கல் முதலாளி ஏழுமலையான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

கல் முதலாளி ஏழுமலையான்

முதலாளிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பிடத் தக்க முதலாளிகள் கல் முதலாளிகளான கடவுள்கள்.

காணிக்கைகளை மக்கள் குவிக்கின்றனர். எதற்காக? தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படி நினைத்து கடவுளுக்குக் காணிக்கைகளைக் கொட்டிக் கொடுக்கும் அந்தப் பக்தர்கள், மற்றவர்களுக்கு  கெடுதல் செய்யாமல் இருக்கிறார்களா? கெடுதல் செய்பவர்களும், கெடுதல்களுக்கு ஆளாக்கப்படும் பக்தர்களும், போட்டிப் போட்டுக் கொண்டு கடவுள் களுக்குக் காணிக்கைகளைக் கடன் வாங்கிக்கூட குடும்ப சகிதமாகக் கோயிலுக்குச் சென்று கொட்டிக் கொடுக்கிறார்கள் என்றால் இந்த மூடத்தனத்தையும், பக்தி மூர்க்கத்தனத்தையும் என்னவென்று சொல்லுவது!

கடவுள்தான் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே - எல்லாம் வல்லவராயிற்றே - ஆக்கல், காத்தல், அழித்தல் எல்லாம் செய்யக் கூடிய மும்மூர்த்திக் கடவுள்களுக்குப் பக்தர்கள் பணத்தையும், தங்கத்தையும், வெள்ளியையும் அள்ளிக் கொடுப்பது முரண்பாடு அல்லவா - ஒரு வகையில் கடவுளை அவமதிப்பதும் ஆகாதா!

கடவுள்களுக்கே ஆறு கால பூஜைகளும், படையல் களும் நடக்கின்றன. அவற்றில் ஒரு பருக்கையையாவது கடவுள் எடுத்து உண்பது உண்டா?

"வேண்டுதல் வேண்டாமை இலான்" கடவுள் என்பது இதுதானா?

நேற்று ஏடுகளில் வெளிவந்த ஒரு தகவல் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளாக 10,288 கிலோ தங்கம், ரூ.15,938 கோடி ரொக்கம்!

அதிக வட்டி கொடுக்கும் வங்கியில் வைப்புத் தொகை (Deposit)  செய்துள்ளனராம்.

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி வேகவேகமாகப் பறந்து கொண்டிருக்கிறது. உலகப் பட்டினிப் பட்டியலில் 107ஆம் இடத்தில் விழுந்து கிடக்கிறது.

இந்த நிலையில் ஏழுமலையானுக்குக் காணிக்கை என்ற பெயரில் கொட்டப்படும் பணமும், தங்கமும் வங்கிகளில் குறட்டை விட்டுத் தூங்க அனுமதிக்கலாமா?

கோயில்களுக்கென்று கொடுக்கப்பட்ட நிலங்களும், கோயில் புரோகிதர்களால் கொள்ளை அடிக்கப்படுவது இன்னொரு புறம்.

ஏழுமலையான் கோயிலுக்கு விஜய நகர மன்னன் கிருஷ்ணதேவராயன் கொடுத்த நகைகளைக் காணவில்லை என்று ஒரு செய்தி வந்து எத்தனை ஆண்டுகள் ஆகின?

அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனரா? -தண்டனை வழங்கப்பட்டதா?

ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வந்து குவியும் தங்க நகைகளை உருக்கி இரண்டு, அய்ந்து, பத்து கிராமில் ஏழு மலையான் உருவம் பொறித்த தங்க டாலர்கள் விற்கப்படுகின்றன.

2001லிருந்து 2006 வரை ஏழுமலையான் கோயிலில் ஏழுமலையான் டாலர் விற்பனையில் நடந்த மோசடி "உலகப் புகழ்" பெற்றது.

இதில் முன்னணியாக இருந்து மோசடி செய்தவர் பெயரும் வெங்கடாசலபதி என்பதுதான் "நகைச்சுவை"

நெற்றியில் பெரிய நாமம் (கடவுளுக்கே நாமம் போடுபவராயிற்றே!) தொப்புள் வரை தொங்கும் ஏழு மலையான் டாலர். இவருக்கு டாலர் சேஷாத்திரி என்ற பட்டப் பெயர் வேறாம்!

இந்தத் தகவல்களை எல்லாம் வெளியிட்டது 'விடுதலை' ஏடல்ல - 'ஜூனியர் விகடன்' வார ஏடுதான் (17.8.2009).

எடுத்துக்காட்டுக்குத்தான் ஏழுமலையான் கோயில் - இந்தப் பட்டியலில் அனேகமாக ஒவ்வொரு முக்கிய கோயிலும் அடங்கும்.

கோயிலில் உள்ள அய்ம்பொன் சாமி சிலைகளைக் கடத்துவதில் துணை போகின்றவர்கள் கூடப் பெரும்பாலும் பார்ப்பன அர்ச்சகர்கள்தானே!

இந்து அறநிலையத்துறை என்ற ஒன்றை நீதிக்கட்சி கொண்டு வந்தபிறகுதான், இத்தகைய கோயில் கொள்ளைகள் ஒரு வகையில் கட்டுப்படுத்தப்பட்டன.

சிதம்பரம் நடராஜன் கோயிலின் கதை என்ன? முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக  இருந்தபோது சிதம்பரம் நடராஜன் கோயில் அரசு கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வரப்பட்டது.

நீதிமன்றத்தில் தீட்சதர்கள் சொன்னது என்ன? கோயில் வருமானம் ஆண்டுக்கு ரூ.37,199 (பேட்டா விலை போல் இருக்கிறதா?) செலவு ரூ.37,000; மிச்சம் ரூ.199 என்று நீதிமன்றக் கூண்டில் ஏறி கடவுள் பெயரால் சத்தியம் செய்து இப்படியொரு பொய்யைக் கூறினார்கள்.

அதே நேரத்தில் அரசு கட்டுப்பாட்டுக்குக் கீழ் சிதம்பரம் நடராஜன் கோயில் வந்தபோது, இந்து அறநிலையத்துறை என்ன கூறியது? 15 மாத கோயில் வருமானம் ரூ.25,12,485.

இந்த வேறுபாட்டை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இந்து அறநிலையத்துறையை ஒழித்து தங்கள் வசம் கோயில்களை ஒப்படைக்கக் கூறும் பார்ப்பனர்களின் நோக்கம் என்ன என்பது இப்பொழுது புரிந்திருக்குமே!


No comments:

Post a Comment