1971ஆம் ஆண்டு தந்தை பெரியார் தொடங்கிய 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆங்கில மாத இதழின் 2022 ஆண்டுக்கான மலர் வெளியீடு சென்னை - பெரியார் திடலில் நேற்று (30.12.2022) மாலை நடைபெற்றது. வெளியிடப்பட்ட ஆண்டு மலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு சிறப்பு மலராக வெளி வந்துள்ளது.
நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரும் 'விடுதலை' ஏட்டின் நிர்வாக ஆசிரியருமான கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமை வகித்தார். ஆண்டு மலரை சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் துணைத் தூதுவர் மாண்பமை செர்ஷி அஸராவ் வெளியிட முதல் சிறப்பு மலரினை தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் வேலூர் தொழில் நுட்ப (VIT) நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பெற்றுக் கொண்டார்.
மூத்த பத்திரிகையாளரும், 'ப்ரண்ட் லைன்' இதழின் மேனாள் ஆசிரியருமான இரா. விஜயசங்கர், கொடைக்கானலில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் து. ஜானகி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் (வயது 97) அவர்கள் சிறப்புச் செய்யப்பட்டார். பேராசிரியரின் உரைக்குப் பின்னர், ரஷ்ய தூதரக துணை தூதர் செர்ஷி அஸராவ் , வி.அய்.டி. பல்கலை வேந்தர் கோ. விசுவநாதன் வாழ்த்துரை வழங்கிய பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரையினை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று திராவிடர் கழகப் பொருளாளரும், 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' இதழின் இணை ஆசிரியருமான வீ. குமரேசன் உரையாற்றினார்.
நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இறுதியில் நன்றி கூறினார்.
ரஷ்ய தூதரக துணைத் தூதர்
சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் துணைத் தூதர் செர்ஷி அஸராவ் ஆண்டு மலரினை வெளியிட்டுப் பேசியதாவது:
பெரியார் 1930களிலேயே அன்றைய சோவியத் ரஷ்யாவிற்கு பயணம் செய்தார். அய்ரோப்பிய நாட்டுப் பயணத்தில் அதிகமாக 66 நாள்கள் சோவியத் ரஷ்யாவில்தான் தங்கியிருந்தார். அரசு விருந்தினராக மே1இல் மாஸ்கோவில் நடைபெற்ற அணி வகுப்பில் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் பல்வேறு முன்னேற்றங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது. இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் உள்ள தொடர்பு வெறும் அரசு ரீதியான தொடர்பு மட்டுமல்ல; அதற்கும் முன்பே ஏற்பட்ட கொள்கை சார்ந்த, பண்பாடு சார்ந்த, மக்களை உள்ளடக்கிய உறவு சார்ந்தது. ரஷ்ய தூதரகத்தின் சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வி.அய்.டி. வேந்தர் கோ. விசுவநாதன்
ஆசிரியரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரினை பெற்றுக் கொண்ட வி.அய்.டி. பல்கலைக் கழக வேந்தர் கோ. விசுவநாதன் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டதாவது:
வடமாநிலங்களைவிட தென் மாநிலங்கள் - குறிப்பாக தமிழ்நாடு கல்வியில் - உயர் கல்வியில் பல மடங்கு முன்னேற்றம் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் எழுத்தறிவு 1920களில் 7 விழுக்காடாக இருந்த நிலையிலிருந்து 1973இல் 65 விழுக்காடாக உயர்ந்து இப்பொழுது அதைவிட முன்னேற்றம் கண்டுள்ளது. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம், தளம் அமைத்து சமூகப் பணி ஆற்றியவர் தந்தை பெரியார்தான். இதை வட புலத்தவரே - தங்களுக்கெல்லாம் 'ஒரு பெரியார்' கிடைக்கவில்லையே என ஆதங்கப்படும் நிலை இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது. பெரியாரைத் தனது கொள்கை ஆசானாகக் கொண்ட அறிஞர் அண்ணா அரசியல் பாதையில் பயணித்து ஆட்சி அதிகாரத்தை மக்களின் ஆதரவோடு பெற்று தனது ஆசானின் கொள்கைகளை படிப்படியாக நடைமுறைக்குக் கொண்டு வந்தார். இன்று இந்தியாவில் - தமிழ்நாடு மட்டும் தனித்தன்மையுடன் 'இரு மொழிக் கொள்கை' என்பதை (தமிழ் - ஆங்கிலம்) அரசு அதிகாரப் பூர்வமாக்கியதற்கு தந்தை பெரியாரின் கொள்கை, அரசுக்கு ஆதரவாக நிலைப்பாடுதான் காரணம். ஆங்கிலம் கற்ற காரணத்தால் இன்று தமிழ்நாட்டு மாணவர்கள் உலகெங்கும் சென்று பலதுறைகளில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய நிலைமை மும்மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் மாநிலங்களில் - குறிப்பாக வட மாநிலங்களில் அவ்வளவாகக் காண முடியாது.
அரசியல் வழியினை தெரிவு செய்து கொண்ட பெரியாரின் சீடர்கள் அறிஞர் அண்ணாவை நினைவு கூர்ந்து - பகுத்தறிவுக் கொள்கையை நினைவு கூர்ந்து பகுத்தறிவுக் கொள்கையில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாது. பகுத்தறிவு சார்ந்த சிந்தனைகள் பள்ளிப் பாடத்திலிருந்து உயர்கல்வி வரை இடம் பெற வேண்டும். நான் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அமைச்சர் என்ற பல்வேறு பொறுப்பு நிலைகளிலே இருந்து இன்று உயர் கல்வி நிலையத்தை நிறுவி நடத்தி வரும் நிலையில் எப்பொழுதும் பகுத்தறிவாளராகத்தான் இருந்து வருகிறேன்; வாழ்ந்து வருகிறேன்.
தந்தை பெரியாரின் மனிதநேயக் கொள்கை அறிஞர் அண்ணாவின் அரசியல் பாதையில் நன்கு செல்ல வழி நடத்திடும் நிலையில் உள்ளவர் நமது ஆசிரியர் கி.வீரமணி ஆவார். மக்களுக்கு மட்டுமல்ல; அரசியல் கட்சித் தலைமைகளுக்கும் கொள்கைப் பிரச்சாரம் செய்து வழி நடத்திட ஆசிரியரின் சமுதாயப் பணி தொடர்ந்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இதழாளர் இரா. விஜயசங்கர்
மூத்த பத்திரிகையாளர் இரா. விஜயசங்கர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
50 ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு தமிழர் தலைவர் கி.வீரமணிஅவர்களைத் தொடக்கம் முதல் ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆங்கில மாத இதழின் பயணம் மகத்தானது. பெரும் கடினமான பணி. ஆனால் தொடர்ந்து வரும் பணி.
லெனின் கூறுவார், பத்திரிகை என்பது பிரச்சாரத்திற்கு மட்டுமல்ல; மக்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டப் பயன்படும் கருவி - அத்தகைய கருவியாக பல்லாண்டுகளாக பணி புரியும் 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' மற்றும் அதன் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மனம் சார்ந்த பாராட்டுகள் - பணி தொடர்ந்திட வாழ்த்துகள்.
புரட்சியாளர்களான மாவோ, லெனின் போன்றவர்கள் பணியாற்றாத - அரசியல் துறந்த சமூகப் பணியில் முத்திரை பதித்தவர் ஆசிரியர்.திராவிட இயக்கத்தின் சாதனைப் பயணத்தின் முக்கிய கட்டங்களின் ஓர் அங்கமாகவே வாழ்ந்து வருகிறார் ஆசிரியர் அவர்கள். அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகள். திராவிட இயக்கத்தின் நான்குதலைமுறை தலைவர்களுக்கும் கொள்கைச் சங்கிலியாக ஆசிரியர் வாழ்கிறார்.
பெனிடிக்ட் ஆண்டர்சன் (Benedict Anderson) எனும் மேலை நாட்டு அறிஞர் தனது "கற்பனை சமுதாயம்" (Imagined Communities) எனும் நூலில் குறிப்பிடுவார்.
ஒரு தலைவர் - சமுதாயத்தை முன்னேற்றும் பணியினை தனதுகடமையாக கொண்டு செயல்படுபவர் - தனது பணி முழுமையடைய அவர் இரு மொழி அறிவார்ந்தவராக (Bilingual Intellectual Person) இருக்க வேண்டும். ஒன்று - தாய்மொழி, மற்றொன்று - உலகை தொடர்பு கொள்ளத் துணை புரியும் மொழி. அப்படிப்பட்ட இரு மொழி அறிவார்ந்தவராக வாழக் கூடிய தலைவர் ஆசிரியர் அவர்கள். அவர் ஆற்றி வரும் பல்வேறு பணிகள் - படைத்து வரும் சாதனைகளுக்கு அவரிடம் உள்ள இந்த இரு மொழி அறிவார்ந்த நிலை என்பது முக்கிய அடிப்படையாக - அடித்தளமாக அமைந்துள்ளது.
தற்போது நிலவும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அறைகூவல் விடும் - சமூகநீதிக்கு பாதுகாப்பு மொழிக்கான உரிமைகள், மாநில சுயாட்சி, சுயமரியாதை உணர்வு ஊக்கம் சூழலில் தேவைப்படுவது - அரணாக இருப்பது திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கத்தின் போராட்டம் என்பது கருத்தியல் போராட்டமும், அரசியல் போராட் டமும் கலந்தது. அத்தகைய கருத்தியல் போராட்டத்தின் தோழ மையாளர் (Friend) கொள்கையாளர் (Ideologue) வழிகாட்டி (Guide) நமது ஆசிரியர் அவர்கள்தான்.
ஆசிரியர் அவர்களின் பணி நூற்றாண்டையும் தாண்டி சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டும்; தொடந்திட வேண்டும் என விரும்பி வாழ்த்தி அமர்கிறேன்.
மேனாள் துணைவேந்தர்
து. ஜானகி
அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் து. ஜானகி தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியாருக்குப் பின், அன்னை மணியம்மையாருக்கு பின் பல்வேறு அறக்கட்டளை சார்ந்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சமூகப் பணி ஆற்றி வருகிறார் ஆசிரியர்.
1998ஆம் ஆண்டு இயக்க தோழர்கள், நலம் விரும்புவோர் எனபல தரப்பினரும் - ஆசிரியருக்கு எடைக்கு எடையாக நன்கொடையாக அன்புடன் தங்கம் வழங்கினர். அந்த நன்கொடை முழுவதையும் தனது ஆசான் தந்தைபெரியார் வழிமுறையில் புதிய அறக்கட்டளையை உருவாக்கி மக்களின் பங்களிப்பு மக்களுக்கே, பரந்து பயன்படும் வகையில் ஏற்படுத்தினார் ஆசிரியர் அவர்கள். இத்தகைய நிலை உலகில் உள்ள எந்த தலைவர் வாழ்விலும் காண முடியாதது. அந்த வகையில் நமது ஆசிரியர் ஒரு தனித்தன்மை வாய்ந்த தலைவர், தன்னிகரற்ற தலைவர் - அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரையாற்றினர்.
(ஆசிரியர் அவர்களின் முழுப் பேச்சு பிற பக்கங்களில் வெளி வந்துள்ளது)
மூத்த கல்வியாளருக்கு பாராட்டு
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் அவர்களுக்கு, அவரைப் பற்றிய சிறு குறிப்புகளுக்குப் பின்னர், சால்வை அணிவித்து தமிழர் தலைவர் சிறப்பு செய்தார். பின்னர் சிறிது நேரம் பேசிய பேராசிரியர் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் கொள்கைகள் கொண்டு செல்லப்பட வேண்டும். ஆசிரியர் அவர்கள்தான் அந்த பணியினை தொடர்ந்து செய்து வருகிறார். வாழ்த்துகள் என்று கூறி முடித்தார்.
மலர் வெளியீடு
‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆண்டு மலர் ரஷ்ய துணைத்தூதர் வெளியிட வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் பெற்றுக்கொண்டார்.
தமிழர் தலைவரிடமிருந்து மலரைப் பெற்றுக்கொண்டவர்கள் விவரம் வருமாறு: 20 மலர்களை பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் பெற்றுக்கொண்டார். தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் சு.தேவ தாஸ், பொருளாளர், பொறியாளர் முனைவர் த.கு.திவாகரன், வழக் குரைஞர் சு.குமாரதேவன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ஆடிட்டர் இராமச்சந்திரன், பெரியார் பன்னாட்டமைப்பு சிகாகோ அரசர், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், துணைத் தலைவர் கரிகாலன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் விழிகள் வேணுகோபால், ஜனார்த்தனன், வழக்குரைஞர் ந.விவேகானந்தன், மாணவர் கழக செ.பெ.தொண்டறம் உள்பட பலரும் பெற்றுக்கொண்டனர்.
மலர் தொகுக்கும் பணியை மேற்கொண்டு சிறப்பாக செய்து முடித்த வீ. குமரேசனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
கலந்துகொண்டோர்
ரஷ்ய துணைத்தூதரக செயலாளர் எர்கேனி சுத்தலாட்சவ், இந்திய - ரஷ்ய வர்த்தக சபை பொதுச்செயலாளர் ப.தங்கப்பன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர், மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் அரங்கசாமி, புலவர் பா.வீரமணி, கழக துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் சு.மோகன்ராஜ், சா.தாமோதரன், சி. பாஸ்கர், ஊடகவியலாளர் மணிமாறன், பெரியார் நூலகவாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொகுப்பு:
வீ. குமரேசன்
No comments:
Post a Comment