கனமழை - களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

கனமழை - களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை, நவ 3 தமிழ்நாட்டில் நேற்று (2.11.2022) பரவலாக கனமழை பெய்த நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மய்யத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். சென்னை, வடகிழக்கு பருவமழை கடந்த 29-ஆம் தேதி தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.   தலைநகர் சென்னையை பொறுத்தவரை கடந்த 31-ஆம் தேதி மாலை மழை பெய்ய தொடங்கியது. மழை தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்ததால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக கடந்த 1-ஆம் தேதி (நேற்று முன்தினம்) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எதிர் பார்த்தபடியே அன்றைய தினத்தில் மழை கொட்டி தீர்த்தது.   இந்த மழை நேற்று காலையும் நீடித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப் போது மழை பெய்வதும், சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் பெய்வதுமாக இருந்தது.  இதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை, விழுப் புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் என தமிழ்நாடு நேற்று பரவலாக மழை பெய்தது. புதுச்சேரியிலும் நேற்று மதியம் மழை பெய்தது.

மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.   நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 15 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் வருகிற 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை லேசானது முதல் மிதமான மழைக்கான வாய்ப்பு இருப்ப தாகவும், மேலும் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.  

ஆரஞ்சு எச்சரிக்கை 

நாளை (வெள்ளிக்கிழமை) கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடு துறை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக் கிறது. நாளை மறுதினம் (சனிக்கிழமை), தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடு துறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மேற்சொன்ன 2 நாட்களிலும் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடிய 6 மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியில் விடுக்கப்படும் ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மய்யம் விடுத்து இருக்கிறது.

15 மாவட்டங்களில் கனமழை 

வருகிற 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.  

முதலமைச்சர் ஆய்வு

இந்தநிலையில் சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

கட்டுப்பாட்டு அறையில், இதுவரை தமிழ்நாடு பெய்த மழையின் அளவு குறிப்பாக சென்னையில் பெய்த மழை அளவு என்ன? சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு எவ்வளவு? என்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட தீர்வுகள், நிலுவையில் உள்ள புகார்கள் விவரங்களையும் கேட்டு பெற்றார். அனைத்து புகார்களுக்கும் தீர்வு கண்டு பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு தரவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

அதனைத்தொடர்ந்து கட்டுப் பாட்டு அறை எண்ணுக்கு வந்த புகார்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். புகார்கள் அளித்த பொதுமக்களை 'வீடியோ கால்' மூலம் தொடர்புகொண்டு அவர் பேசினார். பலர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டதாகவும், உடனடி நடவடிக்கைக்காக முதலமைச்சருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர். மாநகராட்சி சிறப்பான சேவையை செய்வதாகவும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இருப்ப தாகவும் பாராட்டினர். 

ஒரு பெண்மணி, 'அய்யா... நேத்து வீட்டுக்குள்ள தண்ணி வந்துடுச்சு... புகார் கொடுத்த உடனேயே வந்து எடுத்துட்டாங்க... ஆனால் மறுபடியும் இரவு மழை பெய்து தண்ணீர் வீட்டுக் குள்ள வர ஆரம்பிச்சுடுச்சு... இப்போது தண்ணீர் அளவும் அதிகமாயிடுச்சு... கொஞ்சம் இதை மட்டும் எடுக்க நடவடிக்கை எடுங்கய்யா...' என்று வேண்டுகோள் விடுத்தார். உடனே 'நீங்க கவலைப்படாதீங்கம்மா... நான் உடனடி நடவடிக்கை எடுக்க சொல் கிறேன்' என்று பதில் அளித்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், அழைப்பை துண்டித்த அடுத்த வினாடி, 'அந்த பிரச்சினையை விரைவில் சரி செய்யுங்கள்' என்று அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பித்தார். 

அக்கறையுடன் விசாரிப்பு 

 புகார் அளித்த பொதுமக்களிடம், 'வீடியோ கால்' மூலம் 'உங்கள் பிரச் சினை சரிசெய்யப்பட்டதா?', 'ஜாக்கிர தையாக இருங்கள்', 'நான் இருக்கிறேன்' என்று மிகவும் அக்கறையுடன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதலமைச்சரே நேரடியாக குறைகளை கேட்டதும், அன்பாகவும், அக்கறை யாகவும் பேசியதை கேட்ட பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக கடந்த ஆண்டு மழை பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் 'தற்போது அந்த பாதிப்பு இல்லை. மழைநீர் வடிகால் பணிகள் நல்லபடியாக கைகொடுத்துள்ளன' என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மழை பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் 'வீடியோ கால்' மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதிகாரிகளும் மழைநீர் தேங்கிய பகுதிகளில் இரவோடு இரவாக மழைநீர் அகற்றப்பட்டு விட்டன என்றும், மழைநீர் வடிகால் பணிகளால் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உற்சாகம் தெரிவித்தனர். ஆனாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்தி கொள்ளவில்லை. 'இன்னும் மழை இருக்கிறது என்று வானிலை மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே கவனமாக இருங்கள். மக்கள் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது' என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி அறிவுறுத்தினார்.


No comments:

Post a Comment