" முடியும்வரை கடமைகளைச் செய்வேன்!" என்றே
முழுவீச்சில் இறங்குகின்றார்! மூச்சு நின்று
"மடியும்வரை ஓய்வில்லை பணியில்!" என்றே
மானமிகு ஆசிரியர் முழங்கு கின்றார்!
இடியும்வரை, ஆதிக்கத் தடைச்சு வர்கள்
இல்லாமல் போகும்வரை, எனது தாய்மண்
விடியும்வரை என்தொண்டு தொடரும் என்றே
விடுத்தார்!போர்ப் பிரகடன அறிக்கை நன்றே!
போகிறது காலநதி புதுவே கத்தில்!
பொறுப்பேற்றுக் கருஞ்சட்டைப் படைந டத்தி
ஆகிறது நாற்பத்தா(று) ஆண்டென் றாலும்,
அழகுகுன்றா இளமையுடன் சுழலு கின்றார்!
சாகிறது சனாதனநோய்க் கிருமி யெல்லாம்!
சமர்புரியும் "ஆசிரியர்" சக்தி கண்டே
வேகிறது வெறிப்பகைவர் நெஞ்ச மெல்லாம்!
"வீரமணி" ஒலிக்கிறதே தமிழ்நா டெங்கும்!
நெற்றிக்கண் பழமைகளை ஞானக் கண்ணின்
நெருப்பாலே சுட்டெரித்தார் பெரியார்! அந்த
வற்றாத பகுத்தறிவுக் கனலை ஏந்தி
வலம்வரும்நம் "ஆசிரியர்" எட்டுத் திக்கும்
சுற்றித்தன் பரப்புரையை நிகழ்த்து கின்றார்!
சுயமரியா தைப்பயணம் நடத்து கின்றார்!
வெற்றிக்கு மறுதொடக்கம்! சமூக நீதி
விடுதலைக்குப் பூபாளம் அவர்மு ழக்கம்!
வளமார்ந்த கருத்துக்கள்! தெளிந்த சொற்கள்!
வாதத்தில் அனல்கக்கும் ஆதா ரங்கள்!
உளமார்ந்த கொள்கையைஉள் வாங்கிக் கொண்டே
உலாவரும் "தாடியில்லாப் பெரியார்" இன்றும்
களமாடி வருகின்றார் உரிமைப் போரில்!
கலைஞர்வழி நடைபோடும் நல்லாட் சிக்கோர்
இளம்வீரன் தினவைப்போல் தோள்கொ டுத்தே
"இனமானத் தளபதி"க்குத் துணைநிற் கின்றார்!
பட்டுமலர் விரிப்பல்ல! கடந்து வந்த
பாதையெங்கும் விஷமுட்கள்! வசைக்கூச் சல்கள்!
அட்டணக்கால் இருக்கைதரும் வரவேற் பல்ல!
அழுகியவீண் முட்டையுடன் அமில வீச்சு!
விட்டொதுங்கிப் போகவில்லை எதிர்ப்பைக் கண்டே!
"வெண்தாடிச் சூரியனின்" படையில், உச்சம்
தொட்டு,அகவைத் தொண்ணூறும் தொட்டு விட்டார்!
" தொண்டுசெய்து பழுத்தபழம்" இவரும் ஆனார்!
எண்ணத்தை நிறைவேற்றிப் பெரியார் கண்ட
இயக்கத்தின் வழிகாட்டி அரைநூற் றாண்டாய்!
விண்முட்ட இனமானம் எதிரொ லிக்கும்
"விடுதலைக்கே" ஆசிரியர் அறுப தாண்டாய்!
கண்மூடி வழக்கத்தைத் தகர்த்துப் போடும்
கருத்தியற் கோட்பாட்டில் எண்ப தாண்டாய்!
நுண்ணோக்கும் அறிவாளர்! தொண்ணூ றல்ல..
நூறாண்டும் இவர்காண்பார் இளைஞ ராக!
கடலூரி லேபிறந்து, தமிழி னத்தின்
காவலராய் "திடலூரில்" எழுந்த கோமான்!
உடலேற்றுக் கொள்ளாத வயதென் றாலும்
ஓய்வுக்கே ஓய்வுதரும் உழைப்புச் செம்மல்!
அடலேறு சலியாத வினைத்திட் பத்தில்!
அஞ்சாத சினவேங்கை அறச்சீற் றத்தில்!
வடலூரின் அடுப்பைப்போல் சுடர்குன் றாமல்
வளர்ந்துவரும் கொள்கைத்தீ! வாழ்க! வாழ்க!
பாழடைந்த தமிழ்நாட்டைப் புதுப்பிக் கின்ற
பணியில்நம் "முதல்வருடன்" கைகள் கோர்த்துத்
தோழமையின் ஆளுமையை வழங்கி வாழ்க!
துள்ளலுடன் துடிப்புடனே இயங்கி வாழ்க!
வாழ்க!எங்கள் "ஆசிரியர்" நீடு வாழ்க!
வருங்காலப் பொன்னேட்டு வரலாற் றுக்குத்
தாழ்திறந்த பெருமகனார் இனிது வாழ்க!
தாய்க்கழகப் பெருமையுடன் தமிழ்போல் வாழ்க!!
- கவிச்சுடர் கவிதைப்பித்தன்.
No comments:
Post a Comment