* வயது ஏறினாலும் உழைக்கும் உறுதி உண்டு!
*என்னை வார்த்தெடுத்த அய்யா - அம்மா - கூட்டுப் பணித் தோழர்களுக்கு நன்றி! நன்றி!!
*அருஞ்சாதனைகளைக் குவித்துவரும் நமது ‘திராவிட மாடல்' ஆட்சிக்குத் துணையாக இருப்போம்!
‘புத்தருக்கு ஓர் ஆனந்தன்போல'- தந்தை பெரியார் நம்பிக்கைக்குப் பாத்திரம் என்பதே வாழ்நாள் குறி!
‘புத்தருக்கு ஓர் ஆனந்தனைப்போல' தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து, அவர் காண விரும்பிய சமூகத்தைப் படைக்க விரும்புவது வாழ்நாள் குறி - என்னை வார்த்தெடுத்த அனைவருக்கும் நன்றி! என்று 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தியாகத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாளை (டிசம்பர் 2) நான் 90 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பினைப் பெறும் நாள்.
வயது ஆவதும், முதுமையும் இயல்பான ஒன்றுதான்.
முதுமையில் பலர் முடங்கிப் போய்விடுகிறார்கள்.
வயதில்கூட பிறந்த நாள் கணக்கையொட்டிய வயது ஒருபுறம் என்றாலும், உண்மையான செயல்திறனுக்குரிய வயது என்பது அவரவர்கள் உணர்வைப் பொறுத்ததே!
மாணவப் பருவம்முதல் இன்றுவரை!
தந்தை பெரியார் என்ற மாபெரும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவரை எனது மாணவப் பருவத்தில் பற்றிக் கொள்ளும் வாய்ப்பை என்னைத் தொடக்கத்தில் ஈடுபடுத்திய எனது கல்வி ஆசான் ஆ.திராவிடமணி எனக்கு ஏற்படுத்தித் தந்தார்.
அன்றுமுதல் இறுதிவரை ஒரே தலைவர் தந்தை பெரியார் என்ற அந்த அறிவுப் பேராசான்தான் - அவரின் கொள்கையே இன்றும் எனது சுவாசப்பை!
சிறு கல்லாய் கடலூரில் இருந்த இந்த சிறுவனை - ‘பகுத்தறிவுச் சிறுவனாக்கி' கொள்கையால் செதுக்கி, ஒரு சிற்பமாக்கியவர் ஒப்பற்ற சிற்பியான நமது சுய சிந்தனையாளர் தந்தை பெரியார்.
அவருக்குத் தொண்டு செய்து, அவருக்குப்பின் அன்னையார், அவர்களுக்கும் பின் இயக்கத்திற்குத் தொடர் பணி போன்றவை எனக்குக் கிடைத்த வாய்ப்பு!
எதிர்நீச்சலே இயக்கப் பணியாயிற்று!
ஏளனத்தை எதிர்கொள்ள வாய்ப்பைக் கொடுத்தது.
பல பாடங்களைக் கற்றுக் கொடுத்து பக்குவப் படுத்தியது நமது இயக்கம்!
என்னை வார்த்தெடுத்தவர்கள்
அய்யா - அம்மா - கூட்டுப் பணித் தோழர்கள்!
தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும், என்னரும் கூட்டுப் பணித் தோழர்களான இயக்கத்தின் கொள்கை உறவுகளும் என்னை வார்த்ததோடு, வளர்த்த தோடு பாதுகாத்தும் வருகின்றனர்!
அதனால்,
சபலங்கள் நான் அறியாதவை -
சந்தேகங்கள் எனக்கு ஏற்படாதவை -
பாதை என்றும் தெளிவான ஈரோட்டுப் பாதை யானபடியால்!
இவற்றைவிட எனக்கென்ன வேறு பேறு வேண்டும்? பதவி நாற்காலிகளைவிட இயக்கக் குடும்பத்தாரின் இதயத்தில் இடங்கள் மிக உயர்ந்தவை என்பதால், குறை யொன்றுமில்லை - இந்த தொண்ணூறிலும்! பட்டறையில் பழுக்கக் காய்ச்சிப் பதப்படுத்தப்பட்ட கருவியான ‘பெரியார் பாசறை' என்னை பல்வேறு கட்ட எதிர்ப்பு களால் பக்குவப்படுத்தியதால், வயது எனக்கு நினைவில் இருப்பதில்லை - எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை - இயக்கம் - கொள்கை என்பதைத் தவிர!
இதனையெல்லாம் தாண்டி, திராவிடர் கொள்கைகள் அரியாசனம் ஏறி, வெறும் அதிகார மாற்றமாக இல்லாமல், சமூக மாற்றத்திற்கான சரித்திரமாக மாறி வருவதை நான் கடந்த 80 ஆண்டு பொதுவாழ்வில் ஒரு தொண்டனாக, கொள்கைப் போர் வீரனாக இருந்து பார்த்து வந்த நிலையில், இப்போது தமிழ்நாட்டில், திராவிடர் ஆட்சி யின் நீட்சியாகத் திகழும் ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' நம் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது ‘திராவிட மாடல்' ஆட்சியின் மாட்சி - எம் போன்ற கொள்கையாளர்களை இளமை யாக்குகிறது; நாமே இமைகளாகவும் மாறி அவ்வாட்சி என்ற கண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் நல் வாய்ப்பை நமக்குத் தந்துள்ளது!
அருஞ்சாதனைகளைச் செய்துவரும்
ஆட்சிக்குத் துணையாக இருப்போம்!
முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னதுபோல், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி, ஜாதி, தீண்டாமை ஒழிப்பின் முக்கிய சாதனையாம் - அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் என்பதை செயல்படுத்தி - ஆரிய ஏகபோகத்தை, ஜாதி ஆதிக்க சனாதனத்தை விரட்டிய அருஞ்சாதனை!
அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாளாகவும், டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ‘‘சமத்துவ நாளாக''வும் அறிவித்துப் பிர கடனமும், உறுதிமொழியும் கூறச் செய்து, ‘‘அனை வருக்கும் அனைத்தும்'' என்ற சமூகநீதியில் ஆழங்கால் பதித்திடச் செய்துள்ள நமது முதலமைச்சரின் அடுக் கடுக்கான சாதனைகள் மிடுக்குடன் ஒளிரும் ஆட்சிக்கு நிரந்தரப் பாதுகாவலர் பணி செய்வதைக் கடமையாய் இந்த கருஞ்சட்டைக் கழகம் கருதுகிறது; அதன் எளிய தொண்டன் நான் என்ற வாய்ப்பு என் வயது வளர்ச்சிக்கு - நீட்சிக்குப் பெரிதும் உதவுகிறது!
வயது ஏறினாலும் உழைக்கும் உறுதி - கடமை நம்மைச் சுண்டி இழுக்கிறது!
மனிதத்தின் அடையாளமாகிய பகுத்தறிவு, சுயமரி யாதை, சமத்துவம், சுதந்திர சிந்தனை, சமூகநீதி, பாலியல் நீதி ஆகியவற்றையே மக்கள் வாழ்க்கை முறையாகக் கொண்ட ஒரு புதிய சமுதாயம் காண உழைப்பதைவிட நமக்குள்ள பெருமைதான் வேறு என்ன?
ஜாதி - தீண்டாமை, பெண்ணடிமை ஒழிந்த புதிய தோர் உலகு உருவாக்கப்படவே பெரியார் உலகமயமாக வேண்டும்; உலகம் பெரியார் மயமாக வேண்டும் என்ற உன்னத தத்துவத்திற்கு உருவம் தந்து, உணர வைக்க உழைப்போடு இணைந்த பெரியார் உலகமும், அதன் பணிகளும் தொடங்கி உள்ளன.
வயது ஏறினாலும், வாலிபமும், உழைக்கும் உறுதியும், களப்பணி கடமை உணர்வும் நாளும் சுண்டி இழுக்கின்றன; சோர்வை அறியாத ஒரு பணியாளனாக தோழர்களின் ஊக்கமும், உற்சாகமும் என்னை மேலும் உழைக்க ஆணையிட்டு அழைக்கிறது!
அழைப்பை அலட்சியப்படுத்தலாமா?
நம் இன எதிரிகளும், அரசியல் பகைவர்களும் நம்மை அசரவிடுவதாக இல்லை.
அவர்களுக்கும் நன்றி!
புத்தருக்கு ஓர் ஆனந்தன்போல -
தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதே எனது குறி!
தலைவர் தந்தை பெரியார் வைத்த நம்பிக்கைக்குரிய ‘புத்தரின் ஆனந்தனாக' எனது எஞ்சிய வாழ்வும் அமையவேண்டும் என்பதே எனது குறி!
‘களப் பணி என்றும் நமக்கு உண்டு' நமது முன்னோடித் தலைவர்கள் அரும்பாடுபட்டுப் பெரும் போர் புரிந்து பெற்றவற்றை நாம் பாதுகாப்பதுடன், மேலும் வளர்த் தெடுக்கவேண்டாமா?
கற்றவற்றை எதிரிக்கு விற்றுப் பிழைக்கும் வீணர்கள் கூட்டமல்லவே நாம்!
உற்ற பணி நம் முன்னே!
சமூகநீதிக்கான சவால்கள்!
மதவெறியின் மாற்று வேடம்!
களம் காண கைகொடுக்கும்
தோழர்களுக்கு நன்றி! நன்றி!!
‘‘மக்களாட்சியை வீழ்த்திட புதுவகை தந்திரங்கள் அனைத்தையும் பெரியார் என்ற பேராயுதத்தால் வீழ்த்திட, களம் கண்டிட, பரம்பரை யுத்தத்தில் வெற்றி கனி பறித்திட உறுதி ஏற்போம்!'' என்பதே எனது 90 ஆம் ஆண்டில் சுயமரியாதைச் சூளுரையாகும்!
வாழ்வு சிறிது - வளர் பணி பெரிது!
களம் காணக் கைகொடுக்கும் தோழமையினரே,
அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.12.2022
No comments:
Post a Comment