முனைவர் க.தமிழமல்லன்
தலைவர், தனித்தமிழ் இயக்கம்,புதுச்சேரி
படிக்கும் மாணவப் பருவம் தொட்டுப்
பணியைத் தொடங்கிய பகுத்தறி வாளர்!
கி.வீர மணியார் கிழக்குக் கதிரவன்!
கீழ்மை இருளை கிழித்த ஒளிச்சுடர்!
உலகில் ஒப்பிலா ஓர்இயக் கத்தை
உயர்வாய் வளர்த்து உயிர்ப்புக் கொடுத்தவர்!
எங்கும் இதுபோல் இயக்கம் இல்லை!
இயக்கமாய் இருந்தே ஈகத் தொண்டரை
இயங்கச் செய்யும் ஏந்தல் வாழ்கவே!
பற்றறு பெரியார் பாடம் புகட்டிட
குற்றா லத்தில் கொடுத்தார் பயிற்சி!
கெடுதலைப் போக்கும் 'விடுதலை' ஏட்டைக்
கிளர்ச்சி வாளாய் உயர்த்திய மேலோர்!
ஆள்வோர் எனினும் அச்சம் இன்றி
நாளும் ஒருபோர் நடத்தும் தலைவர்!
காலந் தோறும் கலகப் பகையைக்
கலங்கச் செய்யும் களப்புலித் தலைவர்!
ஆரியக் கொட்டம் அடியோ டொழிய
அறமிலா மனுநூல் அம்பல மாக்கினார்!
மூடத் தனத்தின் மொத்த வணிகர்
ஆடல் தடுத்து ஆர்ப்பரித் தாரிவர்!
தேசிய நுழைவுத் தேர்வை எதிர்த்தார்
தீங்காம் பத்து விழுக்கா டெதிர்த்தார்!
வடவர் புகுத்தும் வஞ்சக மெல்லாம்
வாடச் செய்தார் வலிமை சிறந்தார்!
திருக்குறள் தன்னைத் தீண்டும் பாம்புகள்
திருந்தும் படியாய்க் கருத்தால் அடித்தார்!
தெருவில் இறங்கி ஒருபோர் நடத்தினால்
வரும்துயர் எண்ணி வாடுதல் இல்லார்!
கொடிபிடித் திறங்கிக் கோடித் தொண்டரைக்
கூட்டிடும் தலைவர்! கொள்கையே பெரிதென
வாழும் தலைவர் வாழ்க வாழ்க!
தாழும் தமிழினம் தலைநிமிர்ந் திடவே
நலமாய் என்றும் வளமாய் வாழ்கவே!
இயக்கம் செய்யும் எழிற்பணிக் காக
இந்த உலகம் இணையிலாத் தலைவர்க்கு
நோபல் பரிசை ஆவலாய்த் தருக!
பெரியார் உலகம் பெரிதாய் அமைக்கும்
அரிய தலைவர் அய்யா வுக்குத்
தமிழ்நாடு அரசு 'தகைசால் தமிழர்'
தகும்பெரும் பரிசைத் தானாய்த் தந்து
பெருமை அடைகவே பெரியார் வாழ்கவே!
அருமைத் தலைவர் வீர மணியார்
பெருமையால் நாடு பேறு பெற்றதே!
No comments:
Post a Comment