கல்லூரி நிகழ்ச்சிகளிலும் ஆளுநர் அரசியல் பேசலாமா? அமைச்சர் க.பொன்முடி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

கல்லூரி நிகழ்ச்சிகளிலும் ஆளுநர் அரசியல் பேசலாமா? அமைச்சர் க.பொன்முடி கேள்வி

சென்னை,டிச.6- சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று (5.12.2022) நடைபெற்றது. 

இதில் துறை செயலர் கார்த்திகேயன், அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ், கல்லூரி களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கல்லூரிகளின் செயல்பாடுகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப் பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் க. பொன்முடி கூறியதாவது:

புதிதாக வேலைவாய்ப்பை உரு வாக்கக்கூடிய வகையில், அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் நாடு முதலமைச்சரின் ‘நான் முதல்வன்’ திட்டம் முழுமையாக செயல்படுத்தப் பட்டு வருகிறது.

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. படித்து முடித்ததும் வேலை கிடைக்கும் என்ப தால்தான் மாணவர்கள் இதில் சேர் கின்றனர். இதற்காகவே தொழில் துறை, உயர்கல்வித் துறை ஒருங்கி ணைந்து ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பாலிடெக்னிக் படித்துவிட்டு 17,352 மாணவர்கள் நேரடியாக பொறியியல் 2-ஆம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். இதில் முதல்முறையாக இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 800 பாலிடெக்னிக் மாணவர்கள் பொறியியல் 2-ஆம் ஆண்டில் சேர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 17.88 சதவீதம் உயர்ந்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமல் படுத்தப்படும். அனைத்து கல்லூரிகளி லும் காலிப் பணியிடங்கள் இல்லாமல், பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

கல்லூரி நிகழ்வுகளில் பங்கேற்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,கல்வி பற்றி பேசாமல், அரசியல் பற்றிதான் அதிகம் பேசுகிறார். அவர் என்ன கருத்து பேசுகிறார் என்பது இளை ஞர்கள் அனைவருக்கும் தெரியும்.

சென்னை அய்அய்டியில் பேரா சிரியர்கள் நியமனம் இடஒதுக்கீடு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதை முறையாகப் பின்பற்றுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெ னவே வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment