சென்னை,நவ.4- "தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப் படும் சட்ட மசோதாக்களை அனுப்பி வைக்காமல், கிடப்பில் போட்டு வைத்துள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிறார்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திடுவதற்காக மதிமுக பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வைகோ இன்று அண்ணா அறிவாலயம் வந்தார். தீர்மானத்தில் கையெழுத்திட்ட பின்னர் அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என்.ரவி, அரசியல் சாசனத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கு அதிகாரம் கிடையாது.
சட்ட மசோதாக்களை அனுப்பாமல், கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜகவின் ஊது குழலைப் போல செயல்படுகிறார். எனவே இவர் தமிழ் நாட்டின் ஆளுநராக நீடிப்பதற்கு தார்மீக உரிமையற்றவராகி விடுகிறார்.
எனவே இவரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும். இதற்காகத்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு நாங்கள் கோரிக்கை மனு அனுப்புகிறோம்" என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment