கோவை, நவ.1 தகவல்களை விரைவாக சேகரிக்க ஏதுவாக, கோவை மாநகர காவல்துறையின், சிறப்பு நுண்ணறிவுப் பிரிவை மேம்படுத்துவதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பப்பட உள்ளது.
கோவை மாநகர காவல்துறையில் உள்ள முக்கியப் பிரிவுகளில் எஸ்.அய்.சி எனப்படும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு முக்கியமான தாகும். இப்பிரிவில் உதவி ஆணையர் தலைமையில், 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், 8 காவலர்கள் என மொத்தம் 15 பேர் உள்ளனர். மாநகர காவல் நிலையங்கள் வாரியாக எஸ்.அய்.சி காவலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதி யில் நடக்கும் இரு மதம், இரு பிரிவினரிடையே நடக்கும் விவகாரங்களை கண்காணித்து காவல் ஆணையரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வர். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி கோவையில் கார் வெடிப்பு நிகழ்வையும், கைதான நபர்களின் நடவடிக்கைகளையும் முன்னரே சேகரித்து உரிய முறையில் எச்சரிக்கை செய்ய உளவுத் துறை தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து எஸ்.அய்.சி பிரிவுக்கு கூடுதல் காவலர்களை நியமித்து, அப்பிரிவை மேம்படுத்த மாநகர காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் கூறும்போது, ‘‘எஸ்.அய்.சி பிரிவு மேம்படுத் தப்பட உள்ளது. அதாவது, ஒரு உதவி ஆணையர் தலைமையில், கோவை மாநகர் வடக்கு மாவட்டத்துக்கு ஒருவர், தெற்கு மாவட்டத்துக்கு ஒருவர், நிர்வாகப் பணிக்கு ஒருவர் என 3 காவல் ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், ஒரு காவல் நிலையத்துக்கு 2 காவலர்கள் என 30 காவலர்கள் என்ற நிலையில் மேம்படுத்தப்பட உள்ளது.
பழைய நிலையை ஒப்பிடும் போது, தற்போது ஒரு ஆய்வாளர், 22 காவலர்கள் என மொத்தம் 23 பேர் கூடுதலாக இப்பிரிவில் இணைக்கப்பட உள்ளனர். இதற்கான கருத்துரு தயாராகிவருகிறது’’ என்றார்.
No comments:
Post a Comment