பேராசிரியர் பத்மசிறீ டாக்டர் அ.இராஜசேகரன்
ஆசிரியருடன் உங்களின் முதல் சந்திப்பு?
ஆசிரியர் கி.வீரமணி எனக்கு பள்ளிப் பருவத்திலேயே அறிமுகமானவர். கடலூர் எஸ்.பி.ஜி. பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். நான் சாதாரணமான மாணவர். அவர் அப்போதே எல்லோருக்கும் அறிமுகமானவர். அந்த மாணவப் பருவத்திலிருந்து எனக்கும் அவருக்குமான நட்பு இன்றும் தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஓர் இணையான வயதோடு சேர்ந்து பயணமாகிறோம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் அறிவியல் பாடம் எடுத்துப் படிக்கும்போது, அவரும் அறிவியல் பாடத்தை எடுத்தார். பின் அதில் படம் வரைவதற்கு விருப்பமின்றி, அதை விட்டு பொருளாதாரத்தை (ஹானர்ஸ்) படித்தார். அதில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகவும் வந்து ‘கோல்டு மெடல்’ பெற்றார்.
நான் மருத்துவம் படிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிக்கையில் அவர் பிராட்வேயில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். அதிலும் சிறப்புறத் தேர்ச்சி பெற்றார். அப்போதும் எங்களுக்குள் நட்பு தொடர்ந்தது. என்னை பெரியாரிடமும் அறிமுகப்படுத்தினார். என் குடும்பத்தில் அனைவரிடமும் அவருக்கு நல்ல பழக்கமுண்டு. எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவரைப் பார்க்கின்றனர். மக்கள் பணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம். நானும் பெரியார் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். அப்போது அவரிடம் அதிகம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆசிரியருடன் தொடர்பில் உள்ள நீங்கள் அவரிடம் உள்ள சிறப்பியல்பு பற்றி கூறுங்கள்?
ஆசிரியர் கி.வீரமணி மற்றவர்களை மதிப்பவர். எல்லோரையும் அனுசரித்துப் போகும் குணம் கொண்டவர். எல்லோரையும் உற்சாகப்படுத்தி அவர்களை வேகம் பெறச் செய்வார். பெரியார் திடல் மேலும் மேலும் உயர்ந்து வருவதற்கு அவருடைய விடா முயற்சியே முக்கியக் காரணம். எல்லோரிடமும் நல்ல தொடர்பு கொண்டவர். அவரைப் பற்றிக் கூற வேண்டிய முக்கியமான செய்தி அவர் உண்மையானவர். நேரில் ஒன்றும் மறைவில் ஒன்றுமாய் பேசும் தன்மையில்லாதவர். எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். பெரிய அரசியல் பதவியில்லாத நிலையிலும் பல அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியாக இயங்குகின்ற ஆற்றல் கொண்டவர்.
நீங்கள் மருத்துவர்; ஆசிரியர் மக்கள் பணி செய்து வருகிறார். அவருடைய பணியைப் பற்றி கூறுங்கள்?
நான் மருத்துவத் துறையில் சாதனையாளர் எனில், ஆசிரியர் மக்கள் தொண்டில் சிறப்புச் செய்து வருகிறார். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை ஊக்கப்படுத்தி அவர்களை மேலே எழச் செய்வதில் ஆசிரியரின் பணி போற்றக்கூடிய ஒன்று. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த யாராவது அய்ஏஎஸ், அய்பிஎஸ் ஆனால், அவர்களை பெரிய அளவில் கொண்டாடுவார். எந்தவிதமான அரசு ஆய்வு ரிப்போர்ட் வந்தாலும் அதை உடனே படித்து, அதிலுள்ள சாதக, பாதகங்களை எடுத்து அறிக்கை எழுதும் அவரது பணி மக்கள் வியந்து போற்றக்கூடியதாகும்.
பெரியாருக்கும் ஆசிரியருக்குமான தொடர்பு பற்றி?
பெரியாருக்கு இருக்கும் சிறுநீரக பிரச்சினையில் அவருடன் முழுநேரமும் ஆசிரியர் இணைந்து பணியாற்றினார். அந்த நேரத்தில் அவருக்கு முழு பக்கபலமாகச் செயல்பட்டவர் ஆசிரியர் மட்டுமே! சில நேரங்களில் வலி தாங்க முடியாமல் பெரியார் கத்தவும் செய்வார். இருப்பினும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பொதுக்கூட்டம் எனில், அங்கு சரியாகச் சென்று கூட்டத்தில் கலந்து கொள்ளும் குணம் கொண்டவர். இதற்கு முழுத் துணையாய் இருந்தவர் ஆசிரியர். ஆசிரியர் மேல் தந்தை பெரியாருக்கு நல்ல புரிதலும், நம்பிக்கையும் இருந்தது.
ஆசிரியர் ‘மனிதநேய வாழ்நாள் சாதனை விருது’ பெற்றது பற்றி உங்களின் உணர்வு?
அமெரிக்க மனிதநேய சங்கம் தந்தது போல இன்னும் ‘100’ விருதுகள் அவருக்குச் சேரவேண்டும். அவருக்கு விருது வாங்குவதில் பெரிய ஈடுபாடு இல்லை. மக்களுக்குத் தொண்டு செய்வதையே அவருடைய பணியாக செய்கிறார். விருது கொடுக்க சிலர் முன்வந்தபோதும் அதனை அவர் தவிர்த்துமிருக்கிறார். விருதுகள் அவருக்குப் பொருட்டல்ல.
ஆசிரியருக்கான பிறந்த நாள் வாழ்த்தாக நீங்கள் கூற நினைப்பது?
ஆசிரியர் செய்துவரும் தொண்டறப் பணி பாராட்டிப் போற்றத்தக்கது. ஆசிரியருக்கும் எனக்குமான தொடர்பு தினமும் நடக்கும். மக்கள் நலனுக்காக ஈடுபடவேண்டிய நிலையில் எங்கள் தொடர்பு இருக்கும். எங்கள் குடும்பத்தில் ஒரு நண்பர் ஆசிரியர். அவருடைய துணைவியார் மோகனா அம்மையாரும் எங்களிடம் குடும்ப முறையில் நட்புக் கொண்டவர். அவர்களிருவரும் இன்னும் நீண்ட நாள்கள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.
இடஒதுக்கீடு விஷயத்தில் அம்மையார் ஜெயலலிதாவுடன் சேர்ந்து அவருக்கு வழிகாட்டியாக 69% இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்தார். அதனை அரசமைப்புச் சட்ட 9ஆம் அட்டவணையில் இணைத்து யாரும் எதுவும் செய்ய முடியாதபடி புத்திக் கூர்மையோடு செயல்படுத்தச் செய்த பெருமை கொண்டவர் ஆசிரியர். டெல்லியில் பெரியார் மய்யம் அமைக்க ஆசிரியரோடு இணைந்து பணியாற்றியுள்ளேன். அவருடைய தொண்டு இன்னும் சிறக்க வேண்டும்; அதற்கு அவர் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன்.
(உண்மை - டிசம்பர் 1-15, 2018)
No comments:
Post a Comment