கியான்வாபி மசூதியில் லிங்கம் சர்ச்சை தொல்பொருள் ஆய்வுத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்ற உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

கியான்வாபி மசூதியில் லிங்கம் சர்ச்சை தொல்பொருள் ஆய்வுத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்ற உத்தரவு

பிரயாக்ராஜ்,நவ.7- கார்பன் டேட்டிங் அல்லது இதர அறிவியல் பூர்வமான ஆய்வு முறைகள், கியான்வாபி வளாகத்தின் ஒசுகானாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங் கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தொல் பொருள் ஆய்வுத்துறை தலைமை இயக் குநருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதிக்குள் உள்ள சிங்கார கவுரி அம்மன் உட்பட இதர தெய்வங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் 5 பெண்கள் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்யவும், காட்சிப்பதிவு எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கியான்வாபி மசூதியின் நிர்வாக குழுவான ஏஅய்எம் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் மனுதாரர்களில் 4 பேர், கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் கை, கால்கள் கழுவும் இடமான ஒசுகானாவில் கடந்த மே மாதம் 16ஆம்தேதி கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத் தின் காலத்தை கண்டறிய தொல்பொருள் ஆய்வுத்துறை நிபுணர்களை நியமிக்க வேண்டும் என கூறியது. இந்த கோரிக் கையை வாரணாசி மாவட்ட நீதிபதி நிராகரித்தார். இதை எதிர்த்து மனுதாரர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், கார்பன் டேட்டிங் அல்லது நிலத்துக்குள் ஊடுருவி ஆராயும் ரேடார் ஆய்வு முறைகளால், கியான்வாபி மசூதியின் ஒசுகானாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து இந்த வழக்கில் அடுத்த விசாரணை தேதியான 21ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்என உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment