குடிநீர்த் தொட்டியில் பசு மூத்திரம் தெளித்த அவலம்
சம்மராஜநகர்,நவ.21- கருநாடகாவில் சம்மராஜநகர் மாவட்டத்தில் பொது நீர்த்தொட்டி ஒன்றிலிருந்து தாழ்த்தப்பட்ட சமூக பெண் ஒருவர் தண்ணீர் அருந்தியதால் அந்தத் தொட்டியிலிருந்த மொத்த தண்ணீரையும் வெளியேற்றிவிட்டு தொட்டியில் பசு மூத்திரம் தெளித்த அவலம் நடந்துள்ளது.
சம்மராஜநகர் ஹக்கோடோரா கிராமத்தில் கடந்த 19.11.2022 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் லிங்காயத் ஜாதியினர் அதிகம் வசிக்கின்றனர். அச்சமூகத்தின ரின் பயன்பாட்டிற்காக உள்ள அந்த நீர்த்தொட்டியிலிருந்து பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் தண்ணீர் அருந்தியுள்ளார். இதனையடுத்து அந்தத்தொட்டியின் நீர் வீணாக வெளியேற்றப் பட்டுள்ளது. இது குறித்த காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலான நிலையில், வட்டாட்சியர், சமூக நலத்துறை அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு சென்று, அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது உள்ளூர்க்காரர் ஒருவர், கடந்த 18.11.2022 அன்று கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்காக அருகிலுள்ள ஹெச்டி கோட்டே பகுதியிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். அவர் பேருந்துக்காக நின்றிருந்த போது ஊர் பொது தொட்டியிலிருந்து தண்ணீர் அருந்திவிட்டு பேருந்தில் ஏறினார். அதனைப் பார்த்த ஊர் மக்கள் தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு அதை சுத்தம் செய்வதாகக் கூறி பசு மூத்திரம் ஊற்றினர் என்றார். விசாரணையை முடித்த வருவாய்த்துறை ஆய்வாளரும், கிராம கணக்காளரும் அறிக்கையை வட்டாட்சியரிடம் அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment