கோபுரத்து மீதிருந்து கூவுவேன் - சித்திரபுத்திரன்- - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

கோபுரத்து மீதிருந்து கூவுவேன் - சித்திரபுத்திரன்-

05.07.1925, குடிஅரசிலிருந்து.... 

லார்டு லிட்டன் அரசாங்கம் சுயராஜ்யக் கட்சியை வெட்டிப் புதைத்துக் கருமாதியும் செய்துவிட்டது. நமது சுயராஜ்யக் கட்சி வீரர்கள் புதைத்த பிணத்தை எடுத்துக் கொண்டு இன்னும் உயிர் இருப்பதாகவே ஜனங்களுக்குக் காட்டி, செத்தப் பாம்பை ஆட்டி வருகின்றனர். இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டோம் - ஒழித்துவிட்டோம்  என்று மாத்திரம் சொல்லிக்கொண்டு பொய் வெற்றிமுரசு அடிக்கிறார்கள். லார்டு லிட்டனோ இவர்களுக்குப் புத்தி வரும் வரை இதுதான் இவர்கள் தலையெழுத்து என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில் சுயராஜ்யக் கட்சித் தலைவர்களுக்கு இனிமேல் என்ன செய்கின்றதென்கிற விஷயத்தில் தங்களுக்கும் புத்தி இல்லாமல் போய்விட்டது. சொல்புத்தி கேட்பதற்கும் சொல்லுவாரற்றுப் போய்விட்டது. சுயராஜ்யக் கட்சியார் முட்டுக்கட்டை போடுவோம் என்று ஜனங்களிடை வீரப்பிரதாபம் பேசும்பொழுதே எப்படிப் போடப்போகிறீர்களென்று பொது ஜனங்கள் கேட்டார்கள். மந்திரிகளை ஒழித்து அரசாங்கத்தை அழித்துவிடுவோம் என்று சொன்னார்கள். மந்திரிகளை ஒழித்துவிட்டால் அரசாங்கத்துக்கு லாபமேயன்றி நட்டமில்லை. அதற்குமேல் என்ன செய்யப்போகின்றீர்களென்று கேட்டார்கள். செய்வதின்னதென்று அந்த சமயத்தில் நாங்கள் சொல்லுவோம் என்று சொன்னார்கள். அந்தச் சமயமும் வந்துவிட்டது; இன்னது செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள். யாரிடத்தில் போனாலும் ஆதரவைக் காணோம். மகாத்மா காந்தியோ இவர்களுக்குப் புத்தி வரும்வரை ஒன்றும் சொல்லப்போவதில்லை என்கின்ற முடிவின் பேரில் இவர்கள் கூடவே சும்மா இருந்து கொண்டிருக்கிறார்கள். மிஞ்சியிருக்கும் தலைவர்களோ எல்லோருக்கும் மூக்குப் போய்விட்டால் யாரை யார் மூக்கரையன் என்று கூப்பிடுவார்களென நினைத்துக்கொண்டு எல்லோரையும் தங்கள் கட்சியில் சேருங்கள் என்று ஜனங்களைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதுபோல் சிலர் இந்தச் சமயத்தில் முனிசிபாலிட்டியிலும், தாலுகா போர்டிலும், ராஜாங்க சபையிலும் பதவி பெற மிகவும் அவசரமாய் அலைந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் சுயராஜ்யக் கட்சிக்கோ கட்சி எப்படி, ஆயினும் சரி, சுயராஜ்யம் எப்படி ஆயினும் சரி, பிராமணர்களுக்கு எப்படி உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பது என்பதுதான் அவர்களுடைய திட்டம்.

அவர்கள் சென்ற வருசத்தில் சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தலின் போது முதல்முதல் ஜனங்களை ஏமாற்ற வேண்டியிருந்ததால் எல்லா அபேட்சகர்களையும் பிராமணரல்லா தவர்களாகவே போட்டு தங்களுக்கு வகுப்பு வித்தியாசம் இல்லையென்று ஜனங்கள் நம்பும்படியாக நடந்து நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொண்டார்கள். இப்பொழுது இந்த வருஷத்திய தேர்தல்களுக்கோ பிராமண அபேட்சகர்களையே அளவுக்கு மிஞ்சி கொண்டுவந்து நிறுத்தி அபாரப் பிரசாரங்கள் நடைபெறுகின்றன. ஒரு வருஷத்திலேயே இவ்வளவு மாறுதல்கள் இருக்கும்பொழுது இன்னும் அடுத்த வருஷம் எப்படி நடக்கும் என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.  

ராஜாங்க சபையிலும் இதே மாதிரியாகவே சுயராஜ்யக் கட்சி என்கின்ற பெயர் வைத்து எல்லா ஸ்தாபனங்களும் பிராமணர்களுக்கே கிடைக்கும்படியான மாதிரிக்கு பிரசாரங்கள் ஆரம்பமாகிவிட்டன. பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிப்பதுபோல் சுயராஜ்யக் கட்சியின் பேரால் தமிழ்நாட்டில் அட்டகாசம் செய்யப்பட்டு வருகின்றது. பிராமணர்களே கூடாதென்றாவது, பிராமணரல்லாதார்களே இருக்கவேண்டு மென்றாவது என்னுடைய அபிப்பிராயமல்ல. மிதவாதக் கட்சியின் பெயர் சொல்லிக் கொண்டு பிராமணர்கள் பட்டமும், பதவியும், உத்தியோகமும் பெறு வதைப் பற்றியாவது ஜஸ்டிஸ் கட்சியின் பெயரைச் சொல்லிக்கொண்டு பிராமணரல்லாதார் பட்டமும், பதவியும், உத்தியோகமும் சம்பாதிப்பதைப் பற்றியாவது நமக்குக் கவலையில்லை. அதற்காகவே அவர்கள் கட்சி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் பெயரையும், மகாத்மா பெயரையும் சொல்லிக் கொண்டு எத்தனையோ தேசபக்தர்களும், தொண்டர்களும் செய்த தியாகத்தையும், அவர்கள் ஜெயிலுக்குப்போய் அனுபவித்த கஷ்டங்களையும் கரையான் புற்றெடுக்க பாம்பு குடிவருவதுபோல் சில பிராமணர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளப் பார்ப்பது யோக்கியமாகுமா? இதை அனுமதிக்கலாமா? என்பதுதான் எனது கேள்வி. அல்லது காங்கிரகாரர்கள் போய்த்தான் ஆகவேண்டும். அவர்கள் மேற்படி இரண்டு கட்சிக்காரரைவிட யோக்கியர்கள் என்று சொல்ல வருவார்களேயானால் அவரவர்களுடைய எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பதவி, பட்டங்கள் உபயோகப்பட வேண்டுமென்பதுதான். பிராமணரல்லாத மற்றவர்களில் இந்த - ஸ்தானத்திற்கு தகுதி உள்ளவர்கள் இல்லையென்கின்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டால் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். தகுந்த ஆட்கள் இருக்கிறார்களென ஒப்புக்கொண்டு அவர்களுக்காகவே தாங்கள் பாடுபடுவதாக வேஷமும் போட்டு, சமயம் வருகிற காலத்தில் இம்மாதிரி மோசம் செய்வதும் அதற்கு ஏற்ற மாதிரி ஒரு கட்சியை அமைத்துக்கொண்டு பொது நன்மைக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தால் எத்தனை காலத்திற்கு ஜனங்கள் ஏமாறுவார்கள். கொஞ்ச காலத்திற்கு எல்லோரையும் ஏமாற்றலாம். கொஞ்சம் பேரை எப்பொழுதும் ஏமாற்றலாம். எப்பொழுதும் எல்லோரையும் ஏமாற்றமுடியாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழி சுயராஜ்யக் கட்சிக்காரருக்கு ஞாபகத்திற்கு வரும்படியாகத் தமிழ் மக்கள் எப்பொழுது நடந்து கொள்கின்றனரோ அப்பொழுதுதான் தமிழ்நாட்டுக்கும், தமிழர்க்கும் விடுதலையும், சுயமரியாதையும் ஏற்படும் என்பதை கோபுரத்து மீதிருந்து கூவுவேன்.


No comments:

Post a Comment