மும்பை, டிச.23- ராகுல் காந்தியின் நடைப் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே, ஒன்றிய அரசு கரோனா வைரசை பரவ விட் டுள்ளதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
கரோனா பரவலைக் காரணம் காட்டி ராகுல் காந்தியின் நடைப் பயணத்தை ரத்து செய்யுமாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட வியா கடிதம் எழுதிய நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தனது அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ வில் காட்டமான விமர்சனத்தை வைத் துள்ளது.
அதில், “ராகுல் காந்தி தனது ஒற் றுமை நடைப்பயணத்தின் 100 நாள்களை நிறைவு செய்துள்ளார். அவருக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. ராகுல் காந்திக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பதை பார்த்தும் பாஜகவினரும், பிரதமர் நரேந்திர மோடியும் பயப்படுகின்றனர். அதனால்தான், ராகுலின் நடைப் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கான செயல்களில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. எதுவும் பலன் அளிக்காததால் கடைசி 'அஸ்தி'ரமாக கரோனா வைரசை ஒன்றிய அரசு பரப்பி விட்டுள்ளது.
அரசின் செயல்களை பார்க்கும் போது இப்படித்தான் தோன்றுகிறது. கரோனா அச்சத்தால்தான் ஒன்றிய அரசு இவ்வாறு கூறுகிறது என்றே வைத்துக் கொண்டாலும், 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை குஜராத்துக்கு அழைத்து, லட்சக்கணக்கானோரை கூடச் செய்தது யார்? இதே ஒன்றிய அரசுதானே. அப்போது உங்கள் (மோடி அரசின்) கரோனா விழிப்புணர்வு எங்கு போனது?” என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
இதேபோல அய்க்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமாரும் மோடி அரசை விமர்சித்துள்ளார்.
அவர்கள் (ஒன்றிய பாஜக அரசு) கரோனாவில் முதலில் ஏன் பின்வாங்கினார்கள்? இப்போது காங்கிரசார் நடைப் பயணம் போகிறபோது எதனால் திடீரென விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்தாக வேண்டும்.
நடைப்பயணத்திற்கு ஏன் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக் கிறார்கள்? அவர்கள் மட்டும் ஊர்வலங்கள் எல்லாம் நடத்துகிறார்களே, எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் பயணத்தை முடக்கத் திட்டமா?
ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
"உருமாறிய பி.எஃப்7 கரோனா வைரஸ் இந்தியாவில் ஜூலையில் கண்டறியப்பட்ட நிலையில், ராகுல் காந்திக்குக்கு ஒன்றிய அமைச்சர் புதன்கிழமை கடிதம் அனுப்பிவிட்டு, நோயின் தீவிரம் குறித்து பிரதமர் வியாழக்கிழமை ஆலோ சனையில் ஈடுபட்டுள்ளார்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால், நாட்டின் நலன் கருதி பயணத்தை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் புதன்கிழமை ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். மக்களிடம் மிகுந்த வரவேற்பும் செல்வாக்கும் பெற்றுவரும் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நிறுத்தவே ஒன்றிய அரசு இவ்வாறு செயல்படுவதாக குற்றஞ்சாட்டிவரும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதற்கு பதில் அளித்தும் வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை காலவரிசைப்படுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,, "இந்தியாவில் 4 பேரை பாதித்துள்ள சீனாவில் வேகமாக பரவி வரும் உருமாறிய ஓமிக்ரான் பி.எஃப்7 வகை வைரஸ், குஜராத் மற்றும் ஒடிசாவில் ஜூலை, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கண்டறியப்பட்டது.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் 21.12.2022 இது தொடர்பாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலைமை குறித்து ஆராய பிரதமர் நேற்று (டிச.22) ஆலோசனை நடத்துகிறார். நாளை டிச.24 ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் டில்லிக்குள் நுழைய இருக்கிறது. இப்போது உங்களுக்கு இந்த கால வரிசை புரிகிறதா?" என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் நிலைமையின் தீவிரம் குறித்து கவலை தெரிவித்து தனக்கு கடிதம் எழுதிய பின்னர், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே கடிதம் எழுதினேன் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் பயணத்தை குறிவைத்தை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
சீனாவில் வேகமாக பரவி அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் உருமாறிய கரோனா வைரஸ் பி.எஃப் 7 வகை இந்தியாவிற்கு புதியது இல்லை. இந்த வைரசால் இதுவரை குஜராத்தில் மூன்று பேரும், ஒடிசாவில் ஒருவர் என நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் வேறு யாரும் பாதிக்கப்படவில்லை என ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த உருமாறிய வைரஸ் இந்தியாவில் ஜூலையில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment