2024 இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்று எச்சரிக்கிறார்!
சனாதன சக்தியை வீழ்த்திட ஆசிரியர் அய்யா பிறந்த நாளில் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம்!
தமிழர் தலைவர் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் போர் முரசு!
சென்னை, டிச.4 தந்தை பெரியாரும், கலைஞரும் இல்லாத காலத்தில், நமக்கு வழிகாட்ட நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா இருக்கிறார். சனாதன சக்தியை இந்தியாவில் வீழ்த்த தமிழர் தலைவரும், தளபதியும் இருக்கிறார்கள்; அனைவரும் ஒன்றிணைந்து வீழ்த்திட உறுதி ஏற்போம் என்று போர் முழக்கம் செய்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
கடந்த 2.12.2022 அன்று மாலை சென்னை கலை வாணர் அரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கருத்துரையாற்றினார்.
அவரது கருத்துரை வருமாறு:
பெருமதிப்பிற்குரிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிற்குத் தலைமை வகித்து வாழ்த்தி உரையாற்றி அமர்ந்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
வருகை தந்திருக்கின்ற நம் அனைவரையும் வர வேற்று உரையாற்றி சிறப்பித்திருக்கின்ற மானமிகு வீ.குமரேசன் அவர்களே,
தமிழர் தலைவர் அவர்களை வாழ்த்திப் பாராட்டி, உரையாற்றி அமர்ந்திருக்கின்ற சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய ஆர்.பிரியா அவர்களே,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் மதிப்பிற்குரிய தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் இரா.முத்தரசன் அவர்களே,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அய்யா காதர்மொய்தீன் அவர்களே,
காங்கிரஸ் கட்சிப் பேரியக்கத்தின் சார்பில் வாழ்த்தி சிறப்பித்திருக்கிற மதிப்பிற்குரிய அண்ணன் கோபண்ணா அவர்களே,
உரையாற்றவிருக்கிற திராவிட இயக்கப் போர்வாள் புரட்சிப் புயல் அண்ணன் வைகோ அவர்களே,
நிறைவாக நம்மிடையே சிறப்புரையாற்றவிருக்கிற ‘திராவிட மாடல்' ஆட்சி நிர்வாகத்தை இந்திய மண் ணுக்கு அறிமுகப்படுத்தி, சமூகநீதியை நிலைநாட்டி வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் தளபதி அவர்களே,
நன்றியுரையாற்றவிருக்கிற இன்பக்கனி அவர்களே,
சமூகநீதியைப் பாதுகாப்பதற்கு, சனாதனத்தை விரட் டியடிப்பதற்கு, தமிழ்ச் சமூகத்தைப் போர்க் களத்திற்கு அழைத்து அறைகூவல் விடுத்திருக்கிற அய்யா பெரியாரின் தத்துவ வாரிசு, கொள்கை வாரிசு தமிழர் தலைவர் அய்யா ஏற்புரை வழங்கவிருக்கிற ஆசிரியர் அவர்களே,
திரளாகக் கூடியிருக்கிற தமிழ்ச் சொந்தங்களே, சமூகநீதிப் போராளிகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
35 ஆண்டுகளாக தமிழர் தலைவரிடம் தொடர்பு கொண்டவன் நான்!
ஏறத்தாழ 35 ஆண்டுகளாக நான் தமிழர் தலைவர் அவர்களை அறிவேன். கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில், பெரியார் திடலுக்கு வருவதும், அவரைப் பார்ப்பதும், அவருடைய உரைகளைக் கேட்பதும், வாய்ப்புக் கிட்டினால், அவரை சந்தித்துப் பேசுவதும் என்கிற வகையில், 1985-1986 காலகட்டத்தில், அவரை அணுகி, அவரை நெருக்கமாக இருந்து கவனிக்கக் கூடியவனாக ஒரு வாய்ப்பைப் பெற்றவன்.
அப்பொழுது அவருக்கு 55 வயது. 35 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 90 அய் தொட்டிருக்கிறார். அப்பொழுது எந்த அளவிற்கு வேகமும், சுறுசுறுப்பும் இருந்ததோ, அதில் எள்ளளவும் குறையவில்லை என்பதுதான், இன்றைக்கு நாம் பார்க்கிற வியப்பிற்குரிய உண்மையாக இருக்கிறது. நமக்கே மலைப்பாக இருக் கிறது -தமிழர் தலைவர் அவர்களின் உழைப்பு.
இந்த சறுசுறுப்பும், இளமையும் தனக்கு எங்கிருந்து வந்தது என்பதை தன்னுடைய பிறந்த நாள் செய்தியிலே தமிழர் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.
எவருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு - ஒரு மாபெரும் போராளி, மாமனிதர் தந்தை பெரியார் அவர் களோடு, பல பத்தாண்டுகள் உடனிருந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு. அவருடைய அரும்பெரும் ஆற்றலை நேரிலே இருந்து கண்டு உணருவதற்கான ஒரு வாய்ப்பு.
அவருடைய செயல் திறத்தையும், அவருடைய சிந்தனை வலிமையையும் உடனிருந்து உணர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு நம்முடைய தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுக்குக் கிடைத்தது.
அவர் எழுதுகிறார், தமக்கு எப்படி இந்த இளமை வந்தது; இந்த சுறுசுறுப்பு வந்தது, இந்த ஓய்வறியாத உழைக்கும் உள்ளம் எப்படி உருவானது என்பதைத் தன்னுடைய பிறந்த நாள் அறிக்கையில் குறிப்பிடுகிறார்.
தந்தை பெரியாரிடம் பயின்ற உறுதி
‘‘வேலூர் மருத்துவமனையில் தந்தை பெரியார் சிகிச்சையில் இருந்தபொழுது, சுற்றுப்பயண தள்ளி வைப்பு அறிவிப்புச் செய்தி போடலாமா? என்று நாங்கள் கேட்டபொழுது, அதற்காக எங்கள்மீது கோபப்பட்டு இசைவு தர மறுத்தார். திரும்பிச் சென்று பிரச்சாரப் பணியைத் தொடரவே செய்யவேண்டும் என்ற முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. அருகிலிருந்து அதை அறிந்த தொண்டனாகிய என்னைப் போன்ற வர்கள், அவர் வயதைவிட குறைந்த நிலையில், இந்த 90 ஆம் ஆண்டை சாக்காகக் கூறி, முடங்கிவிடலாமா?
இந்த எண்ண ஓட்டமும், அதன் காரணமாக என்னுள் ஏற்பட்ட மாறாத உறுதியும், தொய்வின்றித் தொடர் பணி செய்திடவே, ஆணையிட்டு நாளும் வேலை வாங்கு கிறது.
அய்யா பெரியாரோடு நான் இருந்து பணியாற்றியதன் விளைவாக, எனக்குள் ஏற்பட்ட அந்த எண்ண ஓட்டம், மாறாத உறுதியை வழங்கியிருக்கிறது. அதனால் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்; உழைத்துக் கொண்டே இருக்கிறேன்'' என்று, தன்னுடைய ஓயாத உழைப்பிற்கும், மாறாத இளமைக்கும் இதுதான் காரணம் என்று தன் பிறந்த நாள் செய்தியிலே குறிப்பிட்டு இருக்கிறார்.
இன்னொரு இடத்திலே அவர் பதிவு செய்கிறார்,
‘‘வளமையை விரும்பி இந்தப் பொதுத் தொண்டுக்கு வரவில்லை. வளம் பெறலாம், பொருளாதார வளம் பெறலாம்; புகழ் வளம் பெறலாம் என்று வளமையை விரும்பி இந்தப் பொதுத் தொண்டுக்கு வரவில்லை. கொள்கைப் பரப்புதல் என்ற பணியால் கிட்டும் இள மையை, இனிமையை எண்ணியே இன்றும் உழைத்து, மகிழ்ச்சியை, வற்றாத சுரக்கும் வாய்ப்பாக உருவாக்கிக் கொள்கிறேன்'' என்கிறார்.
அவர் எப்படி பணியாற்றுகிறார் இந்த சுறுசுறுப்பை, இந்த இளமையை அவர் எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை அவர் சொல்லுகிறார்,
தமிழர் தலைவரின் இனிமைக்குக் காரணம்!
கொள்கைப் பரப்புதல் என்கிற பணியால், கிட்டும் இளமை, இனிமை -இந்த இளமை இங்கிருந்துதான் கிட்டுகிறது; இனிமை இங்கிருந்துதான் பொங்குகிறது. கொள்கைக்காகப் பணியாற்றுவது என்பதில் கிடைக்கிற அந்த இனிமை இருக்கிறதே, அதுதான் இளமைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
‘‘என்பால் பேரன்பும், பெரும்பாசமும் கொண்ட எண்ணற்ற தோழர்களின் எதையும் எதிர்பார்க்காத உழைப்பு'' என்று எடுத்துக் காட்டுகிறார்.
உடனிருக்கிற தோழர்களுடைய உழைப்பு என்பது - அந்த உழைப்பு எதையும் எதிர்பார்க்காத உழைப்பு'' என்கிறார்.
எனக்கு கிராம உதவியாளர் வேலை வாங்கிக் கொடுங்கள்; எனக்கு ரேசன் கடையில் வேலை வாங்கிக் கொடுங்கள்; அல்லது எனக்கு பேராசிரியர் வேலை வாங்கிக் கொடுங்கள்; அல்லது ஏதேனும் எங்களுக்கு ஓர் ஆப்ளிகேசன் செய்யுங்கள் என்று எதையுமே எதிர்பார்க்காமல், கொள்கைக்காக மட்டுமே, கருஞ்சட்டை அணிந்துகொண்டு, களத்திலே நிற்கிற தோழர்கள் தருகிற அந்த உழைப்பு இருக்கிறதே, ஒத்துழைப்பு இருக்கிறதே - எதையும் எதிர்பார்க்காத உழைப்பு - இந்த இளமைக்கு உரம் போட்டு நாளும் வளர்த்து வருகிறது.
ஓய்வு என்பது ஒருவகை நோய் என்கிறார் ஆசிரியர்!
என்னுடைய இளமை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்று சொன்னால், அது எங்கிருந்து வருகிறது என்றால், என்னோடு உடனிருந்து பணியாற்றக் கூடிய வர்களின், எதையும் எதிர்பார்க்காத அந்த ஈகம்தான், அந்தத் தியாகம்தான், அந்த ஒத்துழைப்புதான் என்று அய்யா அவர்கள் குறிப்பிடுகிறார்.
ஓய்வு என்பது ஒருவகை நோய் என்கிறார்.
60 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறவர்கள் பேசுகின்ற வார்த்தைகளில் பலம் குன்றிப் போயிருக்கும்; சலிப்பு இருக்கும்.
அரசு பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெற்றாலே, தன்னுடைய வாழ்க்கை முடிந்து போய்விட்டதுபோன்று ஒரு உளவியலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஓய்வு பெற்றுவிட்டேன், சும்மா உட்கார்ந்திருக்கிறேன் என்று வெறும் சலிப்பையும் அவர்களுடைய சொல்லில் நாம் பார்க்க முடியும்.
பேரப் பிள்ளைகளைத் தூக்கிக் கொஞ்சக் கூடிய வர்கள், பேரப் பிள்ளை தன்னைப் பார்த்து தாத்தா என்று அழைத்ததுமே, போச்சு, அவ்வளவுதான்! தாத்தா என்று சொன்னதுமே, பேரப் பிள்ளை தாத்தா என்று சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று உளவியலாக அவர்கள் ஒரு வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள்.
தாத்தா என்கிற அழைப்பே, உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படியே சில பேர் உட்கார்ந்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு பேரப் பிள்ளைகளின் கையைப் பிடித்து ஆங்காங்கே போகிறார்கள், 60, 65 வயதிலேயே!
ஓய்வு என்பது ஒருவகை நோய் என்று கருதி, 95 ஆம் ஆண்டுவரை உழைத்த நம் தலைவரை, அறிவாசானை எண்ணிடும்போது, எட்டிப் பார்க்கவே அஞ்சுகிறது சோம்பல்!
அவருக்கு எங்கிருந்து அந்த உந்துதல் வருகிறது, உத்வேகம் வருகிறது என்றால், 95 வயது வரையில், சிறுநீர் வழியும் பாத்திரத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, சுற்றுப்பயணம் செய்து இந்த மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிற - உழலுகிற சமூகத்தை -தமிழ்ச் சமூகத்தைத் தட்டி உசுப்பவேண்டும் என்று போராடினாரே, அந்தத் தலைவனை எண்ணிடும்போது, எட்டிப் பார்க்கவே அஞ்சுகிறது சோம்பல்.
தமிழர் தலைவரின் இளமைக்குக் காரணம்!
இந்தத் தலைமுறையைப் பார்க்கிறார் - அவரோடு இருந்த சம காலத் தலைவர்கள் ஒருபுறம் இருந்தாலும், அடுத்தடுத்து வருகின்ற புதிய தலைமுறையைப் பார்க்கிறார்.
பிரச்சாரம், போராட்டங்கள் என்று பெரியாரைப் பேராயுதமாகக் கொண்டு, இளைஞர்கள் இன்று நம் பட்ட றையின் பகுத்தறிவுப் படைக்கலன்களாகி, ஆயத்தமாகி நிற்பது - அவர்கள் தயாராகி நிற்பது - படை வீரர்களாக களத்திலே நிற்பது - சனாதனத்தை எதிர்க்கின்ற களத்திலே, சமூகநீதிப் போர் வாளை ஏந்தி நிற்பது, அந்தக் காட்சி வயதைக் குறைத்து வாழ்வைப் பெருக்கும் வசீகரத்தைத் தருகிறது.
கலைஞர் நடை -
வயதைக் குறைத்து வாழ்வைப் பெருக்கும் வசீ கரத்தைத் தருகிறது.
தமிழர் தலைவர் எழுதுகிறார் என்றால்,
‘‘இந்தப் பட்டறையில் இருந்து புறப்படுகிற இளை ஞர்கள், இளம்பெண்களுடைய பட்டாளம், அவர்கள் படைவீரர்களாக, சனாதன சக்திகளை எதிர்த்து நிற்கும்பொழுது, பெரியாரைப் பேராயுதமாகக் கொண்டு களத்திலே நிற்கின்றபொழுது, அதைப் பார்க்கின்ற பொழுது எனக்கு வயது குறைகிறது'' என்று எழுது கின்றார்.
நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள் அப்படி எழுதிவிட்டு, அதோடு நின்றுவிடவில்லை, நமக்கு மேசேஜ் (செய்தி) தருகிறார்.
தமிழர் தலைவர் தரும் பிறந்த நாள் செய்தி என்ன?
நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உள்ளிட்ட நம் அனைவருக்கும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும், இந்தத் தமிழ் மண்ணைப் பாதுகாக்க வேண்டும், சமூகநீதியைப் பாதுகாக்கவேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு 90 வயது இளைஞரான தமிழர் தலைவர் அவர்கள், நமக்கு ஒரு செய்தி தருகிறார்.
2024 ஆம் ஆண்டு வரப் போகிற தேர்தல் வெறும் ஓர் அரசியல் தேர்தல் அல்ல என்று நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார். பிறந்த நாள் செய்தியாகச் சொல்லுகிறார்.
2024 ஆம் ஆண்டு வரப் போகிற பொதுத்தேர்தல் வெறும் ஓர் அரசியல் தேர்தல் அல்ல; அதை ஒரு பரம் பரை யுத்தமான சமூகப் போரின் புதிய பரிமாணமாகவே பார்க்கவேண்டும்.
வார்த்தையை நாம் அடிக்கோடிட்டுப் பார்க்க வேண்டும் தோழர்களே! திரும்பத் திரும்ப நாம் உச் சரிக்கவேண்டும்; பேசவேண்டும்; உரையாடவேண்டும்; விவாதிக்கவேண்டும்.
ஒரு பரம்பரை யுத்தமானது - இன்றைக்கு நேற்றைக்கு உருவானதல்ல. பல தலைமுறைகளாக, பரம்பரை பரம் பரையாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தத்துவப் போர்.
2024 மக்களவைத் தேர்தலை எப்படிப் பார்க்கிறார் தமிழர் தலைவர்!
2024 ஆம் ஆண்டு வரப் போகிற தேர்தலை அவர் எப்படிப் பார்க்கிறார் என்பதைப் பாருங்கள். ஒரு சமூக யுத்தமான சமூகப் போரின் புதிய பரிமாணமாகவேப் பார்க்கவேண்டும்.
திராவிடர் கழகம் என்பது தேர்தல் இயக்கமல்ல; தேர்தலில் பங்கேற்கிற இயக்கமல்ல; தேர்தலைப்பற்றி கவலைப்படக் கூடிய இயக்கமல்ல என்று நாம் சொன்னாலும், தேர்தலை நாம் சாதாரணமாகப் பார்க்கக் கூடாது; தேர்தலில் ஈடுபடுகிற கட்சிகள் அதைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதாமல், 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகிற நாடாளுமன்றப் பொதுத் தேர்தல், சராசரியான ஒரு வழக்கமான தேர்தல் அல்ல - அது நம் பரம்பரைகளுக்கிடையே நடக்கிற தத்துவப் போருக்கான ஒரு புதிய பரிமாணமாகப் பார்க்கவேண்டும்.
நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் அதைத் தாண்டி, இன்னொன்றையும் சொல்லுகிறார்.
உயர்ஜாதி ஏழைகளுக்குக் 10% இட ஒதுக்கீட்டின் பின்னணி என்ன?
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற சாக்கில், சமூகநீதியை விரட்ட, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற ஒட்டகம் நம்மு டைய சமூகநீதி கூடாரத்திற்குள் தலைநீட்டி, நம்மை வெளியேற்றும் தந்திர வியூகத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்குகிறது.
10 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டும் என்று நாம் நினைக்கிறோம்.
இது சமூகநீதியைக் குழிதோண்டி புதைத்துவிடும். அவர்கள் வெறும் ஏழை, எளிய மக்களுக்குச் செய்கி றேன் என்பது - கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ். இதை செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பார்வை வேறு; ஆதரிக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியின் பார்வையும் வேறு.
ஏழை மக்களுக்காக செய்யட்டும் என்கிற அடிப் படையிலே, ஒரு வர்க்கப் பார்வையின் அடிப்படையில், அதை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அவர்கள் எடுக் கிறார்கள்.
இவர்கள் பார்வையும், அவர்களுடைய பார்வையும் ஒன்றல்ல. ஆர்.எஸ்.எஸ். பார்வை என்பது, ஏழைகளுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற பார்வை அல்ல.
உயர்ந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு- அதை அவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்கிற பெயரில் கொண்டு வருகிறார்கள்.
எஸ்.டி.,க்கு இட ஒதுக்கீடு இருக்கிறபொழுது,
எஸ்.சி.,க்கு இட ஒதுக்கீடு இருக்கிறபொழுது,
எம்.பி.சி.,க்கு இட ஒதுக்கீடு இருக்கிறபொழுது,
ஓ.பி.சி.,க்கு இட ஒதுக்கீடு இருக்கிறபொழுது,
எஃப்.சி.க்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நிலைப்பாடு.
அதை நேரிடையாகச் சொல்லாமல், பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினர் என்கிற பெயரில், அதைக் கொண்டு வருகிறார்கள்.
அதன் பொருள் என்னவென்றால், சமூகநீதியின் கோட்பாட்டைச் சிதைப்பது.
சமூகநீதிக் கோட்பாடு என்பது பொருளாதார மேம் பாட்டிற்கானது அல்ல. சமூக உளவியல் மேம்பாட்டிற் கானது.
இட ஒதுக்கீடு என்பது பொருளாதார மேம்பாட்டிற்கானதல்ல!
ஒருவன் தன்னைத் தாழ்ந்தவனாகக் கருதிக் கொண்டிருக்கிறானே, அவன் கல்விப் பெறுவதின்மூலம், வேலை வாய்ப்பைப் பெறுவதின்மூலம், அதிகாரத்தைப் பெறுவதின்மூலம் இனி நான் தாழ்ந்தவன் இல்லை என்று தன்னை உணர வைப்பது. அதற்காகத்தான் சமூகநீதி. அந்த உணர்விலிருந்து அவன் மீளுவது. அது உளவியல் மேம்பாட்டிற்கானதே தவிர, பொருளாதார மேம்பாட்டிற்கானது அல்ல.
சமூகநீதி என்பது, வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை. ஜாதி ஒழிப்புத் திட்டம்; வருண பாகுபாடு ஒழிப்புத் திட்டம்.
பெண்களை, ஆணாதிக்கத்திலிருந்து விடுவிக்கிற திட்டம் அது.
விளிம்பு நிலை மக்களை விடுதலைப் பெற செய் வதற்கான - அவர்களின் சமூகத் தகுதியை மேம்படுத் துவதற்கான திட்டம்.
பொருளாதார உதவி என்றால், கட்டணம் வாங்காமல், அவர்களுடைய பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்.
எஃப்.சி. கம்யூனிட்டியைச் சார்ந்த ஏழைகளுக்குக் கல்விக் கட்டணம் இல்லை; கல்லூரிக் கட்டணமில்லை. பிஎச்.டி.வரையில் இலவசம் என்று சொல்லுங்கள்; யாரும் எதிர்க்கப் போவதில்லை.
அவர்கள் தொழில் செய்யவேண்டுமானால், கடன் தொகைக் கொடுங்கள்; விஜய்மல்லையாவுக்குக் கொடுத் ததைப்போல, ஆயிரம் கோடி ரூபாய் அல்ல - ஒரு லட்சம், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்துப் படிக்க வையுங்கள்; பத்து லட்சம், இருபது லட்சம் கொடுத்து படிக்க வையுங்கள்; காலர்ஷிப் தாருங்கள் - அதுதான் ஏழைகளுக்குச் செய்யத் தகுந்தது.
அல்லது அவர்கள் விவசாயம் செய்யத் தயாராக இருந்தால், ஆளுக்கு அய்ந்து ஏக்கர் நிலம் கொடுங்கள்; இப்பொழுதாவது அவர்கள் ஏர் ஓட்டட்டும்; மாடு பிடித்துப் பார்க்கட்டும். இடது எப்படி கட்டுவது? வலது எப்படி கட்டுவது? என்று கற்றுக்கொள்ளட்டும். சாணி வாறட்டும்; தீனி அறுக்கட்டும்; அறுவடைக்குப் போய் நிற்கட்டும்; களத்திலே இறங்கட்டும்; சேற்றிலே கால் வைக்கட்டும். அவையெல்லாம் என்னவென்றே தெரி யாதே, தலைமுறை தலைமுறையாக.
ஆகவே, அவர்களுக்கு அய்ந்து ஏக்கர் நிலம் கொடுக்கட்டும்; அது வறுமை ஒழிப்புத் திட்டம்.
கல்வியை இலவசமாக வழங்குங்கள் - அது வறுமை ஒழிப்புத் திட்டம்.
குடிசைத் தொழிலுக்குக் கடன் உதவித் தாருங்கள் - அது வறுமை ஒழிப்புத் திட்டம்.
வெளிநாட்டிற்கு அனுப்பிப் படிக்க வையுங்கள் - அது வறுமை ஒழிப்புத் திட்டம். இது ஏழைகளுக்குச் செய்வது.
சமூகநீதிக்குக் குழிதோண்டும் திட்டம்!
ஆனால், அவர்களின் நோக்கம், எஃப்.சி.க்கும் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதுதான். அதைவிட முக்கியமாக பொருளாதார அளவுகோலின் அடிப் படையில் இட ஒதுக்கீடு தருவது என்பதுதான் சரியானது என்கிற உரையாடலை உருவாக்குவது - அதன்மூலம் சமூகநீதியைக் குழிதோண்டி புதைப்பது. அதுதான் அவர்களுடைய மறைமுகச் செயல்திட்டம்.
அதைத்தான் நம்முடைய ஆசிரியர் சொல்கிறார், இந்த ஒட்டகம் சமூகநீதி கூடாரத்திற்குள்ளே தலையை நீட்டுகிறது; பிறகு நம்மை வெளியேற்றி விடும்.
எவ்வளவு பொறுப்புணர்வோடும், தொலைநோக்குப் பார்வையோடும், பெரியாரின் பார்வையோடு, அம் பேத்கரின் பார்வையோடு தமிழர் தலைவர் அவர்கள் அதை விளக்குகிறார் என்பதை நாம் உணரவேண்டும் தோழர்களே!
சமூகநீதி, பாலியல் நீதி, மாநில உரிமை நீதி மற்றும் மனிதநேய நீதி இவற்றிற்கு ஆபத்துத் தொடர்ந்த நிலையில் உள்ளது - இந்த ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில்.
பி.ஜே.பி. ஆட்சி என்று எழுதவில்லை -
தோழர்களே கவனிக்கவேண்டும், டில்லியில் நடப்பது பி.ஜே.பி. ஆட்சி அல்ல; ஆர்.எஸ்.எஸ். ஆட்சி. இரண் டும் ஒன்றுதானே என்று நாம் புரிந்துகொண்டிருந்தாலும், எளிய மக்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
மற்ற கட்சிகளைப் போன்றதல்ல பி.ஜே.பி. - எச்சரிக்கை!
தி.மு.க.வைப் போல, கம்யூனிஸ்ட் கட்சியைப் போல, காங்கிரஸ் கட்சியைப் போல, பி.ஜே.பி. என்பது ஒரு சராசரியான தேர்தல் அரசியல் கட்சி அல்ல. தேர்தலில் நின்று, வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றி, ஏழை, எளியவர்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்ப தல்ல அவர்களுடைய நோக்கம்.
அவர்களுடைய நோக்கம், கோல்வால்கரின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் - செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான். வருணாசிரமப் பாகுபாட்டை நிலைப்படுத்த வேண்டும் என்பதுதான்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், உருவாக்கப் பட்ட இந்த சமூக ஒழுங்கை, அப்படியே தக்க வைக்கவேண்டும் என்பதுதான்.
சில 10 ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்ட இந்த சின்னச் சின்ன நெகிழ்வுத் தன்மையால், கொஞ்சம் பேர் படித்திருக்கிறார்கள். ஒரு சதவிகிதம், இரண்டு சதவிகிதம் என்று ஒரு சமூகத்திலிருந்து மேம்பட்டு வந்திருக் கிறார்கள். 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு,
வெறும் 7 பத்தாண்டுகளில் நாம் கல்வி பெறுவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
2 ஆயிரம் ஆண்டுகளாக, கல்வி மறுக்கப்பட்ட வர்களுக்கு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு, அதிகாரம் மறுக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு கோபம் வரவேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். ஆனால், நமக்குக் கோபம் வரவில்லை.
ஏனென்றால், அதுதான் அவர்களின் சனாதன அரசியல். அந்த சனாதன அரசியலைப் புரிந்து கொள்ளுகிற சிக்கல் நமக்கு இருக்கிறது.
ஆசிரியர் அய்யா தரும் எச்சரிக்கை!
இந்த இடத்தில், நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை அம்பலப்படுத்தி நமக்கு ஒரு எச்சரிக்கை செய்கிறார்.
நமக்கு இங்கே ‘‘சமூகநீதி திராவிட மாடல் ஆட்சி'' நல்வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது என்பதை அந்த பிறந்த நாள் செய்தியில் எழுதுகிறார்.
நல்லவேளை, நமக்கு இங்கு ஒரு நல்வாய்ப்பாக தமிழ்நாட்டில், திராவிட மாடல் ஆட்சி, நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் அமைந்துள்ளது.
இவ்வளவு பெரிய ஆபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது; பேரிடரை நாம் எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்; தமிழ்நாட்டை சூது சூழ்ந்து வருகிற சூழலில், நல் வாய்ப்பாக நமக்கு ஒரு முதலமைச்சர், திராவிட மாடல் ஆட்சி நிர்வாகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துகிற ஆற்றல் வாய்ந்த முதலமைச்சர் கிடைத்திருக்கிறார்.
நமது இலக்கு நோக்கிய இணையற்ற ஆட்சியாக அது இருப்பதால், இப்பெரும் அறப்போரில், களங்களில் சட்டப்போராட்டம் போன்றவற்றை, ஆட்சி, சட்ட வியூகங்கள்மூலம் சந்திப்பதோடு, சரித்திரமும் படைக்க இந்த ஆட்சி தவறவில்லை.
கலைஞர் காலத்தில் நடைபெற முடியாத - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டத்தை நமது தளபதி செயல்படுத்திக் காட்டியுள்ளார்!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை இன்றைக்கு நடைமுறைப்படுத்துகிற வாய்ப்பை நம்முடைய அண்ணன் தளபதி அவர்கள் பெற்றிருக்கிறார்.
கலைஞர் காலத்தில் நிறைவேறாத கனவாக இருந்ததை, இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். எண்ணிக்கையில் மிக சொற்பமாக இருக்கலாம்; அதை விரிவுபடுத்தவேண்டும்.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன; இந்த 48 ஆயிரம் கோவில்களிலும், ஒரு கோவிலுக்கு ஒருவர் என்கிற முறையில், அர்ச்சகரை நியமித்தால், 48 ஆயிரம் அர்ச்சகர்கள் கோவிலின் கருவறைக்குள் நுழையக்கூடிய வாய்ப்பு.
ஈராயிரம் ஆண்டுகால போராட்டத்தின் வெற்றி என்பது அங்கேதான் அடங்கியிருக்கிறது.
அவன் பல்கலைக் கழகத்தில் அடியெடுத்து வைப்பதைவிட,
அவன் ஓர் அறிவியல் கூடத்தில் அறிவியல் விஞ்ஞானியாக அடியெடுத்து வைப்பதைவிட,
அவன் துணை வேந்தர் இருக்கையில் அமர்வதைவிட,
அவன் முதலமைச்சர் நாற்காலியில், அண்ணன் அமர்ந்திருப்பதைப்போல, அமர்வதைவிட, கோவிலின் கருவறைக்குள் நுழைவதுதான் இங்கே மிகப்பெரிய சவால். அதுதான் மிகப்பெரிய வெற்றி!
சூத்திரர்களின் அரசே என்று பிரகடனப்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்!
இராஜாஜி அமர்ந்த நாற்காலியில், சூத்திர வகுப்பைச் சேர்ந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அமர்ந்தார் என்பது ஒரு வரலாறாகப் பேசப்பட்டது.
அன்றே இந்த ஆட்சியைப் பார்த்து, இது மூன்றாந்தர ஆட்சி என்று கிண்டல் செய்தபொழுது,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுந்து, ‘‘நண்பர் ஹண்டே, திருத்திக் கொள்ளவேண்டும்; இது மூன்றாந்தர ஆட்சியல்ல, நாலாந்தர ஆட்சி - சூத்திரர்களால் ஆளப்படுகிற ஆட்சி'' என்று பதிலடி கொடுத்தாரே, அந்த ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்பது ஒரு வெற்றி!
அதற்காகவே அவரைப் பாராட்டி, அண்ணா சாலையில், புகாரி ஓட்டலுக்கு அருகே, தலைவர் கலைஞரின் சிலையைத் திறந்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.
அந்த இடத்தில் இன்றைக்கு சிலை இல்லாமல் போயிருந்தாலும்கூட, அதே அண்ணா சாலையில், நம்முடைய தளபதி அவர்கள், மிகப் பிரம்மாண்டமான முறையில், முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையை, அண்ணாவிற்கும், பெரியாருக்கும் இடையே இன்றைக்கு நிறுத்தியிருக்கிறார், நிறுவியிருக்கிறார்.
அந்தக் கலைஞர் சொன்னார், அய்யா பெரியாரின் நெஞ்சில் ஒரு முள் அப்படியே இருக்கிறது - அந்த முள்ளை நீக்க முடியாமல் போய்விட்டது என்று வருந்திக் கொண்டிருந்தார்.
அந்த முள்ளை எடுக்கிற வாய்ப்பு இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதிக்குக் கிட்டியிருக்கிற சூழலில், 48 ஆயிரம் அர்ச்சகர்களை உடனடியாக நாம் நியமிக்கவேண்டும்.
இது இந்திய மாநிலங்களுக்கே ஓர் எடுத்துக்காட்டாக, பிற மாநிலங்கள் பின்பற்றக் கூடிய அளவிலே அது அமையும்.
சனாதனம் என்பது மயக்க பிஸ்கெட் - என்று ஆசிரியர் சரியாகவே சொல்லியிருக்கிறார்!
சனாதனம் என்பது மயக்க பிஸ்கெட் என்று ஓரிடத்திலே நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.
இந்த மக்கள் அப்படித்தான் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களை மீட்பதற்கு நாம் போராடவேண்டி இருக் கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்திய அரசியல் மண்டல் கமிசனுக்கு முன்பு - மண்டல் கமிசனுக்குப் பின்பு என்று ஆய்வு செய்யவேண்டிய ஒன்று.
மண்டல் கமிசன் பரிந்துரைக்கு முன்னால், சமூகநீதிக்கு மிகப்பெரிய அளவிலே அச்சுறுத்தல் இல்லை.
எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு இட ஒதுக்கீடு என்பது நடைமுறையில் இருந்தது.
மாநில அளவில், மாநில அரசு, மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானித்து இருந்தது.
ஒன்றிய அரசு, அகில இந்திய மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையிலே ஷெட்யூல் காஸ்ட், ஷெட்யூல் டிரைப்ஸ் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிக் கொண்டிருந்தது கல்வியிலும், வேலை வாய்ப்பிலும். பொதுத் துறை நிறுவனங்களில், ஒன்றிய அரசு நிறுவனங்களில் வழங்கிக் கொண்டிருந்தது.
அது அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட ஒன்று; அரசியல் நிர்ணய சபையிலும் பேசப்பட்ட ஒன்று; நீண்ட நெடுங்காலமாக வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகம் என்கிற முறையிலே பெரிய எதிர்ப்பு இல்லாமல், அது நடைமுறைக்கு வந்துவிட்டது.
நடைமுறையில் நூறு சதவிகிதம் இல்லை என்பது வேறு; 10 சதவிகிதமே இல்லை என்பது வேறு. ஆனால், பெரிய எதிர்ப்பு இல்லாமல், அது நடைமுறையில் இருந்தது.
மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தியதற்காக வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த கூட்டம் எது?
முதன்முதலாக, மண்டல் பரிந்துரை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு வருகிறது.
அதை நடைமுறைப்படுத்தினால் தன்னுடைய ஆட்சி கவிழும் என்கிற நிலையில், துணிந்து வி.பி.சிங் அவர்கள் அதை செய்து காட்டினார்.
அந்தத் துணிச்சல் அவருக்கு இருந்தது. அவர் தமிழ் மண்ணில் பிறக்கவில்லை; பெரியார் இயக்கத்தில் இருக்கவில்லை. அவர் ஒரு ராஜபரம்பரை குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும்கூட, சமூகநீதிப் பார்வை கொண்டவராக இருந்த காரணத்தினால், ஓ.பி.சி., மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நான் நடை முறைப்படுத்துவேன்; இதனால், ஆட்சியே கவிழ்ந்தாலும் நான் கவலைப்படமாட்டேன் என்று துணிந்து வி.பி.சிங் அவர்கள் ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீட்டை அறிவிப்புச் செய்தார்.
அதன் பிறகுதான் இந்திய நாட்டு அரசியல் மாறுகிறது. அத்வானி அதை எதிர்த்து ரத யாத்திரையை அறிவிக்கிறார். அது ரத்த யாத்திரையாக நடந்து முடிந்தது. அதனுடைய தொடர்ச்சிதான் பாபர் மசூதி இடிப்பு. பாபர் மசூதி இடிப்பின் விளைவாகத்தான் பி.ஜே.பி. ஆட்சிக்கு வருகிறது.
அதன் பிறகுதான் அவர்கள் மதவழி தேசியத்தைக் கட்டமைப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள்.
ஓ.பி.சி., மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் சனாதன சக்திகள். இதை ஓ.பி.சி. தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்; எம்.பி.சி., தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
யார் பக்கம் நிற்கிறீர்கள்?
ஓ.பி.சி., பிள்ளைகளுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு என்று உறுதிப்படுத்திய வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்களோடு எப்படி உங்களால் கைகோர்க்க முடிகிறது? வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்களோடு எப்படி உங்களால் தேர்தல் களத்தில் கைகோர்த்து நிற்க முடிகிறது? அவர்களின் அரசியலுக்குத் துணை போக முடிகிறது? அவர்கள் சொல்லுகிற முழக்கத்தை இன்றைக்கு நீங்கள் திருப்பிச் சொல்லுகிற நிலை உருவாகி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
ஓ.பி.சி. மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வன்முறை, அத்வானி காலத்தில் நடந்தது. அப்பொழுதே பொருளாதார அளவுகோலை கொண்டு வரவேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுடைய அந்த செயல் திட்டத்தின் தொடர்ச்சிதான், இன்றைக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு. அந்தச் செயல் திட்டத்தின் தொடர்ச்சிதான், சமூகநீதிக்கு எதிரானவர்களின் அத்தனை சதித் திட்டங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
சமூகநீதியை நாம் தவறவிட்டுவிட்டால், ஒட்டுமொத்த சமூகமும், விளிம்பு நிலைச் சமூகங்கள் - ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மைனாரிட்டி சமூகங்கள் மிகக் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும்.
வரும் மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி பெறுவோம் - நமது தளபதி தலைமையிலே!
இந்த ஆபத்தான சூழலில், 2024 ஆம் ஆண்டில், மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தத் தேசத்தை எவராலும் காப்பாற்ற முடியாது. இது மிகப்பெரிய ஆபத்து. இதைத்தான் தமிழர் தலைவர் அவர்கள் இங்கே சுட்டிக்காட்டுகிறார்.
எனவே, தமிழ்நாட்டில் நாம் 40-க்கு 40 அய் நாம் பெறுவோம்- வெற்றி பெற்று சாதிப்போம் தளபதி அவர் களின் தலைமையில் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
மூன்றாவது இடத்தில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை முதலிடத்திற்குக் கொண்டு வந்து வெற்றி பெற வைத்தவர் - சாதனை படைத்தவர் நம்முடைய தளபதி அவர்கள்.
கலைஞர் காலத்திலேயே அது ஒரு சரிவை சந்தித்தது என்பது வரலாற்று உண்மைதான், நாம் அறிவோம். அந்தக் கட்சியை இன்றைக்கு முதலிடத்திற்குக் கொண்டு வந்து, ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர வைத்து, சனாதன சக்திகளுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்தார். தி.மு.க.வை காப்பாற்றியது என்பது அவருக்கு மிகப்பெரிய சவால்!
தி.மு.க. அவ்வளவுதான், கலைஞருக்குப் பிறகு இது இருக்காது என்று பலரும் கணக்குப் போட்டார்கள்; அந்தத் தப்புக் கணக்கை உடைத்து எறிந்தவர் தளபதி அவர்கள்.
இந்தக் கட்சியை எவராலும் அசைக்க முடியாது, இன்னும் பல பத்தாண்டுகள் இந்தக் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் என்பதற்கான ஓர் ஆளுமையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது அவருக்குள்ள, அவருடைய தலைமைக்கான ஒரு சான்று.
தி.மு.க. தலைமை எவ்வளவு வலிமைமிக்கது தெரியுமா?
எவ்வளவு வலிமைமிக்க தலைமை அவருடைய தலைமை என்பதற்கு அடுத்து ஒரு சான்று - இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, காங்கிரஸ் - இடதுசாரிகளை இணைத்து ஒரு கூட்டணியைக் கட்டியது. வேறு எந்த மாநிலத்திலும் நிகழாதது.
மதச்சார்பற்ற ஒரு கூட்டணியைக் கட்டியமைத்தது - அவருடைய தலைமைக்கு மிகப்பெரிய ஒரு சான்று.
அதைவிட முக்கியமானது - 2019 இலும் மகத்தான வெற்றி; 2021 இலும் மகத்தான வெற்றி. இதுவரையில் அந்தக் கூட்டணியில் ஒரு சின்ன சிதறல்கூட ஏற்படாமல், கட்டுக்கோப்பாக வைத்திருப்பது.
அ.தி.மு.க. கூட்டணி இப்பொழுது இல்லை - ஆளாளுக்கு சிதறிப் போய்விட்டார்கள். இனிமேல்தான் அவர்கள் மெகா கூட்டணியைக் கட்டப் போகிறார் களாம்?
அது என்ன மெகா கூட்டணி என்று ஒருவர் கேட்டார்.
ஓ.பி.எஸ்.சும்,. இ.பி.எஸ்.சும் சேர்ந்தாலே அது மெகா கூட்டணிதான். அந்த முயற்சிதான் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன்பிறகுதான் பி.ஜே.பி., அதன்பிறகுதான் பா.ம.க., அதன்பிறகுதான் தே.மு.தி.க. என்று ஆளுக்கொரு திசையில் கிடக்கிறார்கள். அவர்களை சேர்ப்பது என்பதே அவர்களுக்கு ஒரு பெரிய போராட்டம்.
ஆனால், தி.மு.க. கூட்டணி என்பது கட்டுக்கோப்பாக இருக்கிறது. இது தளபதியினுடைய தலைமைக்கான ஒரு சான்று. ஆகவே, இந்தத் தலைமையைப் பயன்படுத்தி, அகில இந்திய அளவில், ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதும், சனாதன சக்திகளைத் தனிமைப் படுத்துவதும் இன்றைய காலத்தின் தேவையாக இருப்பது என்பதை இந்த நேரத்தில், தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளில் உணர்வோம்.
தமிழர் தலைவர் இன்னும் பத்தாண்டு இளமை முறுக்கோடு பணியாற்றுவார்!
தமிழர் தலைவர் அவர்கள், எல்லோரிடமும் எழுந்து எழுந்து 90 வயதிலும் நிற்கிறார். நம்மால் முடியவில்லை. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார், நம்முடைய தளபதி போன்று. அதுவும் ஒரு வகைக் கலைதான்; அது ஒரு ஆற்றல்தான்.
இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவார் என்பதை அவருடைய பணிகளில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. தளபதிக்கு தமிழர் தலைவர் ஒரு பெரிய வாய்ப்பு.
பெரியார் இல்லாத - கலைஞர் இல்லாத
ஒரு சூழலில், ஆசிரியர் நமக்கு இருக்கிறார்!
கலைஞர் இல்லாத நேரத்தில், பெரியார் இல்லாத ஒரு சூழலில், தமிழர் தலைவர் அவர்கள், தி.மு.க.விற்கு மட்டுமல்ல, விடுதலைச் சிறுத்தைகளுக்கும், இடதுசாரி களுக்கும், இதர ஜனநாயக சக்திகளுக்கும் ஒரு பேரரண்.
ஆகவே, இந்த வாய்ப்பை நாம் தளபதி அவர்களின் தலைமையில் பயன்படுத்திக் கொள்வோம். சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம். தமிழ் மண்ணை மட்டுமல்ல, இந்திய தேசத்தைப் பாதுகாப்போம் என்று சொல்லி, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளன் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment