுறித்து ஆசிரியர் வீரமணி என்ன கருத்து அறிவித்துள்ளார் என்று அறிந்திட ஆர்வம் காட்டிடுவதை அவர் அருகில் இருந்து அறிந்த புதிய செய்தியைக் கூறுகிறார். ஆசிரியரின் 46ஆம் வயதில் கலைஞர் எழுதியதைத் தேடிப் பிடித்து நினைவு கூர்கிறார்.

எப்போது தெரியுமா? ஆசிரியர் 75 வயதை நிறைவு செய்த காலகட்டத்தில் அவரின் 46 வயதை நினைவு கூர்ந்து கலைஞர் எழுதியிருக்கிறார் என முரசொலி செல்வம் வாயிலாக அறிகிறோம். பேரறிஞர் அண்ணா ஆசிரியரைத் திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் எனப் பாராட்டியதைக் குறிப் பிட்டார் கலைஞர் எனவும் அறிகிறோம்.

மாண்பமை நீதிபதி இராஜா

மிக நுட்பமாக நீதிபதி ஆசிரியரை உற்று நோக்கியுள்ளார் என்பதை அவர் வாழ்த்தின் தொடக்கம் வழிமொழிகிறது. “பெண்களுக்கு உயர் கல்வியை அளிக்க அதுவும் உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கென்றே ஒரு தனி பொறியியல் கல்லூரியை வல்லத்தில் 1988ஆம் ஆண்டு பெரியார் மணியம்மை பெயரிலேயே நிறுவி 20 ஆண்டுகளாகக் கல்விப் பணியை ஆற்றி 2007இல் பல்கலைக்கழகமாக உயர்ந்து சிறப்பாகப் பெண்களுடைய வாழ்வு மலர சமுதாயப் பணி செய்து வருகின்ற சுயமரியாதை இயக் கத்தின் முதுகெலும்பு ,சிந்தனைச் சிற்பி, சமூகநீதிக் காவலர், பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி ஆசிரியர் அவர்கள் என ஆசிரியரின் மறுபக்கச் சாதனையான கல்விச் சாதனையை நீதிபதி சுட்டிக் காட்டுவதே அவருடைய மகுடத்தின் வைரக்கல்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்பு. மேல் பட்ட வகுப்புப் பயின்று முதல் வகுப்பில் தேறியதுடன் தங்கப் பதக்கமும் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவப் பருவ வாழ்க்கை குறித்து ஆசிரியர் ஒரு புத்தகமே எழுதலாம். தந்தை பெரியாரை வியப்பு அடையச் செய்தது இவருடைய பேராசிரியரான பார்ப்பனர் எஸ்.பி.அய்யர் இவருக்கு வழங்கிய ‘நடத்தைச் சான்றிதழ்’ ஆகும்.  அண்ணாமலை பல்கலைக்கழக வாழ்க்கையின் ஒரு பகுதியும் பிற மாணவர்களுடன் இவர் அமர்ந்துள்ள ஒளிப்படமும் இன்றைய ஆசிரியரோடு நோக்கு கையில் வேடிக்கையாகவும் வியப்பாகவும் உள்ளன.

 விடுதலை மலர்கள், ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்முகங்கள் குறிப்பிடத் தகுந்தவை.  சுவையானது. ஆசிரியரின் தமிழ்நாட்டுத் தலைவர் களுடனான படங்கள், இந்தியத் தலைவர் சமூகநீதிப் போராளிகளுடனான படங்கள் வரலாறு பேசுகின்றன. தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் கட்டுரை, தமிழ் முரசு ஆசிரியர் வை.திருநாவுக்கரசுவின் ‘நான் பெரிதும் மதிக்கும் இனிய நண்பர் கி.வீரமணி. எங்கள் தொடர்பு மிகப் பழைமையானது’ என்று குறிப்பிட்டு  வாழ்த்துவதைக் காண்கிறோம்.

கவிஞர் கலி.பூங்குன்றன், 'ஆசிரியரின் அணுகு முறை... பெரியாரைத் துணைக்கோடல்’ என வரலாற்றுச் செய்திகளை வகையாக அளிக்கின்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த பேராசிரியர் அ.இராமசாமி விடுதலை ஆசிரியர் பெற்ற டாக்டர் பட்டம் குறித்த அறிமுகத் தொகுப் புரையை அளித்துள்ளார்.

திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆசிரியர் தந்தை பெரியாரின் தத்துவ வழித் தோன்றல் எனச் சான்றுகளுடன் பகர்கிறார். ஆசிரியர் வீரமணி குறித்த ஆய்வாளர் ஆசிரியர் பெரியாரியல் பரப்பிய சீடர் என விளக்கிக் கட்டுரை வரைந்துள்ளார். இக்கட் டுரையாசிரியர் “90இல் 60 பெருமகன்” எனும் தலைப் பில் ஆசிரியரின் தனித்த சிறப்புகளைத் தொகுத் தளிக்கிறார்.

அக்னிக் குஞ்சு

‘அக்னிக் குஞ்சொன்று கண்டேன் ஆங்கோர் பொந்தினில் வைத்தேன்’ என்ற பாரதியின் பாடல் வரிகளில் வரும் ‘அக்னிக்குஞ்சு’ என்பதை ‘இவர் ஓர் அக்னிக்குஞ்சு’ எனக் குமுதம் பார்வையில் பட்டிருக்கிறார்.

“எனக்கு மாமனார் வீடு ஜெயில்தான்! புது மாப்பிள்ளை சபதம்‘ என்று இந்திய சட்ட எரிப்புப் போராட்டம் நடக்கப்போகிறது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஜெயிலுக்குப் போவோம்‘ என மணம் முடித்த கையோடு கூறியதை 8.12.1958 ‘தினத்தந்தி’ வெளியிட்டுள்ளது.

‘தொண்ணூறாம் அகவையைத் தொடும் தொண்டறத் தலைவர்’ என்னும் தஞ்சை பெ.மருதவாணன் படைத்த ‘தமிழர் தலைவர் உரையிலிருந்து சில துளிகள்’ எனப் பெரியார் தி.சாக்ரடீசு அளிக்கும் துளிகள்.

கவிஞர்களின் கவிதைகள், தமிழர் தலைவருக்கு வழங்கிய ஊர்திகள் பற்றிய தகவல். திரு. ராய் பிரவுன் எழுதிய கடிதம், ஆசிரியரின் 50 கைதுகள் பற்றிய தகவல்கள், தலைவர் மேல் கெட்ட மதியினரின் கொலைவெறித் தாக்குதல்கள், ஆசிரியரின் அயல்நாட்டுப் பயணங்கள், ஆசிரியரைப் பற்றி ஆடிட்டர் அர.இராமச்சந்திரன் தகவல்கள், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு, ‘பெரியார் தந்த சொத்து வீரமணி’.  அமெரிக்காவிலிருந்து சோம.இளங்கோவன் தீட்டியுள்ள ‘வாழ்த்தி மகிழ்வோம்’ எனும் வாழ்த்து, வழக்குரைஞர் அ.அருள்மொழியின் ‘ஆசிரியர் எனும் காலப்பெட்டகம், மு.ந.மதியழகனின், ‘ஆசிரியர் கற்பித்த அறிவு நாணயம். புலவர் பா.வீரமணியின் ‘கீதையின் மறுபக்கம்‘ எனும் ஆசிரியரின் திறனாய்வு குறித்து சலிப்பில்லா உழைப்பாலும் சமூகப் பொறுப்பிலும் உருவான நூல் விமர்சனம். ஜாதி ஒழிப்புக் களத்தில் தமிழர் தலைவர் செதுக்கிய கல்வெட்டுகள் எனக் கவிஞர் கலி.பூங்குன்றனின் படைப்பு என அள்ள அள்ளக் குறையாத கட்டுரைச் செல்வங்கள் - கட்டுரை மணிகள், கட்டுரை முத்துக்கள்.

ஒவ்வொருவரும் ரோஜா மலரின் இதழ்கள் ஒவ் வொன்றையும் போல் மணக்கச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் விரித்துரைக்க ஆசைதான். ஆனால், இடம் போதாது.

மொத்தத்தில் படங்கள், கட்டுரைகள் ஆங்காங்கே விதைத்த துணுக்குகள் என ஒரு வரலாற்று ஆவணத்தை ஆக்கியவர்கள் பாராட்டுக்குரியவர்கள் - இது ஆசிரியர் பற்றிய புதையல். 

(முற்றும்)


No comments:

Post a Comment