என் வளர்ச்சியில் பெரியார் மணியம்மை கல்லூரி நூலகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

என் வளர்ச்சியில் பெரியார் மணியம்மை கல்லூரி நூலகம்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நெகிழ்ச்சியுரை

மயிலாடுதுறையில் புத்தகத்திருவிழா  மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா  தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சி தொடங்கும் முன் புத்தக அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவன அரங்கிற்கு வருகை தந்த போது மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், ஒன்றிய தலைவர் இளங்கோவன், நகர தலைவர் சீனி.முத்து, அருள்தாஸ் ஆகியோர் வரவேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் லலிதா, தான் பெரியார் மணியம்மை கல்லூரியில் படித்தவர் என்றும் தலைவர் ஆசிரியர் வீரமணி எனக்கு பல புத்தகங்களை வழங்கியிருக்கிறார் என்றும் தனது கல்லூரி நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

பின்னர் அவர் தொடக்க விழா நிகழ்வில் ஆற்றிய உரை வருமாறு:

வாசிப்பு வழக்கம் என்பது பொழுது போக்காக மட்டும் இல்லாமல், வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் மாற வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர்களுக்கு பல்வேறு கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அவற்றையெல்லாம் மீறி நமது மனதை ஒருநிலைப் படுத்த புத்தக வாசிப்பு மிகவும் அவசியம்.

புத்தக வாசிப்பின் மூலம் தான் நம் அறிவு வளரும். நமது பார்வை விசாலமாகும். நம் மனது உறுதிப்படும். இவற்றை யெல்லாம் விட நம் வாழ்வின் குறிக்கோள் நமக்கு புலப்படும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் நமது தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் மாவட்டந் தோறும் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்.

பெரிய பெரிய மாவட்டங்களில், முக்கிய நகரங்களில் மட்டுமே நடைபெற்றுவந்த இந்தப் புத்தகத் திருவிழாவை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு அனைத்து மாவட்டங்களிலும் இந்த புத்தகச் சந்தையை நடத்த வேண்டும் என முதல மைச்சர் ஆணையிட்டுள்ளது அந்த அடிப்படையில்தான்.

தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இப்போது புத்தகச்சந்தை நடைபெற்று வருகிறது. மதுரையைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் இன்று புத்தகத் திருவிழா தொடங்கப்படுகிறது. நமது முதலமைச்சருக்கு இந்த நேரத்தில் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மயிலாடுதுறை மாவட்டம் வரலாற்று ரீதியாகவே ஒரு சிறந்த மாவட்டம். பல்வேறு எழுத்தாளர்களுக்கு இந்த மாவட்டம் பூர்வீக மாவட்டமாக இருக்கிறது. கம்பன், சீகன் பால்கு போன்றவர்களெல்லாம் இந்த மாவட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி தொடங்கும் முன்னால், நாங்கள் கண்காட்சியை சுற்றிப் பார்த்தோம். எல்.கே.ஜி. முதல் அனைத்து வயதினரும் விரும்பிப் படிக்கக் கூடிய பல்வேறு புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங் களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் ஆறாம், ஏழாம் வகுப்புகளில் படிக்கும்போது எனக்கு ஆங் கிலத்தில் சரியாக பேச வராது. அப்போது எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு சிறிய நூலகம் இருந்தது. அங்கு சென்ற பிறகுதான் எனக்கு புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நம்முடைய தாய்மொழி தமிழ் என்பதால் பள்ளிக் கூடத்திலோ  வீட்டிலோ ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. முழுக்க முழுக்க புத்தகங்களை வாசிப்பதன் மூலம்தான் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். ஆங்கிலம் கற்றுக் கொண்டால்தான் நாம் பல பகுதிகளிலும் பல்வேறு பட்டவர்களிடமும் தொடர்பு கொள்ள முடியும். அப்படி ஆங்கில அறிவு நமக்கு இல் லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.

நான் குறிப்பிட்டு ஒன்றை இங்கே சொல்ல விரும்பு கிறேன். நான் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரியில்தான் பயின்றேன். அப்போது எங்கள் கல்லூரி முதல்வராக இருந்தவர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் அவர்கள். அண்மையில் கரோனா தொற்றில் மறைந்து விட்டார். அவர் அடிக்கடி சொல்லுவார். எனக்கும் கல்லூரிக் காலம் வரை ஆங்கிலத்தில் பேச தெரியாது. புத்தகங்களை படித்துத்தான் எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன் என்பார்.

பெரியார் மணியம்மை கல்லூரியில் நூலகத்திற்கென்றே தனியாக ஒரு பெரிய கட்டடம் இருக்கும். பொதுவாக கல்லூரிகளில் நூலகத்திற்கென்று ஓர் அறைதான் ஒதுக்கப் பட்டிருக்கும். அங்கே நூலகத்திற்கென ஒரு தனி கட்டடமே வைத்திருப்பார்கள். எனது கல்லூரி நாட்களில் தொடர்ந்து அந்த நூலகத்திற்கு செல்வேன். அதன் மூலம் எனக்கு ஒரு விசாலப் பார்வை கிடைத்தது. என்னை நான் வளர்த்துக் கொண்டேன்.

வாசிப்பு அனைவருக்கும் முக்கியம்.அதையெல்லாம் கவனத்தில்கொண்டுதான் நமது முதலமைச்சர் நூலகங் களையெல்லாம் சீர்படுத்தி சிறப்பாக செயல்பட முயற்சி எடுத்து வருகிறார். இந்த நிகழ்வில் பங்கெடுத்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள் நிறைய புத்தகங்களை வாங்கிச்சென்று  தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும்  நூலகங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.

இந்த புத்தகக் கண்காட்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கோட்டாட்சி யர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment