‘சாமிகளை மீட்கும் ஆசாமிகள்!' அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்கச்சிமடம் கோயில் கிருஷ்ணர் சிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

‘சாமிகளை மீட்கும் ஆசாமிகள்!' அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்கச்சிமடம் கோயில் கிருஷ்ணர் சிலை

சென்னை,டிச.12- ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் உள்ள கோயிலில் 56 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கிருஷ் ணர் சிலை, அமெரிக்காவில் உள்ள அருங் காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அந்தச் சிலையை மீட்பதற்குரிய நடவடிக் கையில் தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தங்கச்சிமடம் ஏகாந்த ராமசாமி கோயிலில் உள்ள நடனமாடும் கிருஷ்ணர் சிலை, விஷ்ணு, சிறீதேவி, பூதேவி, மற்றொரு பூதேவி, விஷ்ணு ஆகிய 5 சிலைகள் திருடப் பட்டிருப்பதாக அந்தக் கோயில் நிர்வாக அதிகாரி ஜி.நாராயணி, கடந்த நவம்பரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் செய்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, அய்.ஜி.ஆர்.தினகரன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதை யடுத்து, சம்பந்தப்பட்ட கோயிலிலும், அந்தக் கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள், ஏற் கெனவே ஓய்வு பெற்றவர்களிடமும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசா ரணை செய்தனர்.

விசாரணையில், கோயிலில் இருந்து அந்த 5 சிலைகளும் கடந்த 1966 ஆம் ஆண்டே திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை யடுத்து சிலைத் திருட்டு குறித்து வழக்கைப் பதிவு செய்து, திருடப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை செய்தனர்.

இதில் உலோகத்தால் செய்யப்பட்ட நடன மாடும் கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் உள்ள ‘இண்டியானா பொலிஸ்’ கலை அருங் காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அருங்காட்சியகத்தில் உள்ள கிருஷ்ணர் சிலை ஒளிப்படமும், திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை ஒளிப்படமும் தொல்லியல் துறை வல்லுநர்கள் மூலம் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

இதில், அங்கு இருப்பது தங்கச்சிமடம் கோயிலில் திருடப்பட்ட சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தச் சிலையை மீட்பதற்கான நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் திருடு போன பிற 4 சிலைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘இண்டியானா பொலிஸ்’ கலை அருங் காட்சியகம் 1883-இல் மே ரைட் சிவால் என்பரால் தொடங்கப்பட்டது. இது, கலைப் படைப்புகள், ஓவியங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் தனியார் அருங்காட்சியம் ஆகும். இங்கு கலை வேலைப்பாடுகளுடன் கூடிய 137 கலைஞர்கள் உருவாக்கிய 453 அழகிய கலைப் பொருள்கள் உள்ளன.

No comments:

Post a Comment