தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 1,000 பேருந்துகள் வாங்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 3, 2022

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 1,000 பேருந்துகள் வாங்க முடிவு

சென்னை,டிச.3- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை செயலர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்ப தாவது: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2022-2023ஆம் நிதியாண்டில் 1,000 பேருந்துகள் கொள் முதல் செய்ய, ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, போக்குவரத்து துறைத் தலைவர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், ‘போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 20,257 பேருந்துகளில் 9,253 பேருந்துகள் (46 சதவீதம்) காலாவதி ஆகிவிட்டதாகவும், அதை ஈடு செய்யும் வகையில் தலா ரூ.42 லட்சம் செலவில், 1,000 புதிய பேருந்துகள் வாங்க வேண்டும். அவற்றில் நகரப் பகுதிகளுக்கு 60 சதவீத பேருந்துகள், புறநகர் பகுதிகளுக்கு 40 சதவீத பேருந்துகள் ஒதுக்கப்படும். இதற்காக அரசு ரூ.420 கோடி நிதி ஒதுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதை கவனமாகப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், கோவை, சேலம், விழுப்புரம் ஆகிய கோட்டங்களுக்கு மொத்தம் 1,000 பேருந்துகள் வாங்க, ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. டெண்டர் மூலம் பேருந்துகள் கொள்முதல் செய்யும் பணியை, சாலைப் போக்குவரத்து நிறுவனம் கண் காணிக்கும்.

மத்திய மோட்டார் வாகன விதிகள், மாற்றுத் திறனாளி களுக்கான உரிமைகள் நலச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் பேருந்துகள் இருப்பதை சாலைப் போக்குவரத்து நிறுவன இயக்குநர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு 180 பேருந்துகள், சேலம் போக்குவரத்து கழகத்துக்கு 100 பேருந்துகள், கோவை போக்குவரத்து கழகத்துக்கு 120 பேருந்துகள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்துக்கு 250 பேருந்துகள், மதுரை போக்குவரத்து கழகத்துக்கு 220 பேருந்துகள், திருநெல்வேலி போக்குவரத்து கழகத்துக்கு 130 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

அமைச்சர் பெருமிதம்: இந்நிலையில், இந்த அரசாணை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்  வெளியிட்ட அறிக்கையில், ‘பெண்களுக்கான இலவச பேருந்து பயண சலுகை திட்டத்தை மேம்படுத்தவும், மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யவும், பேருந்து களை மேம்படுத்தவும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகள் ரூ.130 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளன.

இதற்கு அரசின் நிதியாக ரூ.80 கோடியும், எஞ்சிய ரூ.50 கோடியை சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகங்களே ஏற்கும் வகையில் சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது ரூ.420 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும் அரசாணை வெளியிடப்படுகிறது. இதனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment