சென்னை, டிச.4 அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக 1,895 சிறப்பு (கவுரவ) விரிவுரையாளர் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கி உயர்கல்வித் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை, இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக சுழற்சி 1-இல் ஏற்கெனவே (2021-2022) அனுமதிக்கப்பட்டுள்ள 2,423 சிறப்பு விரிவுரையாளர்களுடன் தற்போது கூடுதலாக 1,895 சிறப்பு விரிவுரையாளர்களை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தலைமையிலான குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு தற்காலிகமாக பணியமர்த்த அனுமதி வழங்கப்படுகிறது.
அதற்கான செலவாக ஒரு சிறப்பு விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றுக்கு தொகுப்பூதியமாக ரூ.20 ஆயிரம் வீதம் நிகழாண்டு டிசம்பர் முதல், 2023 ஏப்ரல் வரை அய்ந்து மாதங்களுக்கு ரூ.18 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
சிறப்பு விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக நியமனம் செய்யப்படவுள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடத்துக்கு ஷ்ஷ்ஷ்.tஸீரீணீsணீ.வீஸீ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு, அச்செய்தியை அனைத்து அரசுக் கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.
உயர்கல்வித் துறையின் அரசாணை 11.1.2021-இல் வரையறுக்கப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி பெற்றவர்கள் கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் முதுநிலை, எம்.ஃபில்., பி.ஹெச்டி பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சான்றி தழின் நகல்களுடன், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்களுக்கு பணி அனுபவ அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்போது பணியமர்த்தப் படும் சிறப்பு (கவுரவ) விரிவுரையாளர்கள், முறையான நியமனம் பெற எவ்வித முன்னுரிமையும் அளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment