நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடன நாள் (20.12.1916) கருத்தரங்கம் - தலைவர்கள் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடன நாள் (20.12.1916) கருத்தரங்கம் - தலைவர்கள் எழுச்சியுரை

சென்னை, டிச. 21- தென்னிந்திய நல உரிமைச்சங்கம் சார்பில் பார்ப்பனரல்லாதார் நலனுக்காக  20.12.1916 அன்று பார்ப்பன ரல்லதார் கொள்கை விளக்க அறிக்கை பிரகடனப்படுத்தப் பட்டது. அந்த நாளை நினைவு கூர்ந்து நேற்று (20.12.2022) மாலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடன நாள் விளக்கக் கருத்தரங்கம் நடை பெற்றது.

வருணாசிரமத்தின் பெயரால் பார்ப்பனர்கள் பார்ப்பன ரல்லாத மக்களை எந்த உரிமைகளையும் பெற முடியாத வர்களாக்கி, பக்தி, மூடத்தனங்களை திணித்துவிட்டனர். பார்ப்பனரல்லாதாரின் உரிமைகளுக்காக பாடுபட்ட தென்னிந் திய நல உரிமைச்சங்கம் (South Indian Liberal Federation) சார்பில் நடத்தப்பட்ட ஆங்கில ஏடு  ஜஸ்டீஸ். அந்த பெய ராலேயே ஜஸ்டீஸ் பார்ட்டி, நீதிக்கட்சி.என்று அழைக்கப் படலாயிற்று.  சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்' அரசு இன்றைக்கும் நீதிக்கட்சியின் நீட்சியாக வீறு நடை போட்டு வருகிறது. பிறவி பேதங்களை வலியுறுத்துகின்ற வருணாசிரமம் - சனாதன தர்மத்தைத் தூக்கிப்பிடிப்பவர்கள் இன்றைக்கு தலைதூக்க எத்தனிக்கிறார்கள். அவர்களுக்கு அறைகூவல் விடுக்கின்ற எழுச்சிமிகு நிகழ்ச்சியாக நேற்று (20.12.2022) இக்கருத்தரங்கம் நடைபெற்றது. 

105ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிடப்பட்ட சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் வெளியிடப்பட்ட நீதிக்கட்சி யின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடன நாளை எடுத்துக்காட்டி அதன் அவசியம் இன்றைக்கும் உள்ளதை இளையதலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கருத்தரங்கில் உரையாற்றிய அனைவருமே குறிப்பிட்டார்கள்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பாரதிதாசனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் தலைமையில் நடை பெற்ற கருத்தரங்கில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் வரலாற்றுப்பேராசிரியர் அ.கருணானந்தன் அனைவரையும் வரவேற்றார்.

நீதிக்கட்சியின் வழித் தோன்றல்களுக்கு பாராட்டு

நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.கோதண் டராமன் மகள் யசோதா சண்முகசுந்தரம்-முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் இணையர் பாராட்டப்பெற்றனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர், மனோண்மனீயம் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் வேதகிரி சண்முகசுந்தரம், அவர் வாழ்விணையர் அன்னை தெரசா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் யசோதா சண்முகசுந்தரம் ஆகியோருக்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி பாராட்டினார்.

மனோண்மனீயம் பல்கலைக்கழக முதல் துணை வேந்தரும், 97 வயதான பேராசிரியருமான வேதகிரி சண்முக சுந்தரம் ஏற்புரையில், "என் தலைவன், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவாளர். தந்தைபெரியார் வழியில் அவர்தம் கொள்கைகளை, இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். மிகச்சிறந்த பொருளியல்வாதி.அவர் நூறாண்டு கடந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

திராவிடர் கழகம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, திராவிட மொழி பேசுகின்ற மாநிலங்கள், மட்டுமன்றி மொகஞ்சதாரோவிலிருந்து தொடங்கி பரந்த பகுதிக்கும் உரியது" என்றார்.

பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் தலைமையுரையில்,  "திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புதிய பொறுப் பாளர்கள் பொறுப்பேற்றபின்னர் இந்த நிகழ்ச்சி நடை பெறுகிறது. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் நவம்பர் 20இல் நிகழ்ச்சி நடத்த காலஅவகாசம் இல்லை. ஆகவே, நீதிக் கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடனம் வெளியிடப்பட்ட டிசம்பர் 20  நாளில் கருத்தரங்கம் நடத்துகிறோம்.

மார்க்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கைபோல் நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடனம் புகழ்பெற்றது.

அன்றைக்கு பள்ளிக்கூடங்கள் ஜில்லா போர்டுகளால் நடத்தப்பட்டன. ஆனால், நீதிக்கட்சி ஆட்சியில்தான் அரசே பள்ளிக்கூடங்களை நடத்தியது உழைக்கும் மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்தான் தொடங்கி நடத்தியது. லேபர் பள்ளிக்கூடங்கள் என்று அதற்கு பெயர். மதிய உணவுத்திட்டத்தையும் தொடங்கி நடத்தியது" என்று குறிப் பிட்டார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

தமிழ்நாடு திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர்  மு.நாகநாதன் அவர்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவராக பொறுப் பேற்று முதல் நிகழ்ச்சியாக நீதிக்கட்சியின்  பார்ப்பனரல்லாதார்  கொள்கை அறிக்கை பிரகடன நாள் கருத்தரங்கை தலைமை யேற்று நடத்திய பேராசிரியர் பெ.ஜெகதீசன் அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

தமிழ்நாடு அரசின் மேனாள் திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர மு.நாகநாதன் உரையில் வரலாற்றுத் தகவல்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார். தந்தை பெரியார் அறிவுப்புரட்சி கருத்துகள் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களால் கடலாக பெருகியுள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்க உரையாற்றினார். "இன்னமும் தொடர்ந்து போராட வேண்டிய சூழல் உள்ளது. பெற்ற வெற்றிகளை தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டிய சூழல் உள்ளது. திராவிடர் கழகம், திமுக நீட் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தின. திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்புப் போராட்டம் என் தலைமையில்  அரியலூரில் நடந்தபோதுதான் அனிதா வெளியுலகிற்கு தெரிய வந்தார். 1200 மதிப்பெண்ணுக்கு 1176 பெற்றும் மருத்துவக்கல்வி மறுக்கப்பட்டுவிட்டது. உச்சநீதி மன்றம் வரை சென்றும், நீட்டின் படி மருத்துவ சேர்க்கை என்று உச்ச நீதிமன்றம் கூறி அனிதாவின் மரணத்துக்கு காரணமானது உச்சநீதிமன்றம். உச்சிகுடுமி மன்றமா? என்பார் ஆசிரியர்.  ஒன்றிய அரசின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ராஜாஜியின் குலக்கல்வி வரும் சூழல் - மீண்டும் பழைய சூழல் ஏற்படுத்த முனைகிறார்கள். தொடக்க உரை என்றார்கள். இதை இளைஞர்களிடம் சமூக ஊடகங்களில் தொடங்கி கொண்டு செல்ல வேண்டிய பணியை கடமையாக கொள்வோம். முதலமைச்சர் அவர்கள் ‘திராவிட மாடல்' ஆட்சி என்று தொடர்ந்து கூறிவருகிறார் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்த்து கொள்கைரீதியில் போராடுகிறோம்" என்று குறிப்பிட்டார்.

திமுக செய்தித் தொடர்புசெயலாளர் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உரையில், 

"நீதிக்கட்சியின்  பார்ப்பனரல்லாதார்  கொள்கை அறிக்கை பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், அரசின் புள்ளி விவரங்கள் கூறப்பட்டுள்ளன. அரசுத்துறைகளில், நீதித்துறைகளில் பல்வேறு பணிகளில் 87 முதல் 90 விழுக்காடு வரை குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே உள்ளனர். பார்ப்பனரல்லாதார் படிக்க வேண்டும் முன்னேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.நீதிக்கட்சி மக்களைப்பிரிக்கின்றது என்று எழுதினார்கள். நீதிக்கட்சியின் இந்த அறிக்கையை அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கம் கடுமையாக எதிர்த்தது" என்று பல்வேறு வரலாற்றுத் தக வல்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை யாற்றினார். "அரசமைப்புச்சட்டத்தின் 46 ஆவது பிரிவு நீதி குறித்து கூறுகிறது. சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வி யைக் கொடுக்கக் கூடாது என்கிறது மனுதர்மம். மீறிப்படித்தால் தண்டனை உண்டு. அண்ணல் அம்பேத்கர் மனுதர்மம்குறித்து கூறும்போது சமூகக் கொடுமை என்றார்" என பல்வேறு தகவல்களை எடுத்துக்காட்டி நிறைவுரையாற்றினார்.

கூட்ட முடிவில் ரா.சரவணன் நன்றி கூறினார்.

புத்தகங்கள் வெளியீடு

நீதிக்கட்சி தொடர்பான 14 நூல்கள்  நன்கொடை மதிப்பு ரூ.950. இந்நாளில் சலுகையாக ரூ.750க்கு அளிக்கப்பட்டது.  இச்சலுகை ஜனவரி 20 வரை உண்டு எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் 1916 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இல் நீதிக்கட்சியின்  பார்ப்பனரல்லாதார்  கொள்கை அறிக்கை பிரகடனப்படுத்தப் பட்டது. அந்த பிரகடனம் தமிழ், ஆங்கிலம் இரு மொழி களிலும் நூலாக நேற்று வெளியிடப்பட்டது. ஒரு நூலின் நன்கொடை ரூ.40.க்கு வழங்கப்பட்டது.

புத்தகங்களை பலரும் வரிசையில் நின்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர், திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்-இளங்கோவன், தமிழ்நாடு அரசின் திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன், சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சுந்தரம், பேராசிரியர் கோபிநாத், கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தங்க.தனலட்சுமி, அமைப்புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர் செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே..செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், தங்கமணி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், மாணிக்கம், பெரியார் மாணாக்கன்  வழக்குரைஞர்கள் தளபதி பாண்டியன்,துரை.அருண் உள்பட பலர் புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

கருத்தரங்கில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், புலவர் பா.வீரமணி, விழிகள் பதிப்பகம் வேணுகோபால், சி.வெற்றிசெல்வி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை உள்பட பலர் கலந்துகொண்டனர்.  நிகழ்வில் இணைப்புரையை திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்கினார்.



No comments:

Post a Comment