ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: குஜராத் தேர்தலில் “நான் பழங்குடி இனத்தவரை குடியரசுத்தலைவராக நியமித்தேன்” என்று குடியரசுத் தலைவரை ஜாதி வாக்குவாங்கியாக பயன்படுத்துகிறாரே பிரதமர்?

 - கி.மாசிலாமணி, மதுராந்தகம்

பதில் 1: அக்கட்சி - ஆர்.எஸ்.எஸ். - பிரதமர் மோடி  போன்றோர் குடியரசுத் தலைவராக பழங்குடி இனத்தவரை - திரவுபதி முர்மு அவர்களை எதற்காக நியமித்தார்கள் என்பது பச்சையாக இப்போது புரிகிறதா? சமூக நீதிக்காக அல்ல; வாக்கு வங்கி - தேர்தல் பிரச்சார மூலதனமாக அதனைப் பயன்படுத்தலாம் என்ற உள் நோக்கத்தோடுதானே!

கேள்வி 2: தொடர்ந்து பெரும் அய்.டி. நிறுவனங்கள் பணியாட்களை பெருமளவில் குறைத்துவரும் நிலையில், இதனால் ஏற்படும் பாதிப்பை வேலையிழந்தவர்கள் எப்படி ஈடு செய்வார்கள்?

- ஆ.சிவசுப்பிரமணியன், அம்பத்தூர்

பதில் 2: புதிய வேலை வாய்ப்புகள் வேகமாக உருவாகாததோடு - பழைய வேலைகளும் இழப்பானால் - இதற்குப் பெயர்தான் ‘சப்கா சாத்’, ‘சப்கா விகாஸ்’ போலும்! மகா வெட்கக்கேடு! 

கேள்வி 3: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது எல்லா கோயில்களிலும் நடந்தேறியுள்ளதா?

- திவ்யபாரதி, சென்னை

பதில் 3: முதல் கட்டத்திற்கே பார்ப்பன முட்டுக்கட்டை - சில நீதிபதிகளுடன் - அரங்கேற்றும் படலமே இன்னும் முடியவில்லை; அரசு தயாராக இருப்பினும் இப்படிப்பட்ட இடையூறுகளைத் தாண்ட வேண்டியுள்ளது.

கேள்வி 4: சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை ஏன் பிற மதங்களுக்கும் விரிவுபடுத்தக் கூடாது?

- முத்துலட்சுமி, பெரம்பூர்

பதில் 4: சுயமரியாதைத் திருமணம் என்பதன் தத்துவம் முதலில் பெரும்பாலோனோர் - ஏற்கெனவே ஜாதியால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிறைவேற்றப் படட்டும். மற்றவை பற்றி பிறகு யோசிக்கலாம்!

கேள்வி 5: ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு அன்றே ஒப்புதல் அளித்த ஆளுநர் - அதன்படி தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் - காலங்கடத்தி மீண்டும் அதே மசோதாவிற்கு விளக்கம் கேட்டுள்ளது - ஏன்?

- இராமலிங்கம், பெரம்பூர்  

பதில் 5: டிலேயிங் டேக்டிக்ஸ் (Delaying Tactics) என்ற ஒருவகை முட்டுக்கட்டை. என்றாலும் தாமதிக்க முடியுமே தவிர,தடுக்க முடியாது!

கேள்வி 6: 2023இல் உலகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதைப் பற்றி தங்களின் கருத்து?

- மனோகரன், மடிப்பாக்கம்

பதில் 6: தவிர்க்க முடியாத பொருளாதார நெருக்கடிகளை உலகம் எதிர்கொண்டாலும் கூட  - மீள வழி அதற்குள் கிடைக்கவே செய்யும். நடுவில் இப்படிப்பட்ட ‘உற்பாதங்கள்’ தற்காலிகமே. அஞ்சிட வேண்டாம்!

கேள்வி 7:  ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கும் போதே ராஜஸ்தான் காங்கிரசிற்குள் குஸ்தி நடக்கிறதே! இதை உள்கட்சி விவகாரம் என்று கடந்து செல்லமுடியுமா?

- கோவேந்தன், திருவண்ணாமலை

பதில் 7: காங்கிரஸ் கட்சியின் பலம் மக்கள் ஆதரவு. காங்கிரஸ் கட்சியின் பலவீனம் தீராத கோஷ்டிப் பூசல். “பல்குழு பாழ் செய்யும் உட்பகை” - இவைதாமோ! 

கேள்வி 8: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பொறுப்பேற்பதற்கு 19 மாதங்களுக்கு முன்பே புதிய ரூ.500 நோட்டுகள் அவரது கையெழுத்துடன் அச்சிடப்பட்டுள்ளன என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக இப்போது தெரியவந்துள்ளதே?  

- ஆறுமுகம், திருச்சி

பதில் 8: பண மதிப்பு இழப்பு (Demonetisation) வழக்கில் இதுபற்றிய தகவலும் இணைக்கப்பட்டு வழக்கு மூலம் மக்களுக்கு உண்மையைப் புரிய வாய்ப்பு ஏற்படக்கூடுமே!

கேள்வி 9: தேர்தல் ஆணையர் கோயல் நியமனம் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதே? 

- ஏழுமலை, திருத்தணி

பதில் 9: 25.11.2022 - எனது அறிக்கையைப் படிக்கவும். அந்த முழு விவரங்களை பல நாளேடுகள் வெளியிட்டுள்ளன.அவற்றையும் படித்து முழுத் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

கேள்வி 10:  காவி அரசியல் சொல்லக்கூட கூசும் நிகழ்வுகளால் அசிங்கப்பட்டு நிற்கிறதே, இருப்பினும் அவர்கள் பொதுவெளியில் பேட்டி கொடுத்துக்கொண்டு வருகின்றனரே?

- மாரிமுத்து, வேலூர்

பதில் 10: `முழுக்க நனைந்தவருக்கு முக்காடு எதுக்கு?’ என்று ஒரு பழமொழி ஊரில் உண்டு. இன்று பா.ஜ.க. அலுவலகத்தில் முக்கிய பொறுப்பாளரின் சண்டையும், செல்போன் உரையாடலும் பழைய “செங்கான் கடை நடை” இடம் மாறி அமர்ந்துள்ளது என்பதையே உறுதியாகப் பறைசாற்றுகிறது போலும்!


No comments:

Post a Comment