இருளர் பழங்குடி மக்களின் முதல் வழக்குரைஞர்! பழங்குடிப் பெண் காளியம்மாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

இருளர் பழங்குடி மக்களின் முதல் வழக்குரைஞர்! பழங்குடிப் பெண் காளியம்மாள்

- மா.வினோத்குமார்

கடைக்கோடி மனிதர்களுக்கு கல்வியறிவு சரிவரக் கிடைக்கிறதா என்று பார்த்தால் அது இன்றும் பலருக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது என்பதற்கான உதாரணமாக இருக்கிறார் பழங்குடி பெண் காளியம்மாள். கோயம்புத்தூரில் உள்ளது காளியம்மாள் வசிக்கும் கோப்பனேரி கிராமம். தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த பழங்குடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் மிகக்குறைவு. தமிழ்நாட்டில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அரசு நடுநிலைப்பள்ளிகளும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உயர்நிலைப்பள்ளிகளும் அமைந்திருக்கிறது.

ஆனால் காளியம்மாள் உயர் நிலைப்பள்ளியில் பயிலுவதற்காக 10 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதற்கு செல்ல போதிய பேருந்து வசதி கிடையாது. மேலும் வீட்டிலும் பொருளாதார பிரச்சினைகள். இவை அனைத்தையும் தாண்டித்தான் தன் கனவினை சமூக ஆர்வலர்களின் உதவியோடு நிஜமாக்கியிருக்கிறார்.

காளியம்மாள் இப்போது ஒரு வழக்குரைஞர். கோவை மாவட்டத்தின் முதல் இருளர் பழங்குடி சமூகத்தின் வழக்குரைஞரும் இவரே. ‘‘என் வாழ்க்கை பல கஷ்டங்கள் நிறைஞ்சது. இங்குள்ள பழங்குடி கிராமத்தில் மக்களுக்கு அடிப்படை கல்வி வசதிகூட கிடையாது. எங்களின் நிலையை  பார்த்தால் தான் உங்களுக்கு தெரியும் - நீங்க எவ்வளவு சுகபோகமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்க’’ என்று தன் கதையை பகிர்கிறார்.

‘‘நான் இருளர் இனத்தை சேர்ந்த ஒரு பழங்குடி பெண். எங்க கிராமமான கோப்பனேரி கேரள மாநிலத்தோட எல்லையில் இருக்கிறது. எங்களுக்கு தேவையான பொருளோ அல்லது மருத்துவம் எதுவாக இருந்தாலும், கோவையில் உள்ள ஆனைக்கட்டி, காரமடை பகுதிகளுக்குதான் போக வேண்டும். எங்க ஊரிலும் பள்ளிக்கூடம் இருக்கு.

ஆனால், அய்ந்தாம் வகுப்பு வரைதான் அங்கு படிக்க முடியும். மேலும் படிக்க வேண்டும் என்றால் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் ஆனைக்கட்டியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்தான் போய் படிக்கணும். நானும் தினமும் அங்கு சென்றுதான் படிச்சேன். அதற்கு போதிய பேருந்து வசதி எல்லாம் கிடையாது. கேரள எல்லைக்கு போனாதான் பேருந்து. தினமும் எங்க கிராமத்தில் இருந்து கேரள எல்லைக்கு சென்றுதான் பள்ளிக்கு போவேன்.

அந்த சமயத்தில்தான் லட்சுமணன் சார் - எங்க ஊர் மக்கள் முன்னேற பாதைகளை அமைத்துக் கொடுத்தார். அதில் ஒன்னுதான் மகளிர் சுய உதவிக் குழு. அதில் எங்க கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு சுயதொழில் ஒன்றையும் சொல்லித் தந்தாங்க. பயிற்சி நடக்கும் போது நானும் அங்கு சென்று பார்ப்பேன். பயிற்சிக்கு இடையே எங்க இருளர் இனத்தின் வரலாறு குறித்தும் தெரிவிப்பாங்க. அப்படித்தான் எங்க இனத்து மக்கள் எவ்வளவு கஷ்டங்களை தாண்டி வந்திருக்காங்கன்னு புரிந்து  கொண்டேன்.

எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை லட்சுமணன் சார் சொன்னதால், அவர் என்ன வேலை செய்கிறார்ன்னு கேட்டேன். அதற்கு அவர் வழக்குரைஞர் என்றும் தற்போது பழங்குடி இன மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும் சொன்னார். அவர் சொன்ன அந்த வார்த்தை என் மனதில் ஆணி அடித்தால் போல் பதிந்தது. நானும் வழக்குரைஞர் படிப்பு படிச்சு என் இன மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அந்த பாதையை நோக்கி பயணிக்க முடிவு செய்தேன். ஆனால் இதற்கு எவ்வளவு கஷ்டப்படணும்னு அப்ப எனக்கு தெரியல. பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றேன். ஆனால் பிளஸ்1 வேற ஊருக்கு போய்தான் படிக்கணும். ஆனால் அது எப்படின்னு எனக்கு தெரியல. அப்ப எங்க ஊருக்கு அடிக்கடி மருத்துவ உதவிகள் செய்ய ஜெயலட்சுமி செவிலியர் அக்கா வருவாங்க. அவங்ககிட்ட என் விருப்பத்தை தெரிவித்தேன். உடனே அவங்க, ‘உனக்கு படிக்க புக்ஸ் நோட்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்து, பள்ளிக்கூடத்திலேயும் சேர்த்து விட்டா படிப்பியா’ன்னு கேட்டாங்க. உடனே நான் தயங்காமல், நீங்க சேர்த்து விட்டா போதும் - நான் படிச்சிடுவேன்னு சொன்னேன்.

அவங்களும் ஊர்ல இருந்து 17 கி.மீ. தொலைவில் இருக்குற சீளியூர் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடத்துல அவங்க சொந்த செலவில் என்னை 11ஆம் வகுப்பில் சேர்த்து விட்டாங்க. எனக்கு படிப்பிற்குண்டான எல்லா செலவும் அவங்க பார்த்துக்கிட்டாங்க. அவங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என்னை பள்ளியில் பார்க்க வருவாங்க. அவங்க வருவதைப் பார்த்து என் பள்ளி தலைமை ஆசிரியர் என்ன என்று விசாரிக்க... நான் அவங்கதான் எனக்கு படிக்க உதவுவதாக சொன்னதும், உடனே என் பள்ளி தலைமை ஆசிரியரும் என் படிப்பிற்கு உதவி செய்வதாக சொன்னார். எனக்கு பாடப் புத்தகங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.

இப்படி என் கனவுகளை நோக்கி ஆதரவுக் கரங்களோட கைகோர்த்து நடக்கும் போது தான் ஒரு நாள் எனக்கு வலிப்பு வந்து மயங்கி விழுந்துட்டேன்’’ என்றவர் துவளாமல் பிளஸ்2 வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளார். ‘‘பிளஸ்2 முடிச்சதும் மேற்கொண்டு கல்லூரியில் படிக்க கோயம்புத்தூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பொருளாதார துறைக்கும், அரசு சட்டக் கல்லூரிக்கும் விண்ணப்பித்தேன். சட்டக் கல்லூரியில் சேர கவுன்சிலிங்கிற்காக சென்னைக்கு போகணும். ஆனால் அதற்கான அழைப்பு கடிதம் `கவுன்சிலிங்’ நடக்கும் தேதிக்கு முந்தைய நாள் தான் எனக்கு கிடைச்சது. மேலும் சென்னைக்கு எப்படி போகணும்னு தெரியாது, அழைத்து செல்லவும் யாரும் இல்லை.

அதனால் என்னால் போக முடியல. மனசுக்கு வருத்தமா இருந்தாலும், அவ்வளவு தான்னு விட்டுட்டேன். அந்த சமயத்தில் எங்க ஊர் மக்களைப் பற்றி தனியார் `ரேடியோ சேனலில்’ டைரி என்ற தலைப்பில் பேட்டி எடுத்தாங்க. அப்ப என்னால் மட்டுமில்லை எங்க கிராமத்தில் உள்ள பலரால் மேற்கொண்டு படிக்க வசதியில்லைன்னு நான் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தேன்.

அந்த பேட்டியை கேட்ட அப்துல்கலாம் அய்யாவுடைய நண்பர் சம்பத்குமார், அவினாசி லிங்கம் கல்லூரியை சேர்ந்த ஜெ.எஸ்.எஸ் சார், வனத்துறையை சேர்ந்த அன்வருதீன் சார் மூவரும் எங்க  ஊரைச் சேர்ந்த 18 பேரை கல்லூரியில் சேர்த்து இலவசமாக படிக்க வைத்தனர். நான் அரசு கல்லூரியில் விண்ணப்பித்திருந்ததால், நான் அங்கு சேர்ந்தேன்.

கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சது போக, மாலை நேரங்களில் வேலைக்கு சென்று வந்தேன். இது குறித்து தெரிந்து கொண்ட `வீட்டோ’ அமைப்பினர், எங்க ஊர் குழந்தைகளுக்கு மாலை வகுப்புகள் எடுத்தால், அதற்கான ஊதியமும் தருவதாக சொன்னாங்க. நானும் டியூசன் எடுத்தேன். கல்லூரி படிப்பை முடிச்சதும், என்னோட கனவான வழக்குரைஞர் படிப்பிற்கு விண்ணப்பித்தேன். அழைப்பு வந்தது. சென்னைக்கு போகணும். அண்ணன், மாமா, நான் என மூவரும் கிளம்பினோம். சென்னையில் எங்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது என்று தெரியாமல், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு போயிட்டோம். அங்க இருந்த ஒரு வழக்குரைஞர் அண்ணா தான் கவுன்சிலிங் நடக்கும் சட்டக்கல்லூரிக்கு எங்களை அனுப்பி வச்சார்.

மதுரையில் உள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். நான் கண்ட கனவு பலிக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் இருந்த போது மற்றொரு இடி விழுந்தது. என் அப்பாவிற்கு கை கால் செயல்படாமல் போனதால், அவரை கோவை அரசு மருத்துவமனையில சிகிச்சைக்காக சேர்த்தோம். நான் காலை மதுரையில் கல்லூரிக்கு போயிட்டு மாலை அப்பாவை மருத்துவமனையில் பார்க்க வந்திடுவேன். இப்படியே இரண்டு வருஷம் போச்சு. ரொம்ப கஷ்டப்பட்டுதான் படிச்சேன்.

ஒரு கட்டத்தில் படிப்பை பாதியிலேயே விட்டுடலாமான்னு தோணும். ஆனால் எனக்கான படிப்பு செலவு அப்பாவின் மருத்துவ செலவு என எல்லா உதவியும் செய்து தூக்கி விட்டவர்களின் நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பல. இருந்தாலும் வீட்டுச் செலவுக்காக விடுமுறை நாட்களில் ஒரு நாள் ரூ.250 என தோட்டத்து வேலைக்கு போவேன். அந்த வேலைக்கு போயிட்டு வந்தால் கை வலி அப்படி இருக்கும். சுடு தண்ணியில ஒத்தடம் வச்சாதான் தூங்க முடியும்.

ஒரு கட்டத்தில் மதுரை, கோவை என்று அலைய முடியல, அதனால கோவை சட்டக்கல்லூரிக்கு மாறி வந்துட்டேன். அப்படியும் வீட்டுச் சூழலால், என்னால் கல்லூரிக்கும் போக முடியல, படிக்கவும் முடியல, தேர்வும் எழுதல. அந்த சமயத்தில் தான் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர் மகேஸ்வரன் நாச்சிமுத்து சாரின் அறிமுகம் கிடைச்சது. என் நிலமையை புரிந்து கொண்டு மறுபடியும் சட்டக்கல்லூரியில் படிக்க அனுமதி வாங்கிக் கொடுத்தார். அப்பாவின் சிகிச்சையையும் அவரே பார்த்துக் கொண்டார்.

அப்பாவும் குணமாகிவிட்டார். என்னுடைய வழக்குரைஞர் கனவும் நினைவேறியது. ஒவ்வொரு முறை நான் கருப்பு ‘கோட்’ அணியும் போதும், எனக்கான உதவி செய்தவர்களுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன். நான் இந்த இடத்திற்கு தனியா வரல, என் விரல் பிடிச்சு தூக்கி விட்டு என்னோட கனவை நோக்கி கூடவே பயணிச்சவங்களால தான் இது எல்லாமே சாத்தியம்’’ என்றார் காளியம்மாள்.

No comments:

Post a Comment