மின்சாரம்
கட்டடக் கலை மற்றும் பொறியியல் படிப்புகளில், அடுத்த கல்வியாண்டு முதல், "வாஸ்து சாஸ்திரம்" பாடத் திட்டத்தைக் கொண்டு வர கருநாடக அரசு திட்டமிட்டுள்ளது.
கருநாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது.
மத்திய பொதுப்பணி துறை அகாடமி, கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், தோட்டக்கலை வல்லுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வாஸ்து சாஸ்திரம், அதன் தத்துவம், முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே இரண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளது.
மூன்றாவது முறையாக நவம்பர் 17ஆம் தேதி பெங்களூருவில் ஆன்லைனில் பயிற்சி வகுப்பை நடத்துகிறது.
மத்திய பொதுப்பணித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"வாஸ்து" நல்வாழ்வை உறுதிப்படுத்த நல்லது என்று கருதப்படுகிறது. பொறியாளர்கள் இதுவரை படித்து வரும் புத்தகங்கள், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. அவர்களுக்கு வாஸ்து மீது நம்பிக்கையில்லை.
இதுவரை பாடத்திட்டத்தில் இதைக் கொண்டு வரவில்லை. ஆனால், தற்போது அதிகரித்து வரும் தேவை கருதி, அடுத்த கல்வியாண்டில் இந்தப் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா கூறுகையில், "அடிப்படைப் பாடங்கள் கட்டாயமாக இருக்கும். மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வாஸ்து சாஸ்திரம் விருப்பப் பிரிவில் இருக்கும்.
இது பற்றித் தெரிந்து கொள்ள பல சிவில்
எஞ்சினியர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தப் பாடத் திட்டத்தைச் சேர்க்க, பொறியியல் கல்லூரிகளுக்கு நாங்கள் பரிந்துரைப்போம்" என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "இந்தியா மார்ச் பார் சயின்ஸ்" அமைப்பின் கருநாடகா பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பொதுப்பணித் துறையின் திட்டம் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த நூற்றாண்டில் பொறியியல் மற்றும் கட்டடக்கலை ஆகியவை தொழில்நுட்பத்தின் மேம்பட்ட அறிவின் அடிப்படையில் செழுமைப் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தவறான யோசனைகளை, இப்போது நம் பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் கற்றுக் கொண்டு செயல்படுத்த கேட்டுக் கொள்ளப்படுவது தவறானது" எனத் தெரிவித்துள்ளது.
வாஸ்துவில் கூட வருண பேதம் உண்டு, சூத்திரர்கள் வீடு கட்டினால் எந்த நிற மண்? "பிராமணர்கள்" வீடு கட்டினால் எந்த நிற மண்? அதுபோல வீடு கட்டும் மரங்களின் வகைகளில்கூட வருண பேதம் உண்டு.
"வாஸ்து" என்பது ஜோதிடம்தான். இதே கருநாடகத்தில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு மூடக்கூத்து அரங்கேறியது.
கருநாடக மாநிலம் உப்பள்ளி-தார்வார் மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிஜேபியைச் சேர்ந்த அரவிந்த் பெல்லத்; மாநிலத்தில் கருநாடக மாநில முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவை மாற்றிவிட்டு புதியவரை முதலமைச்சராக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருந்த நேரம்.
அப்போது அரவிந்த் பெல்லத்துக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் அவரிடம் சலுகைகள் பெற ஒரு வதந்தியைப் பரப்பி விட்டனர். இதை நம்பி அவரும் முதலமைச்சர் பதவிக்காக டில்லிக்குப் பலமுறை சென்று கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வந்தார். சில டில்லி பாஜக பிரமுகர்களுக்குக் கோடிக்கணக்கில் பணமும் தந்ததாக செய்திகள் வந்தன.
ஆனால், அவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்த நிலையில், அரவிந்த் பெல்லத் வீட்டின் அருகே இருந்த பொதுக்கிணறு மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து, கிணற்றைக் காணவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாகராஜ் கவுரி, தார்வார் புறநகர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால், காவல்துறை வழக்கை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள பொதுக்கிணறு உங்களுக்கு வரும் நல்லவைகளை விழுங்கி விடுகிறது. ஆகவே, அந்தக் கிணற்றை மூடிவிட்டால் விரைவில் உங்களுக்கு முதலமைச்சர் பதவி வந்து சேரும் என்று ஜோதிடன் கூறியதை நம்பிய சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கிணற்றை மண்போட்டு மூடி தரையாக்கிவிட்டார் - அரவிந்த் பெல்லத்.
இந்த மூடநம்பிக்கையால் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர்க் கிணற்றையே மூடிய சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக லோக் அயுக்தாவில் புகார் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டி ஜோதிடர் கூறியதற்காக பொதுக் கிணற்றையே பாஜக சட்டமன்ற உறுப்பினர் மண் போட்டு மூடிய நிகழ்வு கருநாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எடியூரப்பா முதல் அமைச்சராய் இருந்தபோது என்ன செய்தார் தெரியுமா? ஜோதிடர் பேச்சைக் கேட்டு அம்மணமாகப் படுத்துக் கிடந்த கேவலமும் நடந்ததுண்டு.
மும்பையில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில், விநாயகனுக்கு யானைத் தலையை சிவபெருமான் ஒட்ட வைத்தான். அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று பிரதமர் மோடி பேசவில்லையா?
அரசமைப்புச் சட்டத்தில் விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் பரப்ப வேண்டும் - அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஹிந்து வாலாக்கள் அடிக்கும் மூடத்தனக் கூத்துக்கோ அளவேயில்லை - வெட்கக்கேடு!
No comments:
Post a Comment