முதல் உலகப் போர் முடிவு பெற்ற பின்னர்... (உயிர் சேதங்களின் பட்டியல்) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

முதல் உலகப் போர் முடிவு பெற்ற பின்னர்... (உயிர் சேதங்களின் பட்டியல்)

1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினொன்றாம் தேதி, ஜெர்மன் - ஏகாதிபத்தியத்தின் குற்றம் நிறைந்த கர்வமானது இங்கேதான் அழிந்தது. எந்த சுதந்திர மக்களை அஃது அடிமையாக்கப் பார்த்ததோ அவர்களாலேயே அது ஒடுக்கப் பெற்றது.”

நேசக் கட்சியினர் தங்களுடைய வெற்றியை இந்த விதமாகவே நிலைநிறுத்திக் களித்தனர். தாங்கள் அடைந்த வெற்றியைக் காட்டிலும் ஜெர்மானியர்கள் பணிந்ததுதான் இவர்களுக்கு முக்கியமாயிருந்தது. மேற்படி ஞாபகச் சின்னத்திலேயே இது விளங்குகிறதல்லவா?

இந்த யுத்தம் எதற்காக ஏற்பட்டது? மறுபடியும் யுத்தம் வராமலிருக்க! உலகத்திலே ஜனநாயக தத்துவம் நிலை நிற்க! சிறிய நாடுகளின் சுய நிர்ணய உரிமையைக் காப்பாற்ற! இத்தகைய சொல்லடுக்குகள் ராஜதந்திரிகளின் வாயிலிருந்து கிளம்பிய வண்ண மாயிருந்தன!!

இந்த யுத்தம் என்கிற யாகத் தீயிலே, அந்தோ! எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப் பெற்றன! ஆழம் அறியாத இந்தத் தீக் குழியிலே எவ்வளவு ரூபாய்கள் காணிக்கை செலுத்தப் பெற்றன! எவ்வளவு மணி மகுடங்கள் இதிலே விழுந்து கருகிப் போயின! கோரம் கோரம்!!

இந்த யுத்தத்தினால் உண்டான சேதங்களை இன்னும் எவரும் திட்டமாகக் கணித்துக் கூறவில்லை. ஒரு கணக்கு பின்வருமாறு கூறுகிறது:

இறந்து போன சோல்ஜர்கள்

கணக்கில் வந்தது - 10,000,000 பேர் 

கணக்கில் வராதது - 3,000,000 பேர்

இறந்து போன சாதாரண மக்கள் - 13,000,000 பேர்

காயமடைந்தவர்கள் - 20,000,000 பேர்

கைதியானவர்கள் - 3,000,000 பேர்

நாதியற்றுப் போன குழந்தைகள் - 9,000,000 பேர்

கைம்மை யடைந்த பெண்கள் - 5,000,000 பேர்

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் - 10,000,000 பேர்

---------------

மொத்தம் = 73,000,000 பேர்

---------------

செலவழிக்கப் பெற்ற தொகை எவ்வளவு?

ஓர் அமெரிக்கக் கணக்குப்படி:

நேசக் கட்சியாருக்குச் செலவழிந்தது ரூ. 614,994,000,000

ஜெர்மனிக்குச் செலவழிந்தது ரூ. 226,834,500,000

------------------

மொத்தம் ரூ. 841,828,500,000

------------------

உலகத்தின் மொத்த மக்கள் தொகை, யுத்தம் நடைபெற்ற காலத்தில் சுமார் 180 கோடி என்று வைத்துக்கொண்டால், உலகத்திலே தோன்றிய ஒவ்வொரு மனிதனும் இந்த அய்ரோப்பிய யுத்தத்திற்காக சராசரி 425 ரூபாய் வீதம் கொடுத்திருக்கிறான்!

“யுத்தத்தினால் என்ன நன்மை விளைந்தது என்று சொல்ல முடியாது; ஆனால் பெரிய வெற்றி யுண்டாயிற்று" என்று ஒரு கவிஞன் கூறினான். அந்தக் கூற்று இந்த யுத்தத்திற்கு நேசக் கட்சியாரைப் பொறுத்த மட்டில் - முற்றிலும் பொருந்துமல்லவா?

இரண்டு சக்கரவர்த்திகள் சிங்காதனத்திலிருந்து இழிந்து ஓடிவிட்டார்கள். இரண்டு ஜார்கள் மண்ணிலே ஜீரணமாகி விட்டார்கள். ஆறு அரசர்கள் முடிதுறந்து மறைந்து போனார்கள். அரச குடும்பங்களின் ஆடம்பர நிழலிலே வாழ்ந்து வந்த எண்ணிறந்த பேர், தனிமையிலே, வேதாந்த விசாரத்திலே, பிற நாட்டார் கருணையிலே அடைக்கலம் புகுந்து கொண்டார்கள் இதுதான் யுத்தத்தின் அய்ந்தொகை!

(வெ.சாமிநாத சர்மா எழுதிய "ஹிட்லர்" என்ற நூலிலிருந்து...)

No comments:

Post a Comment