அரிமாக்களே அணிதிரண்டு வாரீர்!
- கலி.பூங்குன்றன் -
நாங்கள் இணை ஆட்சிநடத்தவில்லை - துணை ஆட்சிதான் நடத்துகிறோம் என்று கூறுகிறார் தெலங் கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை.
பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் என்ன ஆட்சி நடத்துகிறார்கள் ஆளுநர்கள் என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் திரு.ஆர்.என்.இரவியோ, இணை - துணை இவற்றையும் தாண்டி ‘தனி ஆட்சி' நடத்திக் கொண்டுள்ளார்.
ஆளுநர் என்றால் அமைச்சரவை எடுக்கும் முடிவின்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளாரே தவிர, தனிக்காட்டு ராஜாவாக செயல்பட முடியாது.
அவருக்குள்ள கடமைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கதாகாலட்சேபம் நடத்திக் கொண் டுள்ளார்; சனாதனமும், ஆன்மிகமும் இரண்டு கண்கள் என்கிறார் தமிழ்நாடு ஆளுநர்.
சனாதனம், ஆன்மிகம்பற்றிப் பேச நாட்டில் ஏற்கெனவே ‘பாகவத சிரோன்மணிகள்' இருக்கிறார்களே, இவருக்கு ஏன் இந்த வேலை என்ற கேள்வி எழுகிறது.
திருக்குறளை மொழி பெயர்த்த வெளிநாட்டினர் தங்கள் மதக் கோட்பாட்டை அதில் திணித்துள்ளதாக - தமிழை மெத்தப் படித்த இந்த அறிஞர் ஆளுநர் கூறுவதைக் கண்டு நகைக்கத்தான் வேண்டும்.
ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி திட்டமிட்டுத்தான் பி.ஜே.பி. ஆட்சியில்லாத மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர் களாகத் தட்டிப்பார்த்து எடுத்து அனுப்புகிறது போலும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப் பினர்களைக் கொண்ட ஒரு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை - நியமன அதிகாரியான ஆளுநர் காலவரையறையின்றி நிறுத்தி வைக்கும் அதிகாரம் என்பது ஜனநாயகத்தைக் கேலி செய்வதும், குழி தோண்டிப் புதைப்பதுமல்லாமல் வேறு என்னவாம்?
போகிற போக்கைப் பார்த்தால் ‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?' என்று அறிஞர் அண்ணா சொன்ன வினா இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வெடித்து - வெகுமக்கள் போராட்டமாகப் பேருரு கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்த 21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக ‘தவம்' கிடக்கின்றன. (பட்டியல் தனியே காண்க).
இப்பொழுதுள்ள பிரச்சினை என்ன?
ஆன்லைன் ரம்மி சூதாட்டம் என்ற மோசடிக் குழிக்குள் வீழ்ந்து இந்திய ஒன்றியம் முழுவதும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளும் வளர்ந்து வருகிறது. கடன் வாங்கியும் ஆன் லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டில் வெறியுடன் ஈடுபட்டு, பொருளை இழந்து, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வதுபோல குடும்பத்தையும் நடுத் தெருவில் நிற்கவிடும் அவலத்தை எண்ணினால் நெஞ்சமெல்லாம் பதறுகிறது!
மக்கள்மீது கவலை கொண்டவர்கள், கட்சிகளையும் கடந்து இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தடை செய்யப்படவேண்டும் என்று அழுத்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் நலனில், இளைஞர்கள் நலனில் நாட்டம் கொண்ட ‘திராவிட மாடல்' அரசு நடத்திக் கொண் டிருக்கும் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான உன்னத அரசு, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்து, மசோதாவை அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி, கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
இதுகுறித்து மிகவும் காலந்தாழ்த்தி, தமிழ்நாடு அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார் ஆளுநர். 24 மணிநேரத்திற்குள் உரிய விளக்கம் அளித்து ஆளுநரிடம் தமிழ்நாடு அரசால் கொடுக்கப் பட்டும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அலட்சியம் காட்டுவது அழிச்சாட்டியம் அல்லாமல் வேறு என்ன?
சுயமரியாதைக்கும், பகுத்தறிவுக்கும், மாநில உரி மைக்கும் தாய்வீடான தந்தை பெரியார் பிறந்த திராவிட மண் கைகட்டி, வாய்ப் பொத்தி நிற்க முடியுமா?
தமிழ்நாட்டைக் கிள்ளுக் கீரையாக நினைக்கிறாரா ஆளுநர் இரவி?
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. பொறுத்தது போதும் பொங்கி எழுவீர் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் நேற்று (28.11.2022) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1.12.2022 காலை 11 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தோழர்களே, உரிமை முழக்கமிட அணிதிரண்டு வாரீர்! அலை அலையாக வாரீர்! வாரீர்!!
இதில் கட்சியில்லை - ஜாதியில்லை - மதமில்லை.
மாநில உரிமைதான் முக்கிய முதல் அம்சம் - உரிமையைப் பறிகொடுத்து ஓட்டாண்டியாக இருக்க முடியாது - இருக்கவே முடியாது!
உரிமை முழக்கமிட வாரீர், வாரீர் என்று அழைக்கிறோம், அழைக்கிறோம்!
No comments:
Post a Comment