இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஜார்க்கண்ட் மாநில அரசின் மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஜார்க்கண்ட் மாநில அரசின் மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர்!

ராஞ்சி,டிச.22- ஜார்க்கண்ட் மாநிலத் தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை- அம்மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.

இதனையடுத்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மாநி லத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரமேஷ் பயாஸை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியுள்ளார். 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற்றபோது மாநிலத்தில்  இடஒதுக்கீட் டின் அளவை அதிகரிப்போம் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங் கிரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்தது. 

அதன்படி கடந்த நவம்பர் 11 அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில், இடஒதுக் கீட்டு உச்ச வரம்பை 77 விழுக்காடாக உயர்த்தி, அம்மாநில ஹேமந்த் சோரன் அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்காக, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, ‘ஜார்க்கண்ட் அரசுப் பணி  காலியிடங்கள் மற்றும் பணிகள் திருத்த மசோதா-2022’வை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார்.  இந்த புதிய மசோதா மூலம், பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 12 விழுக்காடாகவும், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு  28 விழுக்காடாகவும் தலா 2 விழுக்காடு  உயர்த்தப்பட்டது. இதர பிற்படுத்தப் பட்டோ ருக்கு 12 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்டோரில் புதிதாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  (Extremely Back ward Classes  -EBCs) 4 என்ற புதிய பிரிவை உருவாக்கப்பட்டு,  அதற்கு தனியாக 15 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முந்தைய பாஜக அரசு, இதர பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டை 27 சதவிகிதத்தில் இருந்து 14 விழுக்காடாக குறைத்து இருந்தது. ஆனால், ஹேமந்த் சோரன் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 12 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கு 15 விழுக்காடு என இட ஒதுக்கீட்டு அளவை மீண்டும் 27 விழுக்காடாக உயர்த்தியது. பட்டியல் - பழங்குடியினருக்கும் தலா 2 விழுக்காடு இடஒதுக்கீட்டை உயர்த்தி, ஒட்டு மொத்தமாக 77 விழுக்காடாக அதி கரித்தது.

இந்த மசோதாவுக்கு பாஜக மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தது. இடஒதுக்கீடு விஷயத்தில், ஹேமந்த் சோரன் அரசு தேவையற்ற அவசரம் காட்டுவதாகவும், உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS)  இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றும் கூறியது. ஆனால், பாஜக எதிர்ப்பையும் மீறி, ஹேமந்த் சோரன் அரசு 77 விழுக்காடு இடஒதுக்கீட்டு மசோ தாவை நிறைவேற்றியது. அத்துடன், தமிழ்நாட்டில் நடைமுறையில்  இருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு, அரசியல் சாசனத்தின் 9ஆவது  அட்ட வணையில் சேர்க்கப்பட்டு பாதுகாக் கப்பட்டு இருப்பதுபோல, ஜார்க் கண்டில் கொண்டு வரப்பட்டுள்ள 77 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் 9-ஆவது அட்ட வணையில் சேர்த்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்தார். இந் நிலையில்தான், ஜார்க்கண்ட் மாநில அரசு மசோதா நிறைவேற்றி 2 மாதங்களாகியும் அம்மாநில ஆளுநர் இதுவரை 77 விழுக்காடு இடஒதுக் கீட் டுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது விமர் சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.  

இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி, ஆளுநரின் ஒத்துழையாமை குறித்து விவரித்து இருந்தார். இதன் அடுத்தகட்டமாக அனைத்துக் கட்சி  குழுவினரை ஆளுநர் மாளிகைக்கே அழைத்துச்  சென்று, ஆளுநர் ரமேஷ் பயாஸை சந்தித்துள்ளார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 77 விழுக்காடு இடஒதுக்கீட்டு மசோ தாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment