காசி தமிழ் சங்கமம் தமிழுக்கா, கட்சி வளர்ச்சிக்கா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

காசி தமிழ் சங்கமம் தமிழுக்கா, கட்சி வளர்ச்சிக்கா?

ஜே.ஆர்.வி.எட்வர்ட்

ஒரு மாத காலம் நடைபெறவுள்ள பெருநிழ்வான காசி தமிழ் சங்கமத்தை பிரதம அமைச்சர் நரேந்திர மோடி 2022 நவம்பர் 19, சனிக்கிழமையன்று காசியில் தொடங்கிவைத்தார். ஒன்றிய அரசின் கல்வித்துறை இந்நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. ஒன்றிய அரசின் வேறு சில துறைகளும் உத்தரப்பிரதேச மாநில அரசும் கல்வித் துறையுடன் இணைந்து இந்நிகழ்வை நடத்துகின்றன. இந்நிகழ்வு குறித்த நாளிதழ் விளம்பரம் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்‘ என்ற ஒப்பிலாத் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒரே தளம் என்றும், காசியும் தமிழ்நாடும் சந்திக்கும் இடம் என்றும் இந்நிகழ்வை வருணிக்கிறது. பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆம்பி தியேட்டர் மைதானத்தில் சங்கமத்தின் தொடக்க விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. காசி தமிழ் சங்கமத்தை காசியில் நடத்தாமல் ஏன் பனாரசில் நடத்த வேண்டும் என்ற அய்யம் சிலருக்குள் எழலாம். காசியும் பனாரசும் ஒரே நகரின் இரு பெயர்கள். காசிக்கு இன்னொரு பெயரும் உண்டு. வாரணாசி! கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் நகரம்.

சங்கமம் தொடக்க விழாவில் மோடியுடன் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக மேடையில் அமர்ந்திருந்தனர். தமிழ் தொடர்பானதொரு நிகழ்வின் தொடக்க விழா மேடையில் தமிழ் தெரிந்தவர்கள்தான் அமர வேண்டும் என்று நியதியொன்றும் இல்லை. தமிழ் தெரிந்தவர்கள் சிலரும் அமர்ந்திருந்தனர். ஒருவர், எல்.முருகன், தமிழ்நாட்டைச் சார்ந்த ஒன்றிய இணையமைச்சர். இன்னொருவர், அண்ணாமலை, பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர். இவர் என்ன தகுதியில் மேடையில் அமர்த்தப்பட்டார் என்பதை எவரிடம் கேட்க? ஓர் அரசு விழா மேடையில் கட்சித் தலைவருக்கு என்ன வேலை? அதுவும், ஒரேயொரு கட்சியின் தலைவருக்கு! கட்சி நிதியில் அல்லாமல் அரசு நிதியில் நடத்தப்படும் விழாவுக்கு கட்சித் தலைவரை அழைப்பதாயிருந்தால், பேதம் பார்க்காமல் அனைத்துக் கட்சிகளின் மாநிலத் தலைவர்களையும் அழைத்திருக்க வேண்டும் அல்லவா? இது காசி தமிழ் சங்கமத்தின் முதற்கோணல். “முதற்கோணல் முற்றிலும் கோணல்” என்பதுதானே தமிழ்ப் பழமொழி!

சங்கமம் தொடக்க விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றதாகத் தெரியவில்லை. பிறிதொரு நாள் அவர் பங்கேற்கக் கூடும். ஆனால், சங்கமம் பங்கேற்பாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் சிறப்பு ரயிலை கொடியசைத்து அனுப்பிவைத்தார் அவர். தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல் ஆய்வறிஞராகிவிட்டவர் அவர். தமிழ் குறித்தும், தமிழ்ப் பண்பாடு குறித்தும் அவ்வப்போது அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் புல்லரிக்க வைப்பவை. திருக்குறள் முதல் கால்டுவெல் வரை துணிந்து கருத்துச் சொல்லும் அறிஞர் அவர். தமிழ்நாட்டு ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகான குறுகிய காலத்தில் எண்ணற்ற தமிழ் இலக்கிய நூல்கள், ஆய்வு நூல்களையெல்லாம் தீவிரமாக வாசித்து நுட்பமாக அலசி, காத்திரமான கருத்துகளை பொதுவெளியில் பகிரும் புலமையும், திறனும் பெற்றிருக்கிறார் அவர். இவரால் வேறொரு நன்மையும் உண்டாகியிருக்கிறது. எச்.ராஜா ஒரு சிறந்த ஆய்வறிஞர் என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட நன்மை. எச்.ராஜாவின் கருத்துகள் ஆளுநரின் கருத்துகளுடன் இயைபாய் உள்ளது. இந்த உண்மையை உணரச் செய்கிறது. ஆளுநரது மூளையின் அபார ஆற்றல் மலைப்பைத் தருவதாக உள்ளது. திரை இயக்குநர் ஷங்கர் இயக்கி ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் நினைவுக்கு வருகிறது இத்தருணத்தில். தடித்த புத்தகங்களையெல்லாம் சில நொடிகளில் புரட்டி உள்வாங்கும் ஆற்றல் எந்திரனுக்கு (ரோபோ) இருந்ததை படம் பார்த்தவர்கள் அறிவார்கள். பல நூறு பக்கங்கள் கொண்ட தொலைப்பேசி டைரக்டரி நூல்களை சில நொடிகளில் அலாக்காகப் புரட்டி மனப்பாடம் செய்யும் திறன் கொண்டிருந்தது ரோபோ ரஜினி. அதைவிட அதிக திறன் கொண்ட ஒருவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக அமர்த்தப்பட்டிருப்பது தமிழர்களுக்குப் பெருமை. தமிழ்நாட்டை எதிர்கொள்ள சாதாரணமாக ஒருவர் போதாது; அதிக திறன் கொண்ட ஒருவர் வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கண்டுபிடிப்பு தமிழ்நாட்டின் தனிச்சிறப்புக்கு உரைகல். மிகக் குறுகிய காலத்தில் தமிழிலக்கியங்கள், ஆய்வு நூல்களையெல்லாம் ஆய்ந்து பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து துணிந்து பொதுவெளியில் பேசுவது - சாதாரண விஷயமல்ல. இத்தனைக்கும் ஆளுநருக்கு தமிழ் தெரியாது. தமிழ் பேசவும் வராது. தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் மற்றெல்லோரும் தமிழில் உரையாற்ற ஆங்கிலத்திலேயே உரையாற்றுகிறார். ஆங்கிலம் அந்நிய மொழி என்ற கருத்தியலைக் கொண்ட ஒன்றிய அரசின் பிரதிநிதியாய் இருந்தும் துணிந்து ஆங்கிலத்திலேயே உரையாற்றுகிறார். தமிழ் தெரியாத ஒருவர் தமிழ் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் தமிழ்ப் பண்பாடு குறித்தும் ஆய்வு செய்வதும் பேசுவதும் எத்தனை அரிய செயல்!

ஆளுநரின் இத்திறமை குறித்து இங்கு குறிப்பிட காரணம் உண்டு. காசி தமிழ் சங்கமம் குறித்து அவர் எழுதியிருக்கும் அற்புதமான கட்டுரைதான் இதற்குக் காரணம். காசிக்கும் தமிழ் நாட்டுக்குமிடையேயான தொப்புள் கொடி உறவு குறித்து நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியிருக்கும் கட்டுரை அவர் எத்துணை சிறந்த வரலாற்றறிஞர் என்பதையும் நிறுவுகிறது. ‘வேறு யாரோ எழுதிக் கொடுப்பதை தன் பெயரில் வெளியிடுகிறார் இவர்’ என்று நண்பர் ஒருவர் சொன்னார். சேச்சே, அப்படியிருக்காது நாணயமானவர் அவர்!

காசி தமிழ் சங்கமத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதம அமைச்சர் நரேந்திர மோடி, தனது தொடக்க உரையில், தமிழ்நாட்டுக்கும் காசிக்குமிடையேயான உறவையும் தொடர்புகளையும் விவரித்ததுடன் தமிழின் பெருமைகளைப் பாதுகாப்பது 130 கோடி இந்தியர்களின் கடமையென்றும் சூளுரைத்தார். தமிழ் மீதான அவரது கரிசனை சிலிர்ப்பைத் தருகிறது. பிரதமர் காசியில் உரையாற்றும் முன்னரே அவரது உரையின் சாரம் நாளிதழ்களில் வெளியான சில கட்டுரைகளில் வெளிப்பட்டிருந்தது. எல்லோருக்கும் ஒரே இடத்திலிருந்துதான் தரவுகள் கிடைக்கிறதோ என்னவோ?

காசி தமிழ் சங்கமம் எந்த அளவுக்கு தமிழின் வளர்ச்சிக்கு உதவும் என்பது விடை  தெரியாத வினா. இந்தச் சங்கமத்தில் கலந்து கொள்வதற்காய் 2500க்கும் அதிகமான பிரதிநிதிகள் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு காசிக்குச் சென்றிருக்கிறார்களாம். எந்த அளவுகோலின்படி இப்பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தெரியவில்லை. பொதுவாக, மொழி சார்ந்த அல்லது அறிவியல்சார்ந்த அல்லது கல்வி சார்ந்த ஒரு மாநாடு நடக்கிறபோது, அது குறித்த அறிவிப்பு கல்வி நிறுவனங்களுகு அனுப்பப்பட்டோ அதுகுறித்த தகவல் ஊடகங்களில் பகிரப்பட்டோ ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். சங்கம நிகழ்வில் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால் இந்த பிரதிநிதிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? தெரியவில்லை. மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலாச்சார வல்லுநர்கள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் பல ஆன்மிகத் தலைவர்கள் பங்கேற்கிறார்களாம் நிகழ்வில். தமிழ்நாட்டின் சைவ மட ஆதினங்களெல்லாம் நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். தவிர, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கலை வடிவங்களை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவாம். போகிற போக்கைப் பார்த்தால் தமிழையும் ஹிந்தியையும் இணைத்து விடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் உலகின் பழைமையான மொழிகளில் ஒன்று என மோடி தன் பேச்சில் குறிப்பிட்டது உண்மைதான். தமிழ் சார்ந்து உணர்ச்சி பொங்க அவர் குறிப்பிட்ட வேறு சில கருத்துகளும் ஏற்கத்தக்கதே. ஆனால், அதை அவர் உணர்ந்து பேசினாரா அல்லது எழுதிக் கொடுக்கப்பட்டதை அப்படியே வாசித்தாரா என்று தெரியாது. அவர் பேசியது உணர்வுபூர்வமானதென்றால் அவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பல அவற்றுள் சில. தமிழை ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவிப்பது; மத்திய நிறுவனங்களில் குறைந்த பட்சம் ஹிந்திக்கு இணையான இடம் தமிழுக்கும் கொடுப்பது, செம்மொழித் தமிழ் நிறுவனத்தை மேம்படுத்துவது; உண்மைத் தமிழர்களின் கையில் அதன் நிருவாகப் பொறுப்புகளை வழங்குவது உள்ளிட்ட பல சவால்கள் உள்ளன.

காசி தமிழ் சங்கமத்துக்கு தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள் எவரும் அழைக்கப்படவுமில்லை; அழைத்துச் செல்லப்படவுமில்ல. சரியாகச் சொன்னால், தமிழ் உணர்வாளர்கள் எவரும் சங்கமத்தில பங்கேற்கவில்லை. தமிழ் வளர்ச்சிக்கான எதுவும் அங்கு நடப்பதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. சங்கமத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை, ‘ஆன்மிகத்துடன் மட்டுமே தமிழுக்கு நெருக்கம் அதிகம்’ என நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். ஆன்மிகத்துடன் தமிழுக்கு நெருக்கம் உண்டுதான். அது அண்ணாமலை புரிந்து வைத்திருக்கும் ஆன்மிகம் அல்ல. ஆன்மிகத்துக்கும் மதவெறிக்கும் வேறுபாடு தெரியாதவர் அண்ணாமலை. அண்ணாமலை முன்னெடுக்கும் ஆன்மிகம் அபாயகரமானது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். அறிவியலுடனும் பகுத்தறிவுடனும் கூட தமிழுக்கு நெருக்கம் அதிகம் என்பது அண்ணாமலை அறியாத உண்மையா, மறைக்க நினைக்கும் உண்மையா, தெரியாது.

காசிக்கு தமிழ்நாட்டுடன் மட்டுமல்லாது, எல்லா மாநிலங்களுடனும் தொடர்பு இருக்கிறது. தமிழர்கள் மட்டுமா காசிக்குச் செல்கிறார்கள்? அல்லது, காசியில் குடியேறியிருக்கிறார்கள்? பகுத்தறிவாளர்கள், ஆன்மிகவாதிகள், மூடநம்பிக்கையாளர்கள் என எல்லா வகை மனிதர்களும் எல்லா மாநிலங்களிலும், எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். தொடர்ந்து காசி மலையாள சங்கமம், காசி வங்காளி சங்கமம் எல்லாம் ஒரு வேளை நடத்தப்படலாம்.

தமிழ்நாட்டுக்கு காசியுடன் மட்டுமல்ல, பெரும்பாலான இந்திய நகரங்களுடனும் தொடர்பு இருக்கிறது. மும்பை, டில்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் என பல நகரங்களுடன் அங்கெல்லாமே தமிழர்கள் குடியேறியிருக்கிறார்கள். மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இலங்கை, அமெரிக்கா என பல நாடுகளில். எதார்த்தம் இவ்வாறிருக்க, காசிக்கு மட்டும் அப்படியென்ன தனி முக்கியத்துவம்? காசியை இந்தியாவின் கலாச்சாரத் தலைநகர் எனக் குறிப்பிட்டிருக்கிறார் பிரதம அமைச்சர். காசிக்கு இணையாக ராமேசுவரம், காஞ்சிபுரம் முதலான நகர்களை குறிப்பிட்ட அவர், ராமேசுவரத்தையோ காஞ்சிபுரத்தையோ ஏன் கலாச்சாரத் தலைநகராகக் குறிப்பிடவில்லை என்பது ஒரு கேள்வி மட்டுமே. சில மாதங்களுக்கு முன்பு சாதுக்கள் கூடி இந்தியாவின் தலைநகரமாக டில்லியை அல்ல, காசியை அறிவிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது ஒப்புநோக்கத்தக்கது.

தமிழ் சங்கமத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான முக்கியத்துவம் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டாமா? காரணம், நடப்பது தமிழ் சங்கமம். முதலமைச்சர் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் எந்த அமைச்சரும் சங்கமத்தில் இல்லை. தமிழ்ச் சங்கமம் நடத்தும் பொறுப்பை - உண்மையான அக்கறையுடனும் நேர்மையுடனும் நடத்துவதென்றால் - தமிழ்நாடு அரசிடமல்லவா கொடுத்திருக்க வேண்டும்? காசியில் நடப்பது கட்சி நடத்தும் மாநாடல்ல. மக்கள் வரிப்பணத்தில் அரசு நடத்தும் நிகழ்வு. அதில் கட்சியினரை அழைப்பதென்றால், அனைத்துக் கட்சியினரையும் அழைக்க வேண்டும்தானே? ஒரு கட்சியின் தலைவருக்கு மட்டும் ஏன் சிறப்பு அழைப்பு? இதிலிருந்தே புரிந்துகொள்ள முடிகிறது. இது அரசுப் பணத்தில் கட்சியை வளர்க்கும் முயற்சி என்று.

தமிழ் இளைஞர்களையும் மாணவர்களையும் அழைத்துச் சென்று, தங்க வைத்து, அரசுச் செலவில் சாப்பாடு போட்டு, ஆன்மிகம் என்ற பெயரில் மறைமுகமாக தம் சித்தாந்தங்களை அவர்களிடம் திணிக்கும் முயற்சியே இந்த சங்கமம் என்று தோன்றுகிறது. சங்கமம் பற்றிய தோராய மதிப்பீடு இது. தமிழ்நாட்டில் கட்சியை வேரூன்றவைக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் இருக்கலாம். உலகத் தமிழ் மாநாடுகள் பல நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழை வளர்க்கும் அல்லது புதுப்பிக்கும் நோக்கம் கொண்டவை அவை. காசி தமிழ் சங்கமமோ தமிழுணர்வை மழுங்கடிப்பதற்கானது. சங்கமத்தால் கட்சி எந்த அளவு வளரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: "காக்கைச் சிறகினிலே" டிசம்பர் 2022

No comments:

Post a Comment