திராவிட இயக்க சிந்தனையாளர்கள் வெளி நாட்டில் நிலையாகத் தங்கியும், தாயகம் தங்காத குடிமக்களாக (ழிஸிமி) வெளிநாடுகளில் பணிபுரிந்தும், தமிழ்நாட்டிலேயே திராவிடர் இயக்க கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு வரும் தோழர்கள் பலர் சமூக ஊடகங்களில் பங்கேற்றும், தங்களது கருத்துகளை கொள்கை எதிரிகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்தும் சமூக வெளியில் அமைதியாக கருத்தியல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அநத் தோழர் களெல்லாம் ஒன்றாக சந்தித்து, திராவிடர் கொள்கைக் குடும்பத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, கலந்துறவாடிடும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.
சென்னை - பெரியார் திடலில் கலந்துறவாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 22.12.2022 அன்று நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழர் தலைவரின் வழிகாட்டு அமர்வில் பகல் 12:00 மணி அளவில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
ஏறக்குறைய 200க்கு மேற்பட்ட தோழர்கள் 10க்கும் மேற்பட்ட முற்போக்கு சிந்தனைகள் கொண்ட யுடியூப் சமூக ஊடவியலாளர்கள் பங்கேற்று தமது எண்ணங்களை - மேலும் செல்லவேண்டிய பயணம் - செய்து முடிக்க வேண்டிய பணிகள் பற்றி மனம் திறந்து பேசினர். கூட்டத்தின் தொடக்கத்தில் அனைவரையும் திராவிடர் கழகத்தின் தொழில்நுட்பக் குழுவின் பொறுப்பாளர் வி.சி.வில்வம் வரவேற்று - தமது நீண்ட நாளைய நினைப்பு அன்று கூட்டம் நடத்துவதின் மூலம் நிறைவேறியது எனக் கூறினார்.
அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்யம் - அருள்செல்வி பாலகுரு
அமெரிக்காவிலிருந்து வருகை தந்த பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொருளாளர் திருமதி. அருள்செல்வி பாலகுரு அவர்கள் பெரியாரது கொள்கைகளை உலக மயப்படுத்திடும் பணியில் அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யம் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை சுருக்கமாக எடுத்துரைத்தார். பெரியார் மனிதநேயப் பன்னாட்டு மாநாடுகளை தொடர்ந்து நடத்தி வருவதைப் பற்றியும் கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடா நாட்டு டொரண்டோ நகரில் நடைபெற்ற சமூக நீதிக்கான பெரியார் மனிதநேய பன்னாட்டு மாநாடு சிறப்பாக நடந்தேறியதையும் விளக்கிப் பேசினார். பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களின் முயற்சியில் செயல்பட்டு வரும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் தாங்கள் உள்ள நாட்டில் சமூகப் பணி ஆற்றிட வருக என்ற வேண்டுகோளையும் அவர் விடுத்தார்.
சிந்தனையாளர் சுய அறிமுகம்
ஆர்வப் பெருக்குடன் கொள்கை மலர்முகம் கொண்டு பெரியார் திடலில் சங்கமித்தனர் திராவிட இயக்க சிந்தனையாளர்கள். கருத்துச் சமர் புரிந்து வரும் பட்டாளத்தினர் தங்களது செயல்பாட்டை எடுத்துச் சொன்னார்கள். சிந்தனை வளத்துடன் செயல்பட்டு வருவதை பறைசாறிடும் விதமாக ஒவ்வொரு பெரியார் சிந்தனையாளர் பேசியதும் தனித்தன்மை வாய்ந்ததாக - கலப்படமற்ற கொள்கைப் பற்றுடன் பேசியது கூட்டத்தின் சிறப்பாக அமைந்தது.
ஒவ்வொரு தோழரும், தங்களது பெயர், சொந்த ஊர், தற்சமயம் வசிக்கும் ஊர் / நாடு, தமது வாழ்வாதாரப் பணி பற்றிய சுருக்கம், குடும்பப் பின்னணி, இன்றைய நிலையில் குடும்ப நிலவரங்கள் என அத்தனை அடிப்படை விடயங்களைக் கூறி, கொள்கை பற்றிய தங்களது புரிதலுடன் கூடிய செயல்பாடு பற்றி எடுத்துரைத்தனர்.
திராவிட இயக்கக் கொள்கையின்பால் தாங்கள் ஈர்க்கப்பட்ட விதம் பற்றிய எதார்த்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசினர். திராவிட இயக்க கொள்கை ஈடுபாடு ஏற்பட தமது குடும்பத்தில் இருந்த மூத்த தலைமுறையினர் ஈடுபாடே காரணம் என ஒரு சிலரும், வெளிநாட்டில் தங்கி வாழும் சூழலில் கொள்கை சார்ந்த எழுத்துகளைப் படித்து ஈடுபாடு கொண்டதாக ஒரு சிலரும், தாங்கள் மணம்புரிந்த குடும்பத்தில் வாழ்ந்த திராவிட இயக்க முன்னோடி பிரமுகர்களையும் நினைவு கூர்ந்தும் பேசினர்.
மேலும், முக்கியமாக கொள்கைப் புரிதலை செம்மைப்படுத்தி வரும் ‘விடுதலை’ ஏடு மற்றும் இயக்க ஏடுகளான ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’, ‘முரசொலி’ என அனைத்தும் _ இணையத்தின் வாயிலாக வாசிப்பும் பெருந்துணை புரிந்ததைப் போற்றிப் பேசினர். சிந்தனை - செயல்வடிவம் கொண்டாலும், கொள்கை எதிரிகளின் பொய்யான, புனைப் பதிவுகள், உரையாடல்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அதற்கு எதிர்வினை ஏற்பதாக மட்டுமல்லாமல் உண்மை நிலையினை உடக வாசிப்பாளர்களுக்கு விளக்கிட வேண்டும் என்ற உந்துதல் தங்களைச் சமூக ஊடக செயல்பாட்டாளர்களாக மாற்றியது என்பதை மறக்காமல் எடுத்துரைத்தனர்.
மருத்துவம் பயின்று மருத்துவச் சேவை ஆற்றிவரும் பலர், பன்னாட்டு கணினி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சட்டம் படித்துவிட்டு வழக்குரைஞராக பணியாற்றி வருபவர், வங்கிப் பணிபுரிபவர், சொந்தமாக தொழில் முனைவோர்கள், எழுத்தாளர்கள் என அன்றாடம் தங்களது தொழில் சார்ந்த பணிகளுக்கிடையில் திராவிட இயக்க கொள்கைகளில் நாட்டம் கொண்டு அவைகளை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்ற ஆர்வச் சுடர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கனன்று கொண்டிருப்பதை அவர்தம் 5 நிமிடங்களுக்குட்பட்ட அறிமுகப் பேச்சு அறிந்திடச் செய்தது.
பெரும்பாலானோர்கள் கூறிய செய்தி நெகிழ்ச்சியை ஊட்டியது. ஊடகங்கள் வாயிலாக தமிழர் தலைவரின் பேச்சுகளை கேட்டிருந்தாலும், ஒரு சிலர் Zoom கூட்டங்களில் அவருடன் கலந்து பங்கேற்று உரையாடியிருந்தாலும், தமிழர் தலைவரை முதன்முறையாகப் பார்க்கிறோம் என்ற பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெரியார் இயக்க தலைமையிடமான பெரியார் திடலுக்கு வருவதே தம் வாழ்வின் பெருமையாகக் கருதுவதாகவும் கூறினர்.
கவிஞரின் வரவேற்பு
தமிழர் தலைவரின் உரைக்கு முன்னர் பேசிய கவிஞர் கலி.பூங்குன்றன் வருகை தந்த அனவைரையும் பார்க்கையில் ஒரு புத்துணர்வு, புது மகிழ்ச்சி ஏற்படுகிறது. அனைவரும் வருக, திராவிடர் கொள்கையினை வரும் காலங்களில் பரப்புவதில் -_ கடந்த காலத்தில் இல்லாத சவால்கள் நிறைந்து வரும் சூழலில் தோழர்களின் கருத்தியல் புரிதல் செம்மைப்பட வேண்டும்; செழுமைப்பட வேண்டும். இயக்க ஏடுகளை தொடர்ந்து படித்து வரும் நிலையில் சிந்தனை கூர்மைப்படும். அமர்வுகள் இப்படிப்பட்ட சந்திப்புகள் நடைபெற வேண்டும்; சந்தித்து கலந்துறவாடுவது செயல்பாட்டைப் பரந்துபடச் செய்யும். அனைவருக்கும் வாழத்துகள் என கூறி தனது உரையினை முடித்தார்.
தமிழர் தலைவர்
அடுத்து நிறைவாக தமிழர் தலைவர் உரையாற்றிடவிருந்த நிலையில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வருகை தந்தோர்களின் கேள்வி, விளக்கத் தேடலுக்கு, ஆசிரியர் விளக்கமளிப்பார் என்று கூறினாலும், அந்த கேள்வி _ பதிலுக்கு முன்னர் தமிழர் தலைவர் சுருக்கமாக உரையாற்றி தோழர்களின் விளக்கத் தேடலை வரவேற்றார்.
தமிழர் தலைவரின் பேச்சு, விளக்கம்
“வருகை தந்துள்ள தோழர்களின் செயல்பாட்டுத் தளமான ‘சமூக ஊடகம்‘ என்பது பரந்துபட்ட அளவில் திராவிட இயக்கக் கொள்கைகளைக் கொண்டு செல்கிறது. உங்களது பதிவுகளைப் படிக்கும் பலர் ஆர்வம் கொண்டு, திராவிட இயக்கக் கொள்கையின்பால் ஈர்க்கப்படுவர். அந்த வகையில் இயக்கத்திற்கு பலன் கூட்டும் _ புதிய தலைமுறையினரை பொதுவெளியில் பிடித்து அழைத்து வரும் ‘கும்கி’ யானை போன்றவர்கள் நீங்களெல்லாம். அரிய பணியினைச் செய்து வரும் ஆற்றல் மிக்கவர்கள். ஊடக நிகழ்ச்சிகளில் பலரைப் பார்த்தது - பழகிய முகங்களைப் பார்ப்பது _ நேரடியாகப் பார்ப்பது உங்களைப் போலவே எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கருத்தியல் பரப்பிடும் தளத்தில் - பல்வேறு விவாதங்களில் பல்வேறு கேள்விகளுக்கு உங்களது கோணத்தில் பதில் அளித்து சமூக ஊடகவியலாளர்களாகிய நீங்கள் தந்தை பெரியாரைப் பற்றிய மேலும் பலவகை புரிதல்களுடன் _ (காலச் சூழலுக்கு ஏற்றவாறு பணியாற்றுவது பெரியாரியலின் ஒரு தன்மையும் கூட) _ உங்களை ஆக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பெரியார் திடல் உங்களுக்கு பெரிதும் பயன்தரும்; துணை நிற்கும்.’’
தொடர்ந்து சிந்தனையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் அவர்கள் விளக்கமளித்தார்.
திராவிடர் கழகத்திற்கும் திராவிட அரசியல் கட்சியான தி.மு.க.விற்கும் பகையூட்டும் விதத்தில் கொள்கை எதிரிகள் சிலர் தொடர்ந்து செய்தி பரப்பி வருவதற்கு ஆசிரியர் விளக்கமளித்தார்.
திராவிடர் கழகம் தாய்க் கழகம், தேர்தலில் போட்டியிடாத அமைப்பு. தி.மு.க. அரசியல் கட்சி, தேர்தலில் போட்டியிடும் அமைப்பு. தற்சமயம் ஆட்சியில் இருக்கிறது - ஆட்சியில் இருக்கின்ற, கட்சியின் செயல்பாட்டு வரம்புகளை, கொள்கை சார்ந்த வெளிப்பாடுகளுக்கு வரன்முறை உண்டு. அதை உணர்ந்துள்ளது திராவிடர் கழகம். கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள் என வரும்பொழுது நினைவூட்டி நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு திராவிடர் கழகத்திற்கு உண்டு; அதேநேரம் தி-.மு.க. ஆட்சிக்கு பங்கம் விளைவித்திட யாரும் முனைந்தால் அதை எதிர்த்து முதல் குரல் எழுப்பி அரணாகவும் நிற்பதுவும் திராவிடர் கழகம்தான். 1967இல் ஆட்சிக்கு வந்த பொழுது தந்தை பெரியாரும், அன்றைய முதலமைச்சரான அறிஞர் அண்ணாவும், நாகரசம்பட்டி பள்ளிக் கட்டட திறப்பு விழாவில் இரண்டு அமைப்புகளின் பணி, அணுகுமுறை, நிலைப்பாடு பற்றி தெளிவாகவே பிரகடனம் செய்துவிட்ட நிலையில், எதிரிகளின் வம்பு, வதந்திகளுக்கு இடம் கொடுக்காமல் - கொள்கைப் பரப்பலை மேற்கொள்வதுதான் சரியாகும் என்றார் ஆசிரியர்.
பல்வேறு நாடுகளில் உள்ள கொள்கை ஆர்வலர்கள் அமைப்பு ரீதியாக பணியாற்றிட ஆலோசனை கேட்ட பொழுது ஆசிரியர் கூறினார்:
அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளைகள் (Chapters) பல நாடுகளில் உள்ளன. கிளை இல்லாத நாடுகளில் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைமையிடத்தை அணுகி கிளைகளை ஏற்படுத்திப் பணிபுரியலாம். அமைப்பு ரீதியாக, ஒருங்கிணைப்பு செயல்பாடுகள் உரிய பலனைத் தரும் என்பதையும் ஆசிரியர் தெளிவுபடுத்தினார்.
சிந்தனையாளர்களுக்கு நினைவுப் பரிசு
106 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிக்கட்சியின் தலைவர் பிட்டி தியாகராயர் வெளியிட்ட பார்ப்பனரல்லாதார் அறிக்கையின் மறுவெளியீடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) அந்த நாளில் டிசம்பர் 20, 2022 சென்னையில் வி.எம்.அரங்கில் வெளியிடப்பட்டது.
வருகை தந்த அனைத்துத் தோழர்களுக்கும் ஆசிரியர் அவர்கள் அந்தப் புத்தகத்தினை நினைவுப் பரிசாக வழங்கினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன், ‘நக்கீரன்’ கோவி.லெனின், ஓமான் நாட்டு மருத்துவர் சென்பாலன், சிங்கப்பூர் நாட்டிலிருந்து வருகை தந்த ராஜராஜன் மற்றும் கார்த்திக் ராமசாமி, நார்வே நாட்டிலிருந்து வந்த சேசாத்திரி தனசேகரன், பிரிட்டனிலிருந்து வருகை தந்த சுதாகர் பிச்சைமுத்து, ‘புதிய குரல்’ ஓவியா, திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, திராவிட மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.வெங்கடேசன் மற்றும் பல தோழர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் நண்பகல் உணவு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் முடிந்தாலும், மாலைவரை பெரியார் திடலில் இருந்து கருத்து விளக்கம் பெறுவோம் என தோழர்கள் கூறியது அவர்களது திராவிட கொள்கை சார்ந்த ஈடுபாட்டைக் காட்டுவதாக விளங்கியது. திராவிட கொள்கை சிந்தனையாளர்கள் கூட்டம் உரிய பலன்களை விரைவில் விளைவித்திடும்.
தொகுப்பு: வீ.குமரேசன்
No comments:
Post a Comment