சென்னை,நவ.15-தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் 91 உயர்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைக்க ரூ.3.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர் நேற்று (14.11.2022) வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் சட்டமன்றப் பேரவையில் 7.1.2022 அன்று ஆற்றிய பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மட்டுமின்றி பழங்குடியினர் நலப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் நிறுவப்படும்.
அதற்கு தேவையான உட்கட்டமைப்புக்கு, கூடுதலாக நிதி ஒதுக்கித் தரப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, 87 ஆதிதிராவிடர் நல உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் 4 அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கு அறிவுத்திறன் வகுப்பறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூ.3,13,95,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.2,09,000 ஆக மொத்தம் ரூ.3,16,04,000 நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த அரசாணையின் மூலம் 9,790 மாணவ, மாணவியர்கள் பயனடைகின்றனர்.
புதிய வாக்காளர்கள்
7.10 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை,நவ.15- தமிழ்நாடு முழுவதும் வாக்குச் சாவடிகளில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (12,13-11-2022) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 7.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட் டுள்ளன. இதில், பெயர் சேர்க்க மட்டும் 4.44 லட்சம் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த நவ.9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நவ.9ஆம் தேதி தொடங்கி டிச.8ஆம் தேதி வரை திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பம் பெறப் படும். இந்த காலகட்டத்தில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் விவரங்கள் அளித்தல் போன்ற பணிகளை மேற் கொள்ளலாம்.
இந்நிலையில், பணிக்கு செல்வோர் வசதிக்காக, இந்த மாதத்தில் 4 நாட்கள் அதாவது, நவ.12, 13 மற்றும் 26, 27 ஆகிய சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்ட சிறப்பு முகாம், தமிழ்நாட்டில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டில் வசிக்கும் தமிழர் பெயர் சேர்க்க6ஏ, ஆதார் எண் இணைக்க 6 பி, பெயர் நீக்கத்துக்கு 7, தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவை பெறப் பட்டன. இதில் பெயர் சேர்க்க மட்டும் 4 லட்சத்து 44,019 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதுதவிர, பெயரை நீக்க 77,698 விண்ணப்பங்களும், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 1 லட்சத்து 30,614 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை இணைக்க 57,943 பேர் படிவம் அளித்துள்ளனர். வரும் நவ,26, 27ஆம் தேதிகளில் 2ஆம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சிறப்பு முகாம்கள் மட்டுமின்றி, வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் நேரடியாகவும், தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல், வாக்காளர் பதிவு செயலி மூலமும் வாக்காளர்கள் திருத்தம் மேற் கொள்ளலாம்.
முருகன், சாந்தன் உள்ளிட்ட நால்வர் முகாமில் இருந்து விடுவிக்கப்படுவர்
திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்
திருச்சி,நவ.15- திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரையும் இன்னும் 10 நாளில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார். மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக் குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தங்களை முகாமின் உள்பகுதியில் பிற வெளிநாட்டினருடன் தங்க வைக்க வேண்டும், நடைபயிற்சி செல்ல இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும், தனித்தனி கட்டில் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் செய்யப் போவதாக ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் நேற்று (14.11.2022) காலை அறிவித்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் அங்கு சென்று 4 பேரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது ஆட்சியர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்கள் காலை உணவைப் பெற்றுக் கொண்டனர்.
ஆட்சியர் மா.பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் தாங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்து வெளியில் நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர். விரைவில் அதற்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளிக்கப் பட்டுள்ளது. அவர்கள் கேட்ட பிற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை மீண்டும் அவர்களது நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதிக் கடிதம் பெற 10 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கிறோம். 4 பேரில் ஒருவர் (முருகன்) மட்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை. அவர் மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கு இன்னும் 10 நாட்களுக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். எனவே, அவ ருக்கும் சேர்த்து, 10 நாளில் வெளிநாட்டுக்கு அனுப்பு வதற்கான அனுமதிக் கடிதத்தை பெற முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment