- உண்மைக்குப் புறம்பாகக் கூறும் நிர்மலா சீதாராமன்
"யாரோ கொடுத்த புள்ளிவிவரத்தை நம்பிப் பேசியுள்ளார். ஆனால் அவர் கூறியது எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை. விதை விதைக்கும் முன்பே அறுவடையில் விளைந்ததற்கு கணக்குப் போடுவது போல் உள்ளது நிதி அமைச்சரின் நாடாளுமன்ற பேச்சு. வரும் ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் அதிகம் பாதிக்கப்படும். இதிலிருந்து மீள சில ஆண்டுகள் ஆகும்."
இந்தியா அடையும் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமைப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். இதற்கிடையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது.
ரிசர்வ் வங்கி விலைவாசி உயர்வு விகிதத்திற்கு என ஓர் உச்ச வரம்பு வைத்திருக்கிறது. நான்கு சதவீதம் என்பதுதான் அந்த வரம்பு. ரகுராம்ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோதும் அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருந்தபோதும் ஒரு விஷயத்தை முடிவுசெய்தார்கள். அதாவது விலைவாசி உயர்வு விகிதம் நான்கு சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். அதிலிருந்து 2 சதவீதம் உயரலாம் அல்லது குறையலாம். இந்த வரம்பைத் தாண்டினால், ரிசர்வ் வங்கி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி எச்சரிக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கால்வாசி மாதங்களில் அது ஆறு சதவீதத்திற்கு மேல் இருந்தது. ரிசர்வ் வங்கி கடிதம் ஏதும் எழுதவில்லை. கடந்த மாதம்தான் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதம் நாடாளுமன்றத்திற்கு எழுதப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் அந்தக் கடிதம் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், அப்படி தாக்கல் செய்யப்படவில்லை. விலைவாசி உயர்வைக் காட்டும் புள்ளிவிவரங்கள் குறைவாக இருக்கிறதென்றால், அதை வெளிப்படையாகக் காட்டவில்லை?
அக்டோபர் முதல் மார்ச் வரை வட இந்தியாவில் அறுவடைக் காலம். தானியங்கள் சந்தைக்கு வரும். ஆகவே அந்த காலகட்டத்தில் பொருட்களின் விலை குறையும். ஆனால், கடந்த ஆண்டு விலை உயர்ந்தது. அதனால், இந்த ஆண்டு விலைவாசி உச்சத்தைத் தொட்டது வரும் ஆண்டின் துவக்கத்தில் சில ஆண்டுகளிலும் இந்த விலைவாசி தாக்கம் இருக்கும்.
விலைவாசி உயர்வைச் சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. சமீபத்திலும் .35 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தும் வேலையை மிக காலதாமதமாக செய்கிறார்கள். இதை முன்பாகவே செய்திருந்தால் விலைவாசி ஏறியிருக்காது.
வட்டிவிகிதத்தை இவர்கள் உயர்த்தாததற்கு காரணம் - இந்த ஆட்சிக்கு நெருக்கமாக இருப்பவர்கள் நிறையக் கடன் வாங்கியுள்ளனர். வட்டி விகிதத்தை உயர்த்தினால், அவர்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கும். அதனால் தான் வட்டி விகிதத்தை அதிகரிக்கவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மிகவும் மந்தமாகவே உள்ளது. கரோனாவுக்குப் பிறகு, சிறு, குறு தொழில்துறையினர் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். கடன் வாங்க ஆளில்லை. தனியார் முதலீடு தொடர்ந்து குறைவாகவே இருந்துவருகிறது. கடந்த ஆண்டுதான் சற்று உயர்ந்தது. தனியார் முதலீடு உயர வேண்டுமென்றால் மக்களிடம் வாங்கும் திறன் வேண்டும்.
மக்களின் வாங்கும் திறன் உயராமல் முதலீடு செய்து பயனில்லை. கடந்த முறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதம் அதிகரித்தது. இதனை ஆராய்ந்து பார்த்தால், உற்பத்தி துறையில் நான்கு சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்திருக்கிறது. மக்களின் நுகர்வு உயர்ந்திருக்கிறது.
இது எப்படி நடந்தது என்றால் மத்திய தர வர்க்கத்தினரும் மேல்தட்டு வர்க்கத்தினரும் அதிக நுகர்வில் ஈடுபட்டனர். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அதிகம் நுகரப்பட்டன. உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை வாங்க ஆளில்லை. ஆகவே, பணம் மத்திய தர வர்க்கத்தினரிடமும் மேல்தட்டு வர்க்கத்தினரிடமும்தான் புழங்குகிறது.
இருசக்கர வாகனங்கள் விற்பனையாவதில்லை. கார்களிலும், பத்து லட்ச ரூபாய்க்கு அதிகமான விலையுள்ள கார்கள்தான் விற்பனையாகின்றன. இதுபோன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடிந்தவர்களே, இப்போது நுகர்வில் ஈடுபடுகிறார்கள். இதை ஏழை பணக்காரன் இல்லாத சமத்துவ மீட்சி என்பார்கள்.
இப்போது நாம் கவலைப்பட வேண்டியது விலைவாசியைக் குறைப்பதுபற்றித்தான். இதற்கு வட்டி விகிதம் உயர வேண்டும்.
வட்டி விகிதம் உயர்வதால், மக்கள் வங்கிகளில் பணத்தைச் சேமிப்பது அதிகரிக்கும் ஏனென்றால், மக்கள் இப்போது பங்குச் சந்தையில்தான் முதலீடுசெய்கிறார்கள். ஏனென்றால் வைப்பு நிதிக்கான வட்டி 5 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டு விட்டது. இது விலைவாசி உயர்வு விகிதத்தைவிடக் குறைவு. இது இழப்புதான். ஆகவே தான் மக்கள் தங்கள் பணத்தை வங்கியில் போட்டுவைக்காமல், பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். ஆறரை, ஏழு சதவீத வட்டி இருந்தால் மக்கள் வங்கிகளில்தான் பணத்தை முதலீடுசெய்வார்கள்? ஆகவே, வட்டி விகிதம் உயர்ந்தால் மக்களின் சேமிப்பு கண்டிப்பாக அதிகரிக்கும்.
பெட்ரோலின் விலையில் தலையிடவில்லை, பன்னாட்டுச் சந்தையில் விலை உயர்ந்தால், இங்கேயும் விலை உயரும், பன்னாட்டு சந்தையில் விலை குறைந்தால், இங்கேயும் விலை குறையும் என்றார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. தொடர்ந்து விலை அதிகரித்தது. இந்த நிலையில், மூன்று இடைத்தேர்தல்களில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள். அப்போதிலிருந்து விலை ஏற்றுவதை நிறுத்திவிட்டார்கள்.
இதற்கிடையில் ரூபாயின் மதிப்பு சரிய ஆரம்பித்தது. இதனால், கடந்த ஆறு மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்கிவருகின்றன. அவர்களுக்கு அரசு பணத்தைக் கொடுத்து வருகிறது. இப்போது பெட்ரோலியத்தின் விலை சரிந்துவிட்டது. 120 டாலரிலிருந்து 72 டாலருக்கு வந்துவிட்டது. ஆனால், இந்த ஆறு மாத இழப்பைச் சரிசெய்வதற்காக விலையை இறக்காமல் வைத்திருக்கிறார்கள். இப்போதைய சூழலில் பெட்ரோலின் விலையை லிட்டர் 80 ரூபாய்க்கு விற்கலாம். எரிவாயு உருளையின் விலையை 200 ரூபாய் அளவுக்குக் குறைக்கலாம்.
ஜிடிபி வளர்ச்சி 6.3 சதவீதம் என்கிறார்கள். Gross value addition என்பதுதான் மிக முக்கியமான எண். அது தற்போது 5.7ஆக இருக்கிறது. அதனோடு ஜிஎஸ்டி வரி வசூலை சேர்த்து, மானியங்களைக் கழிக்க வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி.
உற்பத்தி பெரிதாக அதிகரிக்கவில்லை. 5.6 - 5.7 சதவீதம் என்ற அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனால், ஜிடிபி வளர்ச்சி விதிகம் அதிகரித்திருப்பதற்கு முக்கியக் காரணம், வரி வசூல் அதிகரித்திருப்பதுதான். மேலும், மானியங்களும் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதனால்தான் ஜிடிபி வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கிறது.
மானியங்கள் என்பவை, சமூகத்தின் கீழ் நிலையில் உள்ள பிரிவினருக்குத்தான் வழங்கப்படுகின்றன. அதை நிறுத்தி விட்டாலோ, குறைத்தாலோ அவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இதனால், நுகர்வு பாதிக்கப்படும். நுகர்வு குறைந்தால், உற்பத்தி குறையும்.
அப்படியானால், ஜிஎஸ்டி வரி வசூல் எப்படி உயர்ந்தது? இதற்கு இரு காரணங்கள், விலைவாசி உயர்ந்தால் ஜிஎஸ்டி வசூலும் அதிகரிக்கும். இரண்டாவதாக, இறக்குமதி அதிகரித்ததால், அதன் மீது கிடைத்த ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருக்கிறது. அந்த வரி 25 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. வசதியானவர்களே இறக்குமதி பொருட்களை நுகர முடியும். அதுதான் நடந்திருக்கிறது.
இதில் பொறாமைப்பட ஒன்றுமில்லை ஜிடிபி எப்படி உயர்ந்தது என்று பார்த்தோம். இதற்கு நடுவில் மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. வேலையில்லாதோர் விகிதம் 43 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்திருக்கிறது.
ஏற்றுமதி சரிந்திருக்கிறது. இறக்குமதி உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மாதங்களில் 22 மாதங்களில் விலைவாசி உயர்வு 6 சதவீதத்திற்கு மேல் இருந்திருக்கிறது. தொழில்துறை உற்பத்தி குறைந்திருக்கிறது.
பெங்களூரில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட பிரதமர், இதுதான் தொழில்நுட்ப யுகம் என்று குறிப்பிட்டார். ஆனால், அதற்குப் பிறகு எல்லா புது நிறுவனங்களும் ஆட்குறைப்பைத் துவங்கியிருக்கின்றன. பைஜூஸ், ஓலா, ஸ்விக்கி, ஊபர் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பை அறிவித்திருக்கின்றன. பல புது நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தள்ளுபடி செய்தாலும், வசூலிக்கும் முயற்சிகளை நிறுத்த மாட்டோம் என்கிறார் நிதியமைச்சர். ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வளவு வசூலித்திருக்கிறார்கள்? 10 சதவீதம் அளவுக்கு, அதாவது வெறும் ஒரு லட்சம் கோடி ரூபாய்தான் வசூலித்திருக்கிறார்கள். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
5.7 சதவீதம்தான் உண்மையான வளர்ச்சி. மறைமுக வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. மானியங்கள் குறைக்கப் பட்டிருக்கின்றன. மாணவர்களுக்கான பல உதவித் தொகைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏன் படிப்பில் கை வைக்கிறீர்கள்? சிலர் மட்டும் படித்தால் போதும் என நினைக்கிறார்கள்.
நிர்மலா சீதாராமன் தன்னுடைய பாணியில் யாரோ கொடுத்த புள்ளிவிபரத்தை நம்பி பேசியுள்ளார். ஆனால் அவர் கூறியது எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை, விதை விதைக்கும் முன்பே அறுவடையில் விளைந்ததற்கு கணக்குப் போடுவது போல் உள்ளது நிதி அமைச்சரின் நாடாளுமன்ற பேச்சு. வரும் ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் அதிகம் பாதிக்கப்படும். இதிலிருந்து மீள சில ஆண்டுகள் ஆகும்.
No comments:
Post a Comment