ஒன்றிய அரசின் மனிதவளத்துறையின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான முதல்வர், துணை முதல்வர் பதவிகள் ஹிந்தி சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
முதல்வர், துணை முதல்வர் பதவிகளுக்குத் தகுதியாக 45 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எட்., அல்லது அதற்குத் தகுந்த டிகிரி பெற்றிருக்க வேண்டும். விரிவுரையாளராக 15 வருட அனுபவம் தேவை. கணினி அறிவு எதிர்பார்க்கப்படுகிறது.
துணை பள்ளி முதல்வர் பதவிக்கு, முதுகலை ஆசிரியர் பணிக்கு 50% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாடப் பிரிவுக்கு ஏற்ற முதுகலைப் பட்டம் தேவை. மேலும் பி.எட்., அல்லது அதற்குத் தகுந்த டிகிரி தேவை! ஹிந்தி மற்றும் ஆங்கிலம் வழிக் கல்வியில் கற்பித்தல் திறன் வேண்டும். கணினி அறிவு எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம், ஹிந்தி, சமூக அறிவியல், அறிவியல், சமஸ்கிருதம், கணிதம், உடற்கல்வி, கலைக்கல்வி, வேலை அனுபவம் பணிகள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாட ஆசிரியர் பணிக்குக் குறிப்பிட்ட மொழி சார்ந்த இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பி.எட்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கற்பித்தல் திறன் தேவை.
உடற்கல்வி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர் நூலக அலுவலகர், முதன்மை ஆசிரியர் (இசை), உதவிப் பொறியாளர் (சிவில்), உதவி பிரிவு அதிகாரி, பட்டப்படிப்பு மற்றும் 3 வருட அனுபவம் தேவை. ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், மூத்த உதவி செயலாளர், ஸ்டெனோகிராஃபர் கிரேடு - மிமி, ஜூனியர் உதவி செயலாளர், முதன்மை ஆசிரியர், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த முதுகலைப்பட்டம் அல்லது டிப்ளமோ மற்றும் இரண்டு ஆண்டுகள் அனுபவம்.
இவ்வாறு மேலே கூறிய அனைத்துப் பதவிகளுக்கும் முக்கிய தகுதியாக ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கேட்கப்பட்டுள்ளது. தென் இந்தியா மற்றும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் இருக்கும் அந்தந்த மாநிலங்களின் மொழிகளை முற்றிலும் புறக்கணித்து, அனைத்துப் பதவிகளுக்கும் ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் காசிக்குச் சென்று தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் பாஜக ஒன்றிய அரசின் செலவில் கூத்து நடத்தியது, முதல் நாள் துவக்கவிழாவிலும் ஒரு மாதம் கூத்து நடந்த பிறகு இறுதி நாள் நிகழ்விலும் மோடி மற்றும் அமித்ஷா கலந்துகொண்டு தமிழுக்குப் பெரிதும் புகழாரம் சூட்டினார்கள், சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத்தும் ஒத்து ஊதினார். முதல் நாள் துவக்கவிழாவில் பேசிய மோடி தமிழ் மொழியை இந்தியர்கள் அனைவரும் இணைந்து காப்பாற்ற வேண்டும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்கள் வெளியிட்ட கேந்திர வித்யாலயா வேலைகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேந்திரா வித்யாலயா பள்ளி என்பது இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் இயங்கினாலும், சம்பந்தப்பட்ட மாநில மொழிகளுக்கு அறவே இடமில்லை என்பது எத்தகைய அநியாயம்!
இந்தியாவில் இருக்க வேண்டுமானால் மொழி உரிமையை இழக்கும் விலை கொடுக்க வேண்டுமா? இதுதான் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் யோக்கியதையா?
ஹிந்தி, அதன் தாயான சமஸ்கிருத ஆதிக்கம் என்றால் அதன் பொருள் பார்ப்பன - ஆரிய ஆதிக்கம் என்பதே! ஹிந்தியாவா? இந்தியாவா? எதைக் காப்பாற்றப் போகிறார்கள்?
No comments:
Post a Comment