மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அமைச்சர் தகவல்

சென்னை, டிச. 22, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வருகிற 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் நடப்பு ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் மின்சார வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் 20.12.2022 அன்று நடந்தது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒரு லட்சமாவது விவசாயியின் மின்சார இணைப்பு உத்தரவையும் வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கான மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 11ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் முதலமைச்சர் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கான உத்தரவை வழங்கினார்.

தற்போது 34 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு வருகிற பொங்கல் திருநாளுக்கு முன்பு முழுவதுமாக மின்சார இணைப்பு வழங்கப்படும். தேவையான உதிரி பாகங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வாங்கப்பட்டு உள்ளது. தேவை இருந்தால் அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தில், 2 கோடியே 67 லட்சம் மின்சார நுகர்வோர்களில், இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் (வருகிற 31ஆம் தேதி) மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மின் கட்டண உயர்வால் வருவாயை ஆண்டுக்கு ரூ.19 ஆயிரம் கோடி அளவில் உயர்த்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் செலவுகளை குறைத்தபோது மாதம் ரூ.1,000 கோடி மட்டுமே கூடுதல் வருவாய் வந்துள்ளது. தற்போது வந்த புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கிடப் பட்டு வருகிறது. தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை மின்சாரம் கணக்கு எடுக்கும் அளவில்தான் பணியாளர்கள் உள்ளனர். எனவே, வீடு வாரியாக கணக்கெடுக்கும் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது. 

No comments:

Post a Comment