கடலூர் மாவட்டத்தில் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம்: அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

கடலூர் மாவட்டத்தில் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம்: அரசாணை வெளியீடு

சென்னை,டிச.21- உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின் கீழ் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை, குமாராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை, குமராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த கணக்கரப்பட்டு, கவரப்பட்டு, நக்கரவந்தன்குடி, பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலாபாடி, பெராம்பட்டு, சிவபுரி மற்றும் வரகூர் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு புதிதாக அமைக்கப்படவுள்ள 2 நீர் சேகரிப்பு கிணறுகள் மூலம் 2,078 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளுடன் கூடிய கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த அரசாணை எண்.175, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 14.12.2022இல் ரூ.255.64 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின்கீழ் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், சுமார் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறுவர். மேலும், நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 90 லிட்டர் வீதமும் மற்றும் ஊரகப் பகுதிகளில் 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment