ஜாதியும், வறுமையும், நோயும், தனி வாழ்க்கையும் அவரை எவ்வளவுதான் தான் வீழ்த்த நினைத்தாலும், அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடவில்லை. தளர்ச்சியும், தொய்வும் அடையவில்லை. அய்ந்து வயதில் தாயை; 44 வயதில் மனைவியை; நடுநடுவே தமது நான்கு பிள்ளைகளை இழந்த அம்பேத்கர், நிமோனியாவால் பாதிக்கப்பட்ட தனது ஒரே மகன் யஷ்வந்த் ராவை வைத்துக்கொண்டு வாழ்க்கையைக் கடந்தவர். அவருக்குப் பின்னால் பெரும் முதலாளிகளும், நிறுவனங்களும் இருந்த தில்லை. எப்போதும் அவர் தனி மனிதராகவே இந்த ஜாதிய சமூகத்தின் முன்பாக நேர் நின்றிருக்கிறார். இது அசாத்தியமான துணிவு.
எளியவர்களுக்கும், போராட்டவாதிகளுக்கும் அம்பேத்கரின் வாழ்க்கை மிகவும் உத்வேகம் தரக்கூடிய ஒன்றாகவே எப்போதும் இருந்திருக்கிறது. நானக் சந்த் ரத்து எழுதிய குறிப்புகளில் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து வருந்தி இறுதி நாட்களில் அழுததாக படிக்க முடிகிறது. நாம் தியோ நிம்கடேவின் குறிப்பின் வழியே தன் மனைவி ரமா பாய்க்காக அம்பேத்கர் அழுததையும் அறிய முடிகிறது.
"ஒடுக்கப்பட்ட மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களுக்கு சுயமரியாதையை சொல்லிக் கொடுங்கள். அதுவே போதும்" என்று ஆதிக்க ஜாதியினரிடம் கடுமை காட்டிய அவரின் இன்னொரு பக்கம் இது. வறுமையும், ஜாதியமும் அவரை மண்ணாக பாவித்து சுட்டு கடுமை காட்டிய போதும், அன்பும் பரிவும் அவரிடம் ஊற்றெடுத்துக் கொண்டே இருந்திருக்கிறது.
நடைபாதையில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் முதியவரை பார்த்து, தன் வீட்டுக்கு கூட்டி வந்து தன்னுடன் வைத்துக் கொண்ட மனிதரை; தான் வளர்த்த நாய்க்காக அழுத மனிதரை; தான் அமைச்சராக இருந்தபோது தன் அரசு வீட்டில் பணியாற்றியவர்களுக்கு, தன் பதவி காலத்துக்குப் பிறகு மிகப் பொறுப்பாக வேலை பார்த்துக் கொடுத்த மனிதரை; தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தன் மகனுக்கு வேலை கிடைப்பதை நிராகரித்த மனிதரை; தாவரங்களை நேசித்த மனிதரை ஏன் இந்த சமூகம் கொண்டாட மறுக்கிறது?
தாதா சாகேப், கர்மவீரர் என்றெல்லாம் அம் பேத்கரால் புகழப்பட்ட சம்பாஜி துக்காராம் கெயிக்வாட், அம்பேத்கரின் சமூகப் பணிகளுக்கு உடனிருந்து உதவியவர். அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டுக்குச் செல்ல 1500/- ரூபாயைத் திரட்டி தந்தவர். மகத் குளப் போராட்டத்தில் உடனிருந்தவர். அவர் தலைமையில் தான் மகத் குளப் போராட்டமும், காலா ராம் கோயில் நுழைவுப் போராட்டமும் நடைபெற்றிருக்கின்றன.
இந்தியாவில் பெரும்பகுதி ஆதிக்க ஜாதியினரால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனின் பெயரைச் சொல்லுங்கள் என்று என்னை கேட்டால், சற்றும் யோசிக்காமல் அம்பேத்கரின் பெயரைச் சொல்வேன். அதிகம் புறக்கணிக்கப்பட்டவர்; அதிகம் அவமதிக் கப்பட்டவர்; அதிகம் மறைக்கப்பட்டவர்; அதிகம் இருட்டடிப்பு செய்யப்பட்டவர்; அதிகம் திரிக்கப் பட்டவர்; அதிகம் புரிந்து கொள்ளப்படாதவர் அவர் தான்!
ஜாதியின் தோற்றத்தையும், கட்டமைப்பையும், இயங்கும் முறையையும், ஜாதியின் கருவறையாக இருக்கும் இந்து மதத்தையும், இந்தியாவில் நிலவும் பல்வேறு பழக்க வழக்கங்களின் ஜாதியப் பின்னணியையும், பொது வாழ்க்கையில் இருந்தும் பெரிய மனிதர்களின் ஜாதி பற்றியும் அம்பேத்கர் போட்டு உடைக்கத் தொடங்கினார். இதனால் அவர் மீதான இந்த வெறுப்பு அவர் பொது வாழ்க்கைக்கு வந்ததிலிருந்து தொடங்கியது. அவரின் அணுகு முறைகள் இந்திய ஜாதிய சமூகத்தால் எதிர்கொள்ள முடியாததாகவும், அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருந்தன. அவரின் செயல்பாடுகள் மிகக் கறராக இந்துத்துவ இலக்கைச் சென்று தாக்கின. இந்திய ஜாதிகளைக் குறித்து ஆராய்ந்து எழுதியது; மனுஸ்மிருதியை எரித்தது; காந்தியை கடுமையாக எதிர்கொண்டது; இந்து மதத்தை விட்டு வெளி யேறியதாக அறிவித்தது என்று எல்லாமே அவர் பொது வாழ்க்கைக்கு வந்த முதல் 15 ஆண்டுகளுக்கு உள்ளாகவே நடந்தேறி விட்டன. இவற்றைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத இந்தியச் சமூகம் அதிர்ந்து போனது. அவர் தன்னுடைய மதமாற்ற அறிவிப்பை வெளியிட்ட போது, ”இந்து சனாதனம் பழிதீர்க்கப்படுகிறதா? வெடிகுண்டை எரிகிறார் அம்பேத்கர்!” என்று 'தி பம்பாய் கிரானி'கள் நாளேடு தலைப்புச் செய்தியாக வெளியிட்டதிலிருந்தே இந்த அதிர்ச்சி மனநிலையை புரிந்து கொள்ளலாம். ஆதிக்க ஜாதியினரின் இத்தகு கோபம் அம்பேத்கர் மீதான வெறுப்பாக உருவெடுத்தது.
வெறுப்பம், கோபமும்தான் ஜாதிய வன்மத் திற்கான அடிப்படை. இது அவரின் பணிகளையும், வாழ்க்கையையும் இருட்டடிப்பு செய்வதற்கு இட்டுச் சென்றன. அம்பேத்கர் கலந்து கொள்ளும் கூட்டங்களை பற்றிய செய்திகளை மறைப்பது; அக்கூட்டங்களுக்கு திரளும் பெருந்திரளான மக்கள் எண்ணிக்கையைக் குறைத்து எழுதுவது; அவருடைய செயல்பாடுகளை திரிப்பது; அவரைப் பற்றிய ஆதாரமற்ற வதந்திகளை வெளியிடுவது என்று அவருக்கு எதிராக பத்திரிகைகள் மிக வெளிப் படையான வன்மத்துடன் இயங்கின. இதை அம்பேத்கரே சில இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு அவருடைய எழுத்துக்களை அரசாங்கமே வெளியிடுவதாக அறிவிப்பு வந்த உடனேயே, அவருடைய பல கோப்புகளும், கையெழுத்துப் பிரதிகளும் காணாமல் போய்விட்டதாக நாணக் சந்த் ரத்து சொல்கிறார். அம்பேத்கரின் இறுதி நாட்களில் அவருடைய தனிச் செயலாளராக இருந்த ரத்து இல்லை என்றால், இன்று நமக்கு அம்பேத்கரின் பெரும்பகுதி எழுத்துக்கள் கிடைத்திருக்காது. ஆதிக்க ஜாதியினரோ, பத்திரி கைகளோ தான் அப்படி நடந்து கொண்டன என்றால், அவருடன் இருந்தவர்களுக்கும் கூட அவரை விரிவாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணமும், வாய்ப்பும் இருந்திருக்கவில்லை. அம்மக்களுக்கு அவர்மீது வழிபாட்டு மனோபாவம் மட்டுமே இருந்திருக்கிறது. அந்த உணர்வு பலவற்றை தடுத்துவிட்டது. புகைப்படங்களை எடுப்பது; குறிப்பு எழுதுவது; அவரைப்பற்றிய செய்திகள் வெளியான பத்திரிகைகளை பாதுகாப்பது போன்ற வரலாற்று உணர்வு மிக்க செயல்பாடுகள் குறித்த தெளிவோ, வசதியோ இல்லாமலும் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட கொடூரத் தீண்டாமை மற்றவர்களிடத்திலே கட்டப்படவில்லை. வாழும் காலத்திலேயே காந்தி மகாத்மாவாக ஆக்கப்பட்டு விட்டார். அவருக்கு அறிவு சேவை செய்வதற்காக எண்ணற்ற பேர் அப்போது இருந் தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். ஆரியம் அம்பேத்கரை உள்வாங்கி செரித்துவிட முயன்று கொண்டிருக்கும் இன்றைய சூழலிலும், அம்பேத் கருக்கு அந்த வாய்ப்பு மிகமிகக் குறைவுதான். இப்போது ஆரியத்தை அம்பலப்படுத்த வேண்டிய சூழலில் அம்பேத்கரையும் காப்பாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்! அவசரம்!
- இரணியன், ஆவடி
No comments:
Post a Comment