புரட்சிப் பெரியார் திரட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

புரட்சிப் பெரியார் திரட்சி!

கவிஞர் பெரு.இளங்கோவன்

ஆசான் பெரியார் பாசறை தன்னின்

ஏசாச் சிறப்புடை ஆசிரியர்!

பேசா நாள்பிற வாநாள் என்னும்

மாசிலாத் தொண்டர் ஆசிரியர்!


பெரியார் கொள்கை உலகெலாம் பரப்பும்

பேரறி வாளர் ஆசிரியர்!

அரிதாய் மண்ணிற் பிறந்திம் மானுடம்

திருந்திட உழைக்கும் ஆசிரியர்!


பத்தில் தொடங்கி ஒன்பது பத்திலும்

பணிதொடர்ந் தாற்றிடும் ஆசிரியர்!

வித்தாய் செடியாய் தருவாய் வளர்ந்தே

வியன்பலன் நல்கிடும் ஆசிரியர்!


பெரியார் தம்மை உலகம் முழுதும்

தெரிந்திடச் செய்யும் ஆசிரியர்!

சிறுக னூரிலே பெரியார் உலகம்

நிறுவும் நேர்த்தியர் ஆசிரியர்!


அநீதி எங்கே எவர்க்கென் றாலும்

ஆர்த்தெழும் அரிமா ஆசிரியர்!

மனுநீதி ஓர்குலத் துக்கொரு நீதியை

மாற்றிடப் போரிடும் ஆசிரியர்!


சிறுவர் படித்து மகிழ்ந்திடச் செய்யும்

'பெரியார் பிஞ்சு' ஆசிரியர்!

பெறுவதெல் லாம்பெரி யார்க்கே என்னும்

பெருந்தொண் டறக்கொடை ஆசிரியர்!


எழுத்து பேச்சு அறிக்கை யாவிலும்

இனநலன் குறிகொள் ஆசிரியர்!

விழுதாய் ஊன்றி தாய்ப்பெரி யார்தமை

விண்ணுற உயர்த்திடும் ஆசிரியர்!


திராவிட மணியார் தேடிக் கொடுத்த

தெள்ளொளி வைரம் ஆசிரியர்!

இராதென நினைத்தோர் நெஞ்சினைப் பிளந்த

இருடியப் பாரை ஆசிரியர்!


மனுமுறை புகுத்திட முனைந்திடு வோர்தம்

மனப்பால் தகர்க்கும் ஆசிரியர்!

அணுஅணு வாகவே ஆரிய மாயையை

அம்பலத் தேற்றும் ஆசிரியர்!

கொலைவெறித் தாக்குதல் மிரட்டல் எதற்கும்

நிலைகுலை யாதவர் ஆசிரியர்!

மலைபோல் நிமிர்ந்தே மண்ணாங் கட்டியர்

குலைதனை உலுக்கும் ஆசிரியர்!


இழிச்சொல் பழிச்சொல் வசவுகள் யாவுமே

எமக்கவை உரமெனும் ஆசிரியர்!

கழிசடை ஆரியர் கனவுகள் தகர்க்கும்

கடும்புயல் விரைஞர் ஆசிரியர்!


கெடுதலைத் தடுக்கப் பெரியார் அளித்த

கேடய 'விடுதலை' ஆசிரியர்!

அடுபகை முடித்திட அய்யா சுவட்டில்

அடிபதித் தொழுகிடும் ஆசிரியர்!


கண்ணைப் போன்ற பெரியார் அளித்த

'உண்மை' இதழின் ஆசிரியர்!

மண்ணின் உரிமைக் குரலைக் கிளப்பும்

மாமணி ஒலியாம் ஆசிரியர்!


எண்ணித் துணிந்தே காரிய மாற்றும்

இயல்புடை சீலர் ஆசிரியர்!

என்றும் எங்கும் எதிலும் பெரியார்

என்றே இயங்கும் ஆசிரியர்!


அறுபத் தாண்டுகள் 'விடுதலை' தனக்காய்

அளித்துத் தாங்கிடும் ஆசிரியர்!

செறுபகை முடிக்கும் பெரியார் நெறியைச்

செலுத்திடும் இயக்க ஆசிரியர்!


வாழ்வில் மானுடம் சிறப்புற் றோங்கிட

வழிவகை கூறிடும் ஆசிரியர்

வாழ்வியல் சிந்தனை முத்து களாக்கி

வழங்கி மகிழ்வுறும் ஆசிரியர்!


விருதும் புகழும் எத்துணை வரினும்

பெரியா ரால்எனும் ஆசிரியர்!

கருத்தில் புத்தியில் தந்தை தந்ததைக்

கட்டளை யாய்க்கொளும் ஆசிரியர்!


புரட்சிப் பெரியார் திரட்சியாய் விளங்கிப்

பொறுப்புகள் சுமக்கும் ஆசிரியர்!

புரட்சிக் கவிஞரின் பாவினில் விளங்கும்

பெறும்பே றடைந்த ஆசிரியர்!

No comments:

Post a Comment