90ஆவது வயதை எட்டியுள்ள தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நான் உங்களை விட வயதில் சிறியவன். வாழ்த்துகள் கூற வயதில்லாதவன். சமூகநீதி காத்த தந்தை பெரியார் அவர்களை நினைத்து, நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டிக் கொள்கிறேன்.
எனது ஊர் குன்றக்குடி. 1972 முதல் 1975 வரை பரமபதமடைந்த குன்றக்குடி சிறீமத் தெய்வசிகாமணி அடிகளார் அவர்களிடத்தில் - ஆழ்வார்பேட்டை தமிழ்நாடு தெய்வீகப் பேரவை அலுவலகத்தில் நான் பணிபுரிந்த சமயம். நீங்கள் அடிக்கடி அந்தக் காலக்கட்டத்தில் அடிகளார் அவர்களை பார்க்க வரும் காலக்கட்டத்தில் - உங்களை வரவேற்று - அடிகளார் அவர்களுடன் - தந்தை பெரியார் தொடர் பான உறவுகள் குறித்து நீங்கள் கலந்துரையாடியபோது - பல விவரங்கள் தெரிய வாய்ப்பு இருந்தது.
1964-1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டக் காலம் - நான் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் - கல்லூரியில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், ஊர்வலத்தில் நானும் கலந்து கொண்டேன். மறுநாள் குன்றக்குடியில் மாணவர்கள் ஒன்றுகூடி ஹிந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினோம்; பரமபதமடைந்த மகா சந்நிதானம் அவர்கள் - ஊர்வலம், திருமடத்துக்கு அருகில் வந்த சமயம், அடிகளார் அவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். மறுநாள் - மதுரையிலிருந்து வெளியிடப்பட்ட செய்தித் தாள்கள் அனைத்திலும் - குன்றக்குடி அடிகளார் அவர்கள் மீது ஏதேனும் நடந்தால் - தமிழகத்தில் இரத்த வெள்ளம் ஓடும் என்று, ‘தினத்தந்தி’ போன்ற நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக அறிக்கை வெளியிட்டார்கள் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களது கடைசி நாள் நிகழ்ச்சியின்போது அடிகளார் நாகர்கோவிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தவர். சென்னை வந்து, பல திருமடங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் எனக்கு காவி பெரிதல்ல, கறுப்பைத்தான் பெரிதாக மதிக்கிறேன் என்று கூறினார். பல நினைவலைகள் என் மனதில் உள்ளன.
- அ.இராமையா, சென்னை
ஜி.யு.போப்பும் - ஆர்.என்.ரவியும்
டாக்டர் ஜி.யு.போப் இங்கிலாந்திலிருந்து வந்து கல்கத்தா - இன்றைய கொல்கத்தா துறைமுகத்தில் இறங்கியதும், தமிழ்நாட்டிற்குச் செல்கிறேன் என்று இங்கு வந்தவர். இங்கே வந்தவர் மதத்தை - கிறிஸ்துவ மதத்தை மட்டும் பரப்பவில்லை. தமிழையும் பரப்பினார் - தமிழ்த் தொண்டு செய்தார். அவர், “உலகில் எந்த மொழி அழிந்தாலும் அழியலாம். ஆனால், தமிழ் அழியக் கூடாது” என்று சொன்னார். நன்கு தமிழ் அறிந்த புலவர். இந்தியப் பிரதமர் மோடி அவர்களைப் போல் தமிழைக் குதறுபவர் அல்ல. நன்கு தமிழறிந்த ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் கருத்தை குறை கூறும் தகுதி ஆர்.என்.ரவிக்கு இல்லை. அதுவும் தமிழ்ப் பற்றில்லா ரவிக்கு எந்தத் தகுதியும் இல்லை.
தான் இறந்த பின் தனது கல்லறையில், “இங்கு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று பொறிக்கப்பட வேண்டும் என்றவர்தான் டாக்டர் ஜி.யு.போப் அவர்கள். அவரது கல்லறையில் எழுதப்பட்டுள்ளதா? "ஆம், எழுதப்பட்டுள்ளது. அதைக் கண்ணால் கண்டவர்களுள் ஒருவர்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். தமிழர் தலைவர் லண்டன் சென்றிருந்தபோது, ஜி.யு.போப் அவர்களின் கல்லறையைப் பார்த்தார். அதில், “Here lies a Tamil Student” என்று எழுதியிருப்பதைக் கண்டு, தமிழர் தலைவர் இறும்பூது எய்தினார். தமிழுக்குப் பெருமை சேர்த்த டாக்டர் ஜி.யு.போப் எங்கே! தமிழே அறியாத ஆர்.என்.ரவி எங்கே?
என்னே ரவியின் அறியாமை!
- ச.அரங்கசாமி, காரைக்குடி
No comments:
Post a Comment