இந்திய அரசமைப்பு சட்டம் கவனமும், அக்கறையும் குடிமக்களுக்கு தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

இந்திய அரசமைப்பு சட்டம் கவனமும், அக்கறையும் குடிமக்களுக்கு தேவை

கும்மடிதலா ரங்கா ராவ்

"இந்திய மக்களாகிய நாங்கள்" என்று தொடங்கும் முன்னுரை கொண்ட இந்திய அரசமைப்பு சட்டம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அரசமைப்பு சட்ட மன்றத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. நீண்டதொரு காலமாக கவனிப்பார் அற்றுக் கிடந்த அது, 2015 ஆம் ஆண்டு முதல் அரசமைப்பு சட்ட தினவிழாவாக கொண்டாடப்பட்டு  வருகிறது. சுதந்திர இந்தியாவின் அரசாட்சிக்கு ஓர் அரசமைப்பு சட்டத்தை நாடு கட்டமைத்துக் கொண்ட தினம் வரலாற்று சிறப்பு மிகுந்த நாளாகும். இந்த கொண்டாட்டங்களைத் தாண்டி நாட்டின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி அந்த பிரகடனம் என்ன சொல்கிறது என்று நாம் பார்க்கவேண்டியது மிகமிக முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக, "இந்திய மக்களாகிய நாங்கள்"  என்போரில் எவ்வளவு  மக்கள் எந்த அளவுக்கு அரசமைப்பு சட்டத்தை  அறிந்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கான விடை மனநிறைவையும்  ஆர்வத்தையும் அளிப்பதாக இருக்க முடியாது. படிப்பறிவு அற்ற மக்கள்  அரசமைப்பு சட்டத்தைப் பற்றி அறிந்து இருக்கவில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால், படித்த மக்களிடையேயும் இந்த நிலை மாறுபட்டதாக இல்லை என்பது மிகமிக வருந்தத் தக்கதாகும். அரசமைப்பு சட்டம் நம் வாழ்க்கையில் இருந்து பிரித்துப் பார்க்க இயலாதபடி அதனுடன் பின்னிப் பிணைந்து  இருப்பதாகும்.

 அரசமைப்பு சட்டம் நம் அன்றாட வாழ்க்கையின் மீது ஏற்படுத்தி உள்ள தெளிவான அடையாளத்தை நம்மால் உண்மையில் அறிந்து கொள்ள முடியாமல் போகலாம். நம்மை ஒரு காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்தும்போது அவர் ஏன் நம்மை தடுத்து நிறுத்துகிறார் என்று நாம் கேட்டால், அதன் காரணமே அரசமைப்பு சட்டம் நமக்கு அளித்திருக்கும் உரிமைதான். நாம் படிக்கும் செய்தித் தாள்கள், நாம் பார்க்கும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், பேருந்திலோ, ரயிலிலோ அல்லது நமது சொந்தக் காரிலோ நாம் செய்யும் பயணம், கடவுச்சீட்டுப் பெறுவது, விமானத்தில் பறப்பது, நாம் விரும்பும் தொழிலைச் செய்வது, உணவு விடுதியில் நாம் விரும்பும் உணவை உண்பது, அங்காடிகளில் நவீன உடைகளை வாங்குவது - இவற்றை எல்லாம் செய்வதற்கு நம்மால் இயல்வதற்கு காரணமே, நமக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்தான். விரும்பிய இடத்துக்கு செல்வது, கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், நாம் விரும்புபவரை தேர்ந்தெடுத்து பேசும் சுதந்திரம், நாம் விரும்பியதை வாங்கும் சுதந்திரம், நம் உடைமைகளை விற்கும் சுதந்திரம், நாம் விரும்பும் தொழிலை செய்வது, நாம் விரும்பும் உடைகளை அணிவது என்னும் இந்த அனைத்து சுதந்திரங்களும், அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் இருந்து பெறப்படுபவை ஆகும். ஆங்கிலேயரிடமிருந்து நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இ;ந்த சுதந்திரங்கள் எல்லாம் நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கவில்லை.

நாடு சுதந்தரம் அடைந்தபோது, கடந்த காலத்தில் இருந்து நம்மை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு, நமது அரசமைப்பு சட்டத்தின் மூலம்,  துணிவு மிகுந்த ஒரு புதிய சமூகத்தை கட்டமைத்துக் கொள்வதற்கு நமது விடுதலைப் போராளிகள் விரும்பினர். இவ்வாறுதான் நமது அரசமைப்பு சட்டம், ஜாதி, இன, மத, நிறம், பால், சொத்து, கல்வி ஆகிய அனைத்திலும் இந்திய குடிமக்கள் சமஉரிமை பெற்ற குடிமக்களாய் இருப்பார்கள் என்று அறிவித்துள்ளது.

 ஆண்-பெண், பணக்காரர் - ஏழை, படித்தவர்-படிக்காதவர், கற்றறிந்தவர்கள் - அறியாமை மிகுந்தவர்கள் ஆகியோரிடையே இருந்த  ஏற்றுக் கொள்ள இயலாத சமத்துவமின்மைகள் வளரக் காரணமாக இருந்த, மதம்,  சடங்குகள்,  அறியாமை, வறுமை ஆகியவற்றில் மூழ்கி இருக்கும் ஒரு நாட்டில், இவ்வாறு செய்தது மாபெரும் செயலாகும். இத்தகைய  ஏற்றத் தாழ்வுகள் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு, பலமற்றவர்களுக்கும்,  வாய்ப்புகள் அற்றவர்களுக்கும் சமமான ஆடுகளம்  அமைத்துத் தந்தும் கூட, அனைத்து குடிமக்களையும் சமமாக இந்த அரசமைப்பு சட்டம் வைத்துள்ளது.

மனித  சிந்தனையிலும், பழக்க வழக்கங்களிலும் மாற்றத்தைக்  கொண்டு வருவதற்கு சட்டம் ஒரு பலமான  வழி இல்லை என்ற உண்மையை நம்மால் மறுக்கமுடியாது. அனைத்து  இந்தியர்களும் சமமானவர்கள் என்று அரசமைப்பு சட்டம் அறிவித்த காரணத்தால் மட்டுமே  அது  அறிவிக்கப்பட்ட  நாள்  முதல் அந்த சமத்துவம் வந்துவிடவில்லை. ஆனால், நம்  குழந்தைகளுக்குள் நாம் அந்த சமத்துவ உணர்வை பதியச் செய்தால், சமூக மாற்றம் என்பது  ஏற்படுத்த இயன்றதுதான். பொய் சொல்லக் கூடாது, திருடக்  கூடாது என்று நம்  குழந்தைகளுக்கு நாம்  கற்றுத்  தருகிறோம். தங்களது வகுப்புத் தோழர்களை சமமாக நடத்தவேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுத்  தர நம்மால்  இயலாதா? அரசமைப்பு சட்டமும் அதனைத் தான் கூறுகிறது.   ஆனால் அரசமைப்பு சட்ட முன்னுரையில் பொறிக்கப்பட்டுள்ள லட்சியங்களை  நாம்  அறிந்திருக்கவில்லை.

அரசமைப்பு சட்டத்தின் நகல் ஒன்று நம்மிடம்  இருந்து. அதை எப்போதாவது திறந்து  பார்க்காமல் போனால், அதைப் பற்றி நாம் எவ்வாறு  அறிந்து கொள்ள முடியும்? தங்களது குழந்தையின் பிறந்த நாளன்று அரசமைப்பு சட்ட நூல் ஒன்றை பரிசாக அளிக்க எந்த பெற்றோராவது முன்வந்துள்ளார்களா?

முதிர்வடைந்த மனதுடனும், கட்டுப்பாடு கொண்ட  பழக்க வழக்கங்களுடனும், பொறுப்புள்ள ஒரு மனிதனாக தங்களது  குழந்தைகள் வளரவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர்.  பெண்களிடம் மரியாதை, பலவீனமானவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களிடம்  கருணை காட்டுவது,  வரதட்சணை வாங்காமல் இருப்பது,  ஒரு மனிதரின்  மதிப்பீடுகளை  அளவிடுவதற்கு ஜாதி, மத  அளவுகோலை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற மதிப்பீடுகளை அவர்களுள் பொதியச்  செய்ய இயலாமல் போனால், அது ஒரு குழப்பமான பயனற்ற லட்சியமாகவே இருக்கும். இந்த மதிப்பீடுகளை நாம் எங்கே காண்பது. நமது அரசமைப்பு  சட்டத்தில் காணலாம்.

அரசமைப்பு சட்டத்தின் 15  ஆவது பிரிவு "மதம், இனம், ஜாதி, பாலின, பிறப்பிட அல்லது அது போல ஏதோ ஒன்றின் அடிப்படையில் எந்த குடிமகனுக்கும் எதிராக அரசு பாகுபாடு காட்டக்கூடாது" என்று கூறுகிறது. அரசு என்பதற்கு  பதிலாக அந்த இடத்தில் சமூகம் என்று கூறப்பட்டிருந்தால், அந்த சொற்றொடர் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்? தங்கள் பிள்ளைகளை வளர்த்து, நல்ல பழக்க வழக்கங்களையும்  மதிப்பீடுகளையும் கற்பிக்கும் போது, இது போன்று எந்த பெற்றோராவது சிந்தித்து இருப்பார்களா? ஆனால், ஒரு மருத்துவராக ஆவது,  பொறியாளராக ஆவது, மிகப்  பெரிய அளவில் வரதட்சணை வாங்குவது போன்ற  மனங்களை கெடுக்கும் மதிப்பீடுகளையே நாம் கற்றுத் தருகிறோம்.

அலட்சியத்துக்கான  விளக்கம்

அரசமைப்பு  சட்டத்தின் மேல் நாம் கொண்டிருக்கும் இந்த  அலட்சியத்துக்கான காரணத்தை எவ்வாறு நம்மால் விளக்க இயலும்? மத நூல்களுக்கு நாம் மிகுந்த மரியாதை செலுத்தி, அவற்றை புனித கோட்பாடாகக் கருதி வணங்குகிறோம். ஆனால், நமது வாழ்க்கையையே மாற்றிய அரசமைப்பு சட்டத்தின் பால்  நாம் அலட்சியம் காட்டுகிறோம். மெத்தப் படித்து பெரும் பதவிகளில் இருப்பவர்களும் கூட, அவர்கள் வழக்குரைஞர்களாக இல்லாவிட்டால், அவர்கள் வீடுகளில் அரசமைப்பு சட்ட  நூல் ஒன்று இருக்குமா என்பதே சந்தேகம்தான். அடிப்படை உரிமைகள் என்று ஏதோ ஒன்று இருக்கிறது என்று படித்த மக்கள், அரசமைப்பு சட்டத்தின் IV-A பகுதியில் அடிப்படை கடமைகளைப் பற்றி பொறிக்கப்பட்டுள்ளது  என்பதை பெரிதும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். அரசமைப்பு சட்டம் மக்களுக்கு  அளிக்கப்பட்டுள்ள  உரிமைகள் அவர்களுக்கு பொறுப்புகளையும் தந்திருக்கிறது. அரசமைப்பு சட்ட IV-A பகுதியின் ஓர் அத்தியாயத்தில் மக்களின்  அடிப்படைக் கடமைகள் என்ன என்று கூறப்பட்டுள்ளது

பாடதிட்டத்தின் ஒரு பகுதியாக

அரசமைப்பு  சட்டத்தின்மீது நாம் கல்லூரி அளவில் இல்லாவிட்டாலும், பள்ளி அளவிலாவது, அதிக கவனம்  செலுத்த வில்லை என்பது பெரிய   இழப்புக்  கேடேயாகும். அரசமைப்பு சட்டம் அதற்குரிய  அங்கீகாரத்தை கல்வி நடைமுறையில் பெறவேண்டும். நவம்பர்  26 அன்று அரசமைப்பு சட்டதினம் கொண்டாடுவது எல்லாம் சரிதான். ஆனால் அந்த ஒரு அடையாளத்துடன் நாம் நின்றுவிடக் கூடாது. அரசமைப்பு சட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் கையாளப் பட்டுள்ளன என்பதையும் பார்த்து, அதன் வழியாக நமது வாழ்வை நாம் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது பண்டைய நூல்கள் 'வசுதேவ குடும்பம்' என்ற ஒன்றை நமக்குக் கற்றுத் தந்துள்ளன. ஒட்டு மொத்த மனித இனமே ஒரு பெரிய குடும்பம் என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு மனிதனும் மற்றொரு மனிதனுடன் உறவு கொண்டவன். நமது சக இந்திய  குடிமக்களை சகோதரர்கள் போல நடத்துவதற்கு நாம் முதலில் கற்றுக் கொள்ள  வேண்டும். அரசமைப்பு சட்டத்தின் முதல் பக்கத்தை நாம் திறந்து பார்க்கும்போதுதான் இதனை நாம் அறிந்து கொள்வோம். அதற்கு நமக்கு  அரசமைப்பு சட்ட நகல் ஒன்று  வேண்டும். இந்நாட்களில்  சினிமாவுக்கு நாம் செலவு செய்வதை விட அதன்  விலை குறைவானதுதான்.

நன்றி: 'தி இந்து' 26.11.2022

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment