புண்ணியம், சொர்க்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

புண்ணியம், சொர்க்கம்

10.06.1934   - குடிஅரசிலிருந்து...

புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.

நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால் கைகளைக் கட்டிப் போட்டு வாயில் மண்ணை அடைத்து விதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று போட்டால் புண்ணியமும் சொர்க்கமும் கிடைத்து விடும் போல் இருக்கிறது. வேண்டுமானால் சில மந்திரங்களையும் சொல்லி விடலாம். இதில் நமக்கு இரண்டு வித லாபம் போலும்.

சொர்க்கம், நரகம் என்பவை சோம்பேறிகளின் வயிற்றுப் பிழைப்பு சாதனங்கள் என்று பல தடவை நான் சொல்லி வந்திருக்கிறேன்.

பாடுபட்டு உழைத்தவன் பொருளைக் கையைத் திருகிப் பிடுங்கிக் கொள்வதற்குப் பதிலாக சொர்க்க நரகங்கள் என்னும் பூச்சாண்டிகளைக் காட்டி பயப்படுத்திப் பிடுங்கிக் கொள்ளப்படுகின்றன.

இப்படிப்பட்ட சொர்க்க நரகத்துக்கு உண்மையான அர்த்தம் நல்ல விதத்தில் செய்ய வேண்டுமானால் மனிதனின் மூர்க்க சுபாவமும் பழிவாங்குந் தன்மையும் சொர்க்க நரகம் என்னும் வார்த்தைகளால், கற்பனைகளால் பிரதிபலிக்கின்றது என்பதேயாகும்.


No comments:

Post a Comment