நெஞ்சை நெகிழவைத்த திருநாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

நெஞ்சை நெகிழவைத்த திருநாள்!

தொகுப்பு: கலி. பூங்குன்றன்

நேற்றைய நாளை (டிசம்பர் 20) நாம் என்றென்றும் மறக்கவே முடியாது. உணர்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த கலவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரை நெக்குருகச் செய்தது.

106 ஆண்டுகளுக்கு முன் பார்ப்பன ஆக்டோபசை எதிர்த்து நீதிக் கட்சியின் தலைவர் - வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் நீதிக்கட்சியின் சார்பில் அதன் கொள்கை அறிக்கையான "பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை" (The Non - Brahmin Manifesto)   பிரகடனப்படுத்தப்பட்ட நாள்.

அந்த நாளில் சென்னைப் பெரு நகராட்சியான ரிப்பன் மாளிகை வளாகத்தில் சிலையாக நிற்கும் வெள்ளுடைவேந்தர் சிலைக்கு முன் நீதிக்கட்சியான திராவிடர் (நீதிக்கட்சி தானே திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது) கழகத்தின் இன்றைய தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் கூடி நின்றபோது பல எண்ண அலைகள் நெஞ்சக் கடலில் ஆர்ப்பரித்தன.

சர்.பிட்டி தியாகராயர் மேயராக இருந்தார் அன்று என்றால்  - இன்று வணக்கத்துக்குரிய சென்னை மாநகர மேயராக இருக்கும் இரா. பிரியாவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது சிறப்பிற்குரியது.

திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பெ. செகதீசன், செயலாளர்கள் அ. கருணானந்தன், பேராசிரியர் முனைவர் ரா. சரவணன், நீதிக்கட்சி வழி வந்த மனோன்மணியம் பல்கலைக் கழக முதல் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம், மேனாள் திட்டக் குழுத் தலைவர் முனைவர் மு. நாகநாதன், பேராசிரியர் சுந்தரம், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் கழகத் தோழர்கள் மாணவர்கள் குழுமியிருந்தனர். 

வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் உருவச் சிலையின் கீழ் அணி செய்து வைக்கப்பட்டிருந்த தியாகராயர் உருவப் படத்துக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெள்ளுடைவேந்தர் வாழ்க! வாழ்க!! பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையை வெளியிட்ட தியாகராயர் வாழ்க! வாழ்க!! என்ற ஒலி முழக்கத்திற்கிடையே மாலை அணிவித்தார். மேனாள் மேயரின் உருவப் படத்துக்கு இந்நாள் மேயர் இரா. பிரியா மலர் தூவி மரியாதை செலுத்தினார். மற்றவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அடுத்து ஒரு வரலாற்றுப் பொன்னிழை ஒளிரும் நிகழ்ச்சி!

இன்றைக்கு 106 ஆண்டுகளுக்கு முன் எந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் நீதிக்கட்சித் தலைவர் - வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையைப் பிரகடனம் செய்தாரோ, அந்த விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு அங்கிருந்து திராவிடர் கழகத் தலைவர், மேயர் புடைசூழ அணி வகுத்துச் சென்று, விக்டோரியா பப்ளிக் ஹால் நுழைவு வாயிலில் குழுப் படம் எடுத்துக் கொண்டபோது கண்கள் பனித்தன.

106 ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்ப்பனர் அல்லாதாரின் தாழ் நிலை கண்டு துடித்தெழுந்து - பார்ப்பனர்களின் வல்லாண்மையை எதிர்த்துப் போர்க் குரல் கொடுத்த இடத்தில் நிற்கிறோம் - அந்த நீதிகட்சியின் வாரிசுகளாக நின்று "வாழ்க வாழ்க" என்று குரல் கொடுத்து நன்றி செலுத்துகிறோம் - செம்மாந்து நிற்கிறோம் என்கிறபோது உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்காதா? நம்மை அறியாமலேயே ஆனந்தக் கண்ணீர் சுரக்காதா?

அந்த நிலைதான் அன்று மாலை அந்த நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பில்லாத பார்ப்பனரல்லாத மக்களுக்கு நம் உணர்வை வெளிப்படுத்துகிறோம் - பரிமாறிக் கொள்கிறோம் என்றுதான் சொல்லிக் கொள்ள முடியும். நேரில் நாம் அனுபவித்த இன்பத் துடிப்புக்கு, கொள்கை மகிழ்ச்சிக்கு ஈடு ஏது - இணை ஏது!

தொடர்ந்து சென்னைப் பெரியார் திடலில் பார்ப்பனர் அல்லாதார் கொள்கைப் பிரகடன நாள் கருத்தரங்கம் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடைபெற்றது. (நிகழ்ச்சி விவரம் தனியே காண்க).

இன்றைக்குப் பார்ப்பனர் அல்லதார் அனுபவிக்கும் கல்வி வாய்ப்பும், உத்தியோக வாய்ப்பும் நமது நீதிக்கட்சி முன்னோர்கள்தம் உழைப்பின் அறுவடை அல்லவா!

இடைஇடையே அதற்கு வரும் இடையூறுகளைத் தகர்க்கும் தன்னிகரில்லாத் தலைவர் தந்தை பெரியார் என்னும் பே(£)ராயுதம் அல்லவா!

இப்பொழுது ஏற்பட்டுள்ள சமூகநீதியைக் கொத்தித் தூக்கிச் செல்ல இறகுகளை விரித்துப் பறந்து வரும் வல்லூறுகளை   பொங்கி எழுந்து புறமுதுகிட்டு ஓடச் செய்ய உறுதி ஏற்போம்!

திராவிட இயக்கமான நீதிக்கட்சியின் நீட்சியான திராவிட மாடல் அரசைக் கண்ணிமையாகக் காத்து நிற்போம்!

இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவைப்படும் இந்தத் திராவிட மாடலை எங்கெங்கும் கொண்டு செல்லுவோம்!

டிசம்பர் 20 என்பது இந்த உணர்வுக்கான - செயலுக்கான உந்து சக்தி என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

வாழ்க திராவிட இயக்க மூவேந்தர்கள்! 

வாழ்க தந்தை பெரியார்!

வெல்க திராவிடம்!!

No comments:

Post a Comment