90ஆம் அகவையிலும் சவால்களை சந்திப்பார் தலைவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

90ஆம் அகவையிலும் சவால்களை சந்திப்பார் தலைவர்!

மறக்க முடியுமா டிசம்பர் 2ஆம் நாளை? ஆம், இந்த நாள்தான் தந்தை பெரியார் நம்மினத்தின் பாதுகாப்புக்கு வார்த்தெடுத்து விட்டுச் சென்ற 'விடுதலை' ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களின் பிறந்த நாள்!

இன்று அவரின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள்! ஒரு வரலாற்று விந்தையின் உச்சம் என்ன தெரியுமா?

90 ஆண்டில் 80 ஆண்டு பொதுத் தொண்டு என்ற விகிதாசாரம் மானமிகு வீரமணிக்கல்லால் வேறு யாருக்கும் இல்லை.

மற்றொரு அதிசயம் 16ஆம் அகவையில் அவர் எடுத்த அந்தத் தீர்க்கமான முடிவு!

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த கால கட்டத்தில் அவர் அண்ணன்கள் இருவரும் திமுகவுக்குச் சென்றனர். சுற்றியிருந்த பெரும்பாலோரும் அத்தகைய முடிவைத்தான் எடுத்தனர்.

16 வயதே நிறைந்த ஒரு சிறுவன் பெரும்பாலும் தன்னைச் சார்ந்தவர்களைச் சார்ந்தே முடிவு எடுக்க முடியும்.

ஆனால் அந்த 16 வயது மாணவர் கடலூர் வீரமணி தன்னந் தனியாக, தனித் தன்மையாகச் சிந்தித்தார்.

ஆம், தந்தை பெரியாரே என் தலைவர், திராவிடர் கழகமே எம் இயக்கம் - திராவிடர் கழகக் கொடியே தன் தோளில் ஏந்தும் கொடி என்று எந்தவிதத் தயக்கத்திற்கும் இடமின்றி தடுமாற்றம் என்ற பேச்சுக்கே இடமின்றி, சபலம் - சஞ்சலம் இவற்றிற்குச் சற்றும் இடமின்றி, வீறு நடையை இன்று வரை போட்டு வருகிறாரே - இது என்ன சாதாரணமா? (வழக்கமாக நடப்பதில்கூட அவர் வேகத்திற்கு மற்றவர்களால் நடக்க முடியாது)

எல்லாவற்றையும் விட தந்தை பெரியாரின் நம்பிக்கையை அவர் பெற்ற அளவுக்கு வேறு யாரும் பெற்றதாகக் கூற முடியாது.

இந்த நிலையில், அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது, எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல், பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர் வந்தார், வருகிறார் வரக் கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும்.  அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கப்படி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின்மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகரராகவும் நமது 'விடுதலை' ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன் வந்து, அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்துவிட்டேன்" (விடுதலை 6.6.1964). என்று தந்தை பெரியார் கையொப்பமிட்டு எழுதினாரே - கண்ணில் ஒத்திக் கொள்ளத்தக்க விலை மதிக்க இயலாத ஒவ்வொரு சொல்லும் தந்தை பெரியார் தம் உள்ளத்தின் ஆணி வேரிலிருந்து ஊற்றெடுத்து வந்தது என்றால், இந்தப் பேறு வேறு எவருக்குத்தான் கிடைக்கும்!

'ஏகபோகத்தில் வீரமணியிடம் 'விடுதலையை ஒப்படைக்கிறேன்" என்ற உரையாடலை அவ்வளவு எளிதாக அய்யாவிடமிருந்து யாரால்தான் பெற முடியும்?

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., பொருளாதார தேர்வில் தங்கமெடல் பெற்றார் - எந்த இடத்திலும் முதல் பரிசு பெறும். முன்னவராக இன்று வந்திருக்கிறார்.

"வாழ் நாள் சாதனையாளர் விருதினை" வெளிநாட்டு அமைப்புகளும் அளித்துப் பெருமை பெற்றன.

"வீரமணி எங்கிருந்தாலும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்!" ('குமுதம்' 12.1.1988) இது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முத்திரை.

"நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்" என்று திமுக தலைவர் மானமிகு மு.க. ஸ்டாலின் (முரசொலி 2.12.2018). கூறியதுண்டே!

சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் 'திராவிட மாடல் ஆட்சி'யை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். 

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த - களத்தில் நின்ற போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கானது. அது செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே தந்தை பெரியார் தன் இறுதி மூச்சைத் துறந்தார்.

"தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைத்து விட்டோமே!" என்று கலங்கினார் கலைஞர். அந்தக் குறையைக் களைந்து விட்டார் "திராவிட மாடல்" ஆட்சியின் நாயகர் தளபதி மு.க. ஸ்டாலின்.

இதனைக் கண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அடைந்த மகிழ்ச்சிக்கோர் அளவேயில்லை! கண்ணிமை போல இவ்வாட்சியைக் காப்போம் என்று தம் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் செய்தியாகவும் தலைவர் ஆசிரியர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு, எம்.ஜி.ஆர். ஆட்சியில் இட ஒதுக்கீடுக்கு ஊறு விளைவிக்கப்பட்ட நேரத்தில் (ஆண்டு வருமானம் ரூபாய் 9000 இருந்தால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடை யாது)  தமிழர் தலைவர் ஆசிரியர் பொங்கி எழுந்து அனைவரையும் ஒன்று திரட்டி களத்தில் இறங்கிப் போராடி  அந்த ஆணையைப் பின் வாங்கச் செய்ததோடு அல்லாமல் பிற்படுத்தப்பட்டோருக்கு அதுவரை இருந்து வந்த 31 விழுக்காடு இடஒதுக்கீட்டை, 50 விழுக்காடாக உயர்த்த செய்ததில் தமிழர் தலைவருக்கு சமூகநீதி வரலாற்றில் சாதனை மகுடம் ஒளி வீசிக் கொண்டே இருக்கும்.

69 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு ஆபத்து வந்த நேரத்தில் சட்ட ரீதியான வழிமுறையைக் காட்டி, இன்னும் சொல்லப் போனால் ஒரு சட்ட முன் வரைவையே தயாரித்துக் கொடுத்து (76ஆம் சட்டத் திருத்தம்) அதனைப் பாதுகாத்துக் கொடுத்த சமூக நீதி சாதனையாளர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களே!

மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி, வெற்றி கண்டவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களே!

இன்றுள்ள ஒன்றிய அரசு சமூகநீதிக்கு எதிரானதாகவும், மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும் செயல்படும் மதவாத பார்ப்பனீய அரசாகும்.

இதனை வீழ்த்த அகில இந்திய அளவில் முற்போக்காளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை விதைத்து, வினை திட்டமாக மாற்றுவதில் மன உறுதி கொண்ட தலைவர் வீரமணி அவர்கள் தமிழ்நாட்டையும் கடந்து கடமையாற்றும் பணியைத் தோளில் சுமக்கும் நிலையில் உள்ளார்.

திராவிட மாடல் அரசின் நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க ஸ்டாலின் துணை இதில் மிக முக்கியமானது.

90 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவருக்கு முன் நிற்கும் சவால்கள் பல உண்டு என்றாலும், அவரது தலைமை வெற்றிக்கான வீரத்தை மய்யமாகக் கொண்டது - பெயரும் வீரமணி யாயிற்றே! இயக்கமும் இளம் இரத்தத்தோடு இளைஞர்களின் கோட் டையாக நிமிர்ந்து நிற்கிறது. வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர் - வெல்க திராவிடம்!


 

No comments:

Post a Comment