"நீயே உனக்கு என்றும் நிகரானவன்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

"நீயே உனக்கு என்றும் நிகரானவன்"

புலவர் பா. வீரமணி

திராவிடர் கழகத் தலைவர், விடுதலை நாளித ழின் ஆசிரியர், நம் சமுதாய வழிகாட்டி, ஓய்வறியா உழைப்பாளி நம் ஆசிரியர் 2.12.2022 இன்று 90ஆம்  வயதில் அடியெடுத்து வைக்கிறார். மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் பகல், இரவு என்று பாராது அயராது உழைப்பவர்தான் நம் ஆசிரியர். நாடு நகரங்களில், சிற்றூர்களில் மட்டும் அல்லாமல் தெருக்களிலும், சந்து பொந்துகளிலும் ஊடுருவி உள் நுழைந்து அறிவொளியை, பகுத்தறிவை, சமூகநீதியை, அரசியலைச் சூரிய கதிரைப் போல் ஒளி பாய்ச்சி வருபவர்தான் நம் ஆசிரியர். இப்பெரும் பணியை, அரும்பணியைத் தம் எட்டு வயது முதற் கொண்டு இப்போது (82 ஆண்டுகளாக) வரை தொடர்ந்து ஆற்றி வரலாற்றைப் படைத்தவர் தான் தம் ஆசிரியர். இவரைப் போல் ஒருவரைத் தொண்டு உலகில் நம்மால் பார்ப்பது அரிது. மிக அரிது. தலைவர்களுள் சிலர் பேச்சாளர்களாக இருப்பார்கள்; சிலர் எழுத் தாளர்களாக இருப்பார்கள்; சிலர் சிந்தனையாளராக இருப்பார்கள்; சிலர் செயலூக்கம் கொண்ட வழி காட்டிகளாக இருப்பார்கள்; எனினும் இந்நான்கு திசைகளிலும் ஒருவராக சிறந்து விளங்குபவர்தான் நம் ஆசிரியர். இத்தனை ஆற்றல் வாய்ந்த நம் ஆசிரியரைச் சங்கத்  தமிழ்த் தொடர் கொண்டு "தொல்லானை நல்லாசிரியர்" என்றே மகுடம் சூட்டலாம். இந்த மகுடத்திற்கு மணிமொழிக்கு உரியவர்தான் நம் பெருமைமிகு ஆசிரியர்.

நம் ஆசிரியர்க்கு யாருக்கும் கிடைக்காத பல பேறுகள் கிடைத்துள்ளன. அப்பேறுகள் கிடைப்பது அரிதினும் அரிதாகும். தொண்ணூறை எட்டும் இந்நன்னாளில் அவற்றை நினைத்துப் பார்ப்பது இன்றியமையாதது. காரணம், அவை மலரும் நினைவுகளாக நம் நெஞ்சில் மலர்ந்து நம்மை மேன்மேலும் ஊக்கப்படுத்தும், அவருக்கும் உரம் சேர்க்கும், வலு ஊட்டும். அவற்றை ஓரளவு நோக்குவோம். ஆசிரியர் தம் எட்டு வயதிலேயே மேடையேறியவர். அதனால் அவரை நம் பேரறிஞர் அண்ணா" நம் கால ஞானசம்பந்தன்" என்றார். விடுதலை நாளேடு நெருக்கடி மிக்க கால கட்டத்தில் இருந்தபோது அதனை மீட்டெடுக்க தந்தை பெரியார், அப்பொறுப்பை நம் ஆசிரியரிடத்தில் ஒப்படைத்தார். ஒப்படைத்ததோடு மட்டுமின்றி "விடுதலையின் ஏகபோக உரிமையை வீரமணியிடம் ஒப்படைக்கிறேன்" என்றார். அத்துடன் அவரது தோளைப் பற்றித் தந்தை பெரியாரே அவரை ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்தார். இப்படி தந்தை பெரியாரின் பாராட்டையும், பேரன்பையும் பெற்றவர் வேறு எவரும் இலர். இவை போன்ற பல பேறுகளைப் பெற்றவர்தான் ஆசிரியர். அன்று ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்த ஆசிரியர், விடுதலையை இன்றுவரை சிறப்பாக   நடத்தி வருவதுடன், விடுதலையில் தனது 50 ஆம் ஆண்டின் பயணத்தைத் தொடர்ந்து விடுதலைக்கு 50,000 சந்தாக்களைச் சேர்க்க வைத்ததும் இப்போது இவ்விதழில் அவர் பொறுப்பேற்று, 60ஆம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு 60,000 சந்தாக் களைச் சேர்க்க முயன்று வருவதும் சாதாரணமானது அன்று; அது சாதனை மிக்கது. மேலும், ஒரே இதழில் தொடர்ந்து 60 ஆண்டுக் காலமாக ஆசிரியராகத் தொடர்வதும் அரும் சாதனையாகும். அதுவும், சினிமாச் செய்திகள், சோதிடத் தகவல்கள், வேண் டாத செய்திகள் சிறிதும் இல்லாமல், பகுத்தறிவு, அறிவியல் முற்போக்குச் செய்திகளுடன் தொடர்ந்து இதழ் வெளிவருவது ஆசிரியரின் மகத்தான பணிக்கு எடுத்துக்காட்டாகும். பகுத்தறிவு, இன மானம், சமூக நீதி, அறிவியல் பார்வை ஆகிய வற்றுடன் விடுதலை நாளிதழ் மானுட விடு தலையைக் கொணர முயன்று வருவது ஆசிரியரின் தன்னேரில்லாத பணியை அடையாளம் காட்டுவ தாகும்.

ஆசிரியர் இவற்றுடன் நின்றாரா? இல்லை. பம்பரமாகச் சுற்றுகிறார். காற்றாக இயங்குகிறார். கனிவு காட்ட வேண்டிய இடத்திலும் கனிவையும், கனல் காட்ட வேண்டிய இடத்தில் கனலையும் காட்டி வருகிறார். அவர் ஓர் ஆற்றல் சால் மறவர்; ஒரு துறையில் அன்று; பல துறைகளில் இயங்குகிறார். இதழ்களில் கட்டுரைகளை வரைகிறார்; நூல்களை எழுதுகிறார். மேடைகளில் முழங்குகிறார்; கல்லூரி களிலும், பல்கலைக் கழகங்களிலும் பொழிவுகளைப் பொழிகிறார். போராட்டங்களில் குதிக்கிறார்; மறியல் களில் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கிறார்.  கொள் கைகளைப் பரப்புகிறார். அரசியல் கட்சிகளிடையே கூட்டணியை உருவாக்குகிறார்; அவற்றின் உறவை மேம்படுத்துகிறார். தலைவர்களுக்குத் திசைக்காட் டியாக விளங்குகிறார். இடையிடையே உலக நாடு களுக்குப் பறக்கிறார். உலக நூலகங்களில் நுழை கிறார். சிந்தனைகளைத் திரட்டுகிறார். கிழக்கிற்கும் மேற்கிற்கும் பாலம் அமைக்கிறார். அதன் வழி அறிவைப் பரப்புகிறார். இவை எல்லாவற்றையும் உடையவர்தான் நம் ஆசிரியர். ஆசிரியர் என்னும் சொல்லுக்கு முழு அர்த்தத்தை உணர்த்துபவர்தான் நம் ஆசிரியர். ஆசிரியரின் இத்தகுதிகளை அறிந்துதான் அமெரிக்க நாட்டின் மனிதநேயர் சங்கத்தின் சார்பில் 20.9.2019 அன்று மானமிகு ஆசிரியருக்கு மனிதநேயச் சாதனையாளர்(Humanist life time award) விருது வழங்கப்பட்டது.

நம் ஆசிரியரின் மாந்தநேயத் தொண்டு அளப்பரியது; பெருமை கொண்டது. சமூகநீதிக்கு ஆபத்தா? இடஒதுக்கீட்டுக்குத் தடையா? நீட் தேர்வு ஆபத்தா? கேடுள்ள தேசிய கல்விக் கொள்கையா? பெண்ணுரிமைக்குச் சிக்கலா? முத்தலாக் கொடுமைச் சட்டமா?

மதமாற்ற தடைச் சட்டமா? மாற்றுத் திறனாளி களுக்கு முட்டுக்காட்டையா? மூன்றாம் பாலினத் தவர்க்குக் கொடுமையா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமை மறுப்பா? மொழிக்கும் இனத்துக்கும் ஆபத்தா? அனைத்திலும் போராடுகிறார் - வாகை சூடுகிறார். இங்குச் சிலவற்றை எண்ணிப் பார்ப்பது சிறந்தது. இப்போதைய ஒன்றிய அரசு கொண்டு வந்த தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து ஆசிரியர் ஜனவரி 2020 முதல் அம்மாதத்தின் 30ஆம் தேதிக்குள் அதா வது 11 நாள் வரை தமிழ் நாட்டின் முக்கிய இடங் களில் பரப்புரை செய்தது. மறக்க முடியாதது. இப்பரப்புரையில் அக் கொள்கையால் ஏற்படும் ஆபத்துகளை ஆசிரியர் நன்கு வெளிப்படுத்தி மக்களைத் தெளிவு படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. மற்றும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வழி நடத்தும் கூட்டணி வெற்றி பெற 18.3.2021 முதல் ஏப்ரல் இறுதி வரை விளக்கப் பிரச்சாரம் செய்தது என்றென்றும் மறக்க முடியாதது. அக்கால கட்டத்தில் கரோனா  அச்சுறுத்திக் கொண்டிருந்தபோதும், அவரது உடல் நிலை நலிந்திருந்தபோதும்; தமிழ் இனத்தின் வெற்றிக்காக அவர் சுழன்று சுழன்று பரப்புரை செய்து மக்களின் ஆதரவைத் திரட்டியது மறக்கவொண்ணாதது. அப்போது தி.மு.க. அணி வெற்றி பெற்றது என்றால், அதற்கு ஆசிரியரின் பங் களிப்பு ஈடற்றது. இவற்றைப் போன்றே, ஒன் றிய அரசின் நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியர் 14.4.2022 முதல் 25.4.2022 வரை அனல் வீசும் பிரச்சாரம் செய்தது (41 நாட் கள்) வரலாற்றுச் சாதனையாகும். மருத்துவக் கல் விக்கு முட்டுக் கட்டையை உரு வாக்கி தமிழ் மாணவர்களின் முன்னேற்றத் தினைத் தடுக்கும் நீட் தேர்வை எதிர்த்து அவர் செய்த பிரச்சாரம் வரலாற்றுச் சாதனை கொண்ட தாகும். இவ்வாறு ஆசிரியரின் பணி ஒன்றா? இரண்டா? இல்லை; இல்லை பற்பல; எங்கெங்கு கேடும் ஆபத்தும் முளைக் கின்றனவோ அங்கெல்லாம் களத்தில் இறங்கிப் போராடும் போராளிதான் நம் ஆசிரியர். அதுவும், அவர் உடல்நலம் குன்றியிருந்த போதும் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது, சமுதாயத்திற் காகப் போராட உள்ளார். இதுதான் அவரது பொது நலப்பண்பு. இதுதான் அவரது கொள்கை.

"துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை" - (குறள் 669)

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப நாளும் உழைப்பவர் தான் நம் ஆசிரியர். இப்போது சொல்லுங்கள் - அவர் ஓர் ஆற்றல் மறவர்தானே! ஆசிரியர் இப்பணிகளோடு மட்டும் நின்றாரா? இல்லை. தந்தை பெரியார் அறக்கட்டளையை நிர்வகித்துக் கொண்டே அதன் சார்பில் இயங்கும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள், மருத் துவமனைகள், பல்கலைக் கழகம் ஆகியவற்றை எல்லாம் நன்முறையில் இயக்கிக் கொண்டு அத் தனை பணிகளையும் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார், எனில் அவரது ஆற்றலை என்னவென்று விளம்புவது? இதனால்தான் அவரது ஆற்றலை எண்ணிக் கவிதை வடித்த கவிஞர் கலி. பூங்குன்றன்   அக்கவிதைக்கு "ஓர் ஆச்சரியக் குறி" எனும் தலைப் பிட்டுள்ளார். உண்மையில் அவர் ஆச்சரியத்தின் ஆச்சரியமே ஆவார். அக்கவிதையைச் சற்று நோக்குவோம்.

"இது ஒரு கின்னஸ் சாதனைதான்

கேட்பவர்கள்

ஆச்சரியக் குறியாக நிற்கிறார்கள்

ஓர் ஏட்டுக்கு

அறுபதாண்டு ஆசிரியரா?

ஆச்சரியக் குறியின் அசல்வேர் அதுதான்!

இன்னொரு ஆச்சரியம்!

"வீரமணியிடம் விடுதலை ஏட்டை

ஏகபோகமாக ஒப்படைக்கிறேன்"

இப்படிச் சொன்னவர்

ஈரோட்டு ஏந்தல் என்றால்

ஆச்சரியக் குறிக்கே ஆச்சரியம்!

ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியங்கள்

அணி வகுக்கின்றன

கழகத்தை மட்டுமா வழி நடத்துகிறார்?

திராவிட மாடல் அரசுக்குத்

திசையெங்கும் ஒளி ஏற்றுகிறார்

எளிமையின் உருவத்தில்

இத்தகு சேனையின் வலிமையா?

இவ்வாறு விரிகிறது அக்கவிதை. ஆசிரியரின் அயராத உழைப்பை எண்ணி, கவிஞர் ஆசிரியரை "ஓர் ஆச்சரியக் குறி" என்று குறிப்பிட்டிருப்பது ஆசிரியருக்கு மட்டுமின்றிக் கவிதைக்கே அழகு சேர்க்கிறது. ஆசிரியரின் பற்பல பணிகளை ஆழ்ந்து  எண்ணும்போது, பாரதியாரின் பாட்டு அடிதான் நினைவுக்கு வருகிறது. அதாவது பாரதியார் ஓரிடத்தில் "யாதுமாகி நின்றாய்" என்றார். நம் ஆசிரியரும் "யாதுமாகி நின்றவரே" ஆவார். 

பொது மக்களுக்கு எளிமையாக ஆசிரியரின் ஆற்றலை அடையாளம் காட்ட வேண்டும் என் றால், கவியரசு கண்ணதாசன் பாடல்தான் பொருத்த மானது. "பலே பாண்டியா" என்ற திரைப்படத்தில், கண்ணதாசனின் பாடலைப் பாடும் இசையரசு டி.எம். சவுந்தரராஜன் "நீயே என்றும் உனக்கு நிகரானவன்" என்று அருமையாகப் பாடுவார். அப்பாட்டின் அடையாளமும் அருமையும்தான் நம் ஆசிரியர். தொண்ணூறு அகவையை எட்டும் நம் ஆசிரியர் மேலும் உடல் நலத்துடன் நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறோம்.

ஆசிரியர் வாழ்க! அவர் பணிகள் வெல்க!

"The strongest man upon in the Earth

he who stands alone"     - IBSEN

No comments:

Post a Comment