த.சீ.இளந்திரையன்
மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்
தலைவருக்குரிய முதல் பண்பு என்னவென்றால், அவரைத் தலைவர் என்று மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; மரியாதை காட்ட வேண்டும்; மதிப்பளிக்க வேண்டும். ஆனால், இன்று தமிழ்நாட்டிலோ மற்றவர்கள் பார்த்து, தலைவர்களாக மதிப்பதற்கு முன்பாகவே, தாமே சென்று தலைமைப்பீடம் ஏறும் நிலை மிக மிகச் சாதாரணம். கட்டுப்பாட்டுடன் - ராணுவக் கட்டுப்பாட்டுடன் - தலைவருக்குப் பெருமையும் தந்து ஆணையைச் செயலாக்கிக் காட்டும் செம்மல்களைக் கொண்ட சிந்தனைக்கூடம் திராவிடர் கழகம் என்பதை மறைப்பவர்கள் உண்மைக்குத் திரை போடுபவர்கள். திராவிடர் கழகத்தில் தலைவர்கள் கிடையாது; தலைவர் உண்டு. சலியாத உழைப்பு, நிறைந்த ஊக்கம், சிறந்த சிந்தனை, பரந்த அனுபவம், எதிர்ப்புக்கு அஞ்சாப் பண்பு. இவை படைத்தவர் என்று தொண்டர்கள் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். 1944இல் சேலத்தில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற ஒரு கூட்டம் சதி செய்த நேரத்தில், "எங்கள் தலைவர் பெரியாரே என்று விண்ணதிர, மண் அதிர எழுந்த முழக்கம் ஒன்றே பெரிய செல்வாக்கைக் காட்டப் போதுமான சான்றாகும். அத்தகைய ஆதரவு வளர்பிறையாகத்தான் இன்றும் காட்சியளிக்கிறது. இன்றுமட்டுமல்ல, என்றும்! அவர்தம் கட்டளை, அதைத் தலைமேல் தாங்கி களம் செல்லக் காத்துக் கிடக்கும் காளையர்கள் - இவையில்லாவிட்டால் வீழந்த தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டிருக்க முடியுமா?" என்று எழுதியிருப்பார் தமிழர் தலைவர் அவர்கள்.
தந்தை பெரியார் மறைவுக்குப் பின்பு இந்த நாட்டை ஆண்டோர் - ஆள்வோர் முதல் நாட்டில் உள்ள தலைவர்கள் அனைவரும் தமிழர் தலைவர் அவர்களை தங்கள் வழிகாட்டி என்றும், தலைவர் என்றும் புகழ்வதைப் பார்க்கிறோம். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவராக திகழ்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். அவர்தம் கட்டளையை நிறைவேற்ற காளையர் நாங்கள் எங்கும் களமாடக் காத்துக் கிடக்கிறோம்.
இரண்டாவது, ஒரு தலைவனுக்கு நாட்டு நிலைமையை உணர்ந்து செயலாற்றக் கூடிய வினைத் திட்பம் இருக்கவேண்டும். நாம் எவ்வளவு பொறுப்பான முறையில் செயலாக்கிக் காட்ட வேண்டும் என்ற கணக்குத் தெரிய வேண்டும். எண்ணித் துணிய வேண்டும் என்ற தத்துவம் தலைவரிலக்கணத்தின் மிக முக்கிய அம்சம் எனலாம். யாரிடத்தில் எதை ஒப்படைக்க வேண்டும்: எப்போது வெளியிட வேண்டும் என்பதை அறியும் திறனாய்வு ஆற்றல் தலைவனுக்கு மிகமிகத் தேவை. வள்ளுவர் கூறியது போல்,
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
என்கிற அந்த அறிவின் கூர்மை தலைவருக்குரிய இன்றியமையாத பண்பாகும். இத்தகைய பண்புகளின் ஒன்றுதிரண்ட ஆற்றல்தான் பெரியார். பெரியாருக்கு இருக்கும் வைர நெஞ்சம், எஃகு உள்ளம், வினைத்திட்டம் - இவற்றைக் கண்டு மாற்றாரும் மதிப்பர்; மரியாதை காட்டுவர்.
ஆம், இன்று நாட்டில் நிலவும் மதவெறி நாசகார கும்பலின் அழிவு வேலைகளை அழித்தொழிக்கும் அறிக்கைப் போரை, நடத்தி நாட்டு மக்களுக்கும், சமூகநீதிக் கண்ணோட்டமுள்ள தலைவர்களுக்கும் விழிப்பூட்டும் பணி செய்வதால் வழிகாட்டியாகப் போற்றப்படுகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். சமூகநீதிக்கு வரும் ஆபத்துகளை முறியடிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து படையணி திரட்டுகிறார். இவ்வாறு எதிரிகள் அஞ்சத்தக்க வகையில் பணிகளைச் செய்கிறார் தமிழர் தலைவர் .
மூன்றாவதாக, தலைவர் அடிக்கடி கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆந்துரு மராய். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் செயல்பாடுகள் அப்படிப்பட்டவை தான். வெட்டிப் பேச்சுகளில் காலத்தைக் கழிக்காமல் எங்கும் ஆதாரக் குவியல்களை அடுக்கிக் காட்டி ஆணித்தரமான கருத்துகளை முன்வைப்பார். தமிழ்நாட்டில் யாரேனும் இப்படி வேறு ஒரு தலைவரைக் காட்ட முடியுமா?
அடுத்தபடி உழைப்பு, ஆற்றல், சொல்வன்மை, பொறுமை இந்நான்கும் மிக்க இன்றியமையாத பண்புகளாம்; வயது தான் 90. ஆனால் அவரின் உழைப்போ, ஓர் இளைஞனைப் போல் இன்றும் நாட்டைச் சுற்றி வருகிறார். எந்தச் செயலானாலும் அதில் வெற்றி மாலைகளைக் குவித்து தனது ஆற்றலை தமிழர் தலைவர் காட்டுகிறார். இதில் அவருக்கு நிகர் அவரே தான். சொல்வன்மை நாம் சொல்லியா தெரிய வேண்டும்! அவரின் பேச்சை சலிப்பின்றி பொறுமையுடன் கேட்கும் மக்களே அதற்குச் சாட்சி.
தலைவருக்குள்ள மிக முக்கியப் பண்புகளில், ஆந்துரு மராய் அதிகம் வலியுறுத்துவது ஒழுக்கத்தைப் பற்றி; சிறந்த நடத்தையைப் பற்றி. அவர் எந்தத் தலைவராயிருப்பினும் அவர் ஒழுக்கத்தின் உயர் சின்னமாக விளங்கவேண்டும். தலைவனைப் பின்பற்றுவதென்றால் ஒழுக்கமும் அதனுடன் சேர்ந்ததே. ஒழுக்கத்திற்கே பொது வாழ்விலிருக்கின்ற எல்லோரும் முதலிடம் தரவேண்டும். ஒழுக்கமில்லாத தலைவனை விட ஒழுக்கத்துடன் வாழும் சாதாரணத் தொண்டன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன் என்பதை பொதுவாழ்வில் உள்ளவர்கள் உணர்ந்தே தீரவேண்டும். “நான் வீட்டில் எப்படியிருந்தால் தான் என்ன, உங்களுக்கு வேண்டியது என் கொள்கை அறிவுரை தானே” என்று கூறுபவர்கள் பொது வாழ்வில் மின்மினிகளே தவிர, ஒளி விளக்குகள் ஆக மாட்டார் என்பதை உணர வேண்டும். சில தலைவர்களுடைய ஒழுக்க ஈனத்திற்குப் பதில் கூறுவார்கள் - “அவர்களும் மனிதர்கள்தானே" என்று! வேடிக்கையான, வினோதமான பதில்! அவர்கள் மனிதர்கள் (மிருக உணர்ச்சிகள் மங்கி, மறையாமல். தலைவிரித்தாடும் மனிதர்கள் என்பது இன்னும் பொருந்தும்) என்பதை நாம் மறுக்கவில்லை. அவர்கள் சாதாரண மனிதர்கள் என்ற தகுதியிலேயே இருக்க வேண்டியவர்களே தவிர, தலைவர்கள் என்ற தகுதிக்குச் சிறிதும் லாயக்கற்றவர்கள் என்பதே நம் கருத்து,
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"
என்னும் குறளை தனி மனிதன் மறந்தாலும் - தலைவர்கள் மறக்கக் கூடாது.
அறிவு, ஒழுக்கம் இத்தகைய பண்புகள் ஒருங்கே சேர்ந்த ஓர் உருவம் தென்னாட்டின் பொதுவாழ்வில் உலவுகிறது என்றால் அவர் நம் தலைவர் பெரியார் பெரியார் ஒருவரே!
காண்டேகர் சொன்னார், "தலைவன் என்றால் தன் காலத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்கு குறையாமல் பார்க்கக் கூடிய தன்மை உள்ளவனே" என்றார். இந்த உரைகல்லில் உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாத தங்கமாகக் காட்சியளிக்கின்றார் நம் தந்தை பெரியார். இந்த உரை கல்லில் உரைத்தால் இன்றுள்ள பலர் செல்லாத உலோகங்கள் எனக் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்பது உறுதி. புயல் வரினும் அதைப் புன்னகையோடு சமாளிக்கும் பண்பு நம் பொன்னிற மேனியரைத் தவிர வேறு யாருக்கு இருக்கிறது? சுமார் 2000 ஆண்டுகளாக சுய உணர்விழந்து, சுயமரியாதையற்றுக் கிடந்த ஒரு மாபெரும் இனத்தை 30 ஆண்டுகளில் தட்டியெழுப்பி, சுயமரியாதை உணர்வைப் பெறச் செய்ய யாரால் முடியும்? - பெரியாரை தவிர!
அறிவாசான் தந்தை பெரியாருக்குப் பின்னால் அவர் கொண்ட அத்தனை நெறிகளோடும் ஓர் எதிர் நீச்சல் இயக்கத்தை சற்றும் தளராமல் துரோகிகளை வீழ்த்தி நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த இயக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அதற்கென்று பத்துக் கட்டளைகளை உருவாக்கி அவற்றையே இன்றைய இளைஞர்களைச் சூளுரை ஏற்கச் செய்து அதன்படி வழிநடத்துகிறார் ஆசிரியர் அவர்கள்.
கடைசியாக ஆந்துரு மராய் கூறும் வார்த்தைகள் நினைவில் நிறுத்த வேண்டியவை. “சிறந்த தலைவனுக்குக் கீழ்ப்படியா எந்தச் சமூகமும் - நாடும் - உருப்படவே முடியாது. அதன் அழிவு நிச்சயம்.”
எனவே இளைஞர்களே, இந்த நாட்டைப் பாதுகாக்க வாருங்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் தந்தை பெரியார் பணி முடிப்போம்!
No comments:
Post a Comment