தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.12.2022) மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, பெருங்குடி மண்டலம், வார்டு 181-க்குட்பட்ட குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருள்களை வழங்கினார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ச. அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளனர்.
சென்னை,டிச.10- வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று (10.12.2022) அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் கடல் சீற்றத் துடனேயே காணப்படுகிறது. கிழக்குக் கடற்கரை சாலையில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் உள் மாவட்டங்களில் இன்னும் இரு நாள்களுக்கு மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப் புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் 18 செ.மீ. மழை, குன்றத்தூரில் 15 செ.மீ மழை மற்றும் உத்திரமேரூரில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மின்னல், பணப் பாக்கத்தில் 20 செ.மீ. மழை பதிவானது.
பலத்த காற்றுடன் கரையைக் கடந்த புயல்
நேற்றிரவு 9.30 மணியளவில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. அதிகாலை 3 மணியளவில் முழுமையாகக் கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும்போது 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக மீட்பு, நிவாரணப் பணிகளை மேற் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
முறிந்து விழுந்த 400 மரங்கள்
மாண்டஸ் புயல் எதிரொலியாக தலைநகர் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் சுமார் 400 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (10.12.2022) காலை செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"மாண்டஸ் புயலை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அரசு சிறப்பாக எதிர்கொண்டது. சுமார் 400 மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கவில்லை. 16 சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டில் உள்ளன. சைதாப்பேட்டையில் வீடு இடிந்துவிழுந்த நிகழ்வில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். அதுதவிர தலைநகரில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை" என்றார்.
பாதுகாப்பு, மீட்பு பணியில்
காவல்துறையினர் 16 ஆயிரம் பேர்
மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 12 மாவட்ட பேரிடர் மீட்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காவல் துறையினர் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள சென்னை பெருநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சென்னை பெருநகர காவல் சார்பில் 12 மாவட்ட பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இக்குழுவினரிடம் தயார் நிலையில் உள்ளன.
மேலும், படகுகளில் சென்று மீட்புப் பணிகள் மேற்கொள்ள 5 காவலர்கள் கொண்ட ஒரு குழு என 4 குழுக்கள் அமைக்கப்பட்டு படகு, கயிறு, உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் 40 நபர்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவும்- பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு செய்தார்.
சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் 16,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவல் அதிகாரிகளின் குழுக்களில் ஒருங்கிணைந்து பணியாற்ற 1,500 ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல்துறையில், சிறப்பு கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு, 044-23452372 என்ற சிறப்பு உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கட்டுப்பாட்டறை மூலம் புயல் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் பரிமாற்றப்பட்டு, மீட்பு மற்றும் இடர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புயல் காரணமாக அவசர உதவிக்கு காவல்துறை அவசர உதவி எண்.100 (அ) 112, சென்னை பெருநகர மாநகராட்சி உதவி எண்.1913, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண்.101 (அ) 112 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகார அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்று மேற்கு நோக்கி புயல் நகர்ந்ததால் புதுச்சேரி- மாமல்லபுரம்- மரக்காணம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. சென்னையில் விடிய விடிய மழை பெய்தபோதும் சாலைகளில் பெரியளவில் தண்ணீர் தேங்கவில்லை.
மாண்டஸ் புயலால் நேற்று (9.12.2022) மாலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்தபோதும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அரும்பாக்கம், கலைஞர் கருணாநிதி நகர் உள்ளிட்ட சில இடங்களில் தேங்கிய தண்ணீர் உடனடியாக அகற்றப்படுகிறது. நாள் முழுவதும் மழை பெய்தபோதும் எந்த சுரங்கபாதையிலும் தண்ணீர் தேங்க வில்லை. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஆயி ரக்கணக்கான அரசு ஊழியர்கள் இரவு முழுவதும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையில் மாண்டஸ் புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திரு வான்மியூரில் உள்ள கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் ஆகிய இடங்களில் முதலமைச்சர் ஆய்வு நடத்தினார். அங்கு புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வடசென்னை பகுதிகளிலும் ஆய்வு செய்ய முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முதலமைச்சர் உடன் சென்றனர்.
மாண்டஸ் புயல் பாதிப்பால்
4 பேர் உயிரிழப்பு: அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மய்யத்தில் வருவாய்த் துறை அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது:
நேற்றிரவு 2.30 மணிக்கு மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடந்தது. நிறைய இடங்களில் மரம் விழுந்துள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மதியத்திற்குள் முழுமையான சேத விவரங்கள் தெரியவரும். நிவாரணங்கள் ஓரிரு நாளில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். இப்பொழுது கூட முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்” என்று தெரி வித்தார்.
மதியத்திற்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலே பாதிப்பு குறைந்துள்ளதாகவும் தெரி வித்த அமைச்சர், “மழை வந்தாலும், புயல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். மாவட்டங்களின் சூழ்நிலைக்கு ஏற்பவே விடுமுறை அளிக்க முடியும்” என்று கூறினார். 205 நிவாரண மய்யங்களில் 9,280 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment