சென்னை, நவ.23 மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது,
2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சேர்ந்த அனைத்து இளநிலை மாணவர்களும் ஹிந்தித் தேர்வுக்கு பதிவு செய்து கொள்ள வேண்டுமென கடந்த நவம்பர் 11 அன்று டில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதும் முறை இருந்து வந்தது. தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுதும் நிலை உருவாகியுள்ளது.
டில்லி பல்கலைக்கழகம் ஒன்றிய அரசின் நிதி மூலம் இயங்கி வருகிறது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாண வர்கள் இங்கு பயின்று வருகின்றனர். பல்வேறு பன்முக கலாச்சாரமும் மொழிகளையும் கொண்ட இந்திய நாட்டில் பட்டம் பெறுவதற்கு ஹிந்தி தேர்வு கட்டாயம் எனக் கூறுவது பிராந்திய மொழி பேசும் மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
எனவே மீண்டும் ஆங்கில வழி தேர்வைத் கொண்டுவர ஒன்றிய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் ஒன்றிய அரசு விழா எடுக்கிறது. மற்றொரு பக்கம் பல்கலைக்கழகங்களில் ஹிந்தியைத் திணிக்கிறது. ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை இது போன்ற அறிவிப்புகள் அம்பலப்படுத்துகின்றன.
அனைத்து மொழி பேசும் மாநிலங்களின் மாணவர் கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment